Published:Updated:

`காதலன் விஷம் கொடுத்தாரா?’ - கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் பெற்றோர்

மரணமடைந்த கல்லூரி மாணவி அபிதா

"என் மகளைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என அழைத்த அந்த வாலிபர், என் மகளுக்கு விஷம் கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர்தான் கடந்த 1-ம் தேதி மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது" என்கிறார் அபிதாவின் தாய்.

`காதலன் விஷம் கொடுத்தாரா?’ - கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் பெற்றோர்

"என் மகளைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என அழைத்த அந்த வாலிபர், என் மகளுக்கு விஷம் கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர்தான் கடந்த 1-ம் தேதி மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது" என்கிறார் அபிதாவின் தாய்.

Published:Updated:
மரணமடைந்த கல்லூரி மாணவி அபிதா

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே வாவறை பகுதியைச் சேர்ந்த சின்னப்பர் (56), தங்கபாய் (51) தம்பதியருக்கு மூன்று மகள்கள். இரண்டு மகள்களைத் திருமணம் செய்துகொடுத்த நிலையில் மூன்றாவது மகள் அபிதா (19) களியக்காவிளை பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்திருக்கிறார். அபிதா பள்ளியில் படித்த சமயத்திலேயே நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 19-வயதுடைய வாலிபரைக் காதலித்துவந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகச் சுற்றியுள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபரின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அபிதா, வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி காலை அபிதாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவரின் பெற்றோர் மாணவியை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். மூன்று நாள்கள் அங்கு சிகிச்சை பெற்றும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து 4-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணவி கடந்த 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

அபிதா
அபிதா

இந்த நிலையில் மாணவி அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், `என் மகள் அபிதாவைக் காதலித்த வாலிபர் என் மகளுடன் பலமுறை தனியாக இருந்திருக்கிறார். இதற்கிடையே அவரின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணம் செய்ய முடியாது எனப் பிரச்னை செய்தனர். இந்த நிலையில் கடந்த 07.09.2022 அன்று என் மகளைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என அழைத்த அந்த வாலிபர், என் மகளுக்கு விஷம் கொடுத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர்தான் கடந்த 1-ம் தேதி மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. அவளை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்துவிட்டாள். என் மகள் இறந்தற்கு அந்த வாலிபர்தான் காரணம் எனச் சந்தேகம் இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

அபிதாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. அதன் பின்னர்தான் அவர் இறந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். "அபிதாவும் நித்திரவிளை வாலிபரும் காதலித்தது உண்மைதான். ஆனால், அபிதாவுக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அபிதா மருத்துவமனையில் இருக்கும்போது அந்த வாலிபருடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் எங்களிடம் கிடைத்துள்ளன. அதில் அவருக்கு மஞ்சள்காமாலை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாகப் பேசுவதும் பதிவாகியிருக்கிறது. இருபினும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு முழுமையான விசாரணை நடத்தவிருக்கிறோம்" என்றனர்.