Published:Updated:

`கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட கிருமி நாசினி, மாஸ்க்!’ - ஸ்பாட் விசிட்டில் சீல் வைத்த ஆட்சியர்

மருந்துக் கடைக்குச் சீல்
மருந்துக் கடைக்குச் சீல்

சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், உடனடியாக அந்தக்கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், அதிகாரிகள் அந்த மருந்துக் கடைக்குச் சீல் வைத்தனர்.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடுகளை அந்தந்த நாடுகள் செய்து வருகின்றன. கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேவைகள் அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் இவற்றிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருந்துக் கடைக்குச் சீல்
மருந்துக் கடைக்குச் சீல்

குறிப்பாக, பல இடங்களில் மாஸ்க்குகள் அறவே கிடைக்கவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் மருந்துக்கடைகள் மாஸ்க், மற்றும் கிருமி நாசினிகளைப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். குறிப்பாகப் புதுக்கோட்டையில் உள்ள மருந்தக் கடைகளில் பல மடங்கு கூடுதல் விலைக்கு மாஸ்க்குகள் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் சென்றது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது கீழ ராஜ வீதியில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் மாஸ்க்குகள் மற்றும் கைகழுவும் திரவங்கள் பல மடங்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருந்துக் கடைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், உடனடியாக அந்தக்கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், அதிகாரிகள் அந்த மருந்துக் கடைக்குச் சீல் வைத்தனர்.

மருந்துக் கடைக்குச் சீல்
மருந்துக் கடைக்குச் சீல்

தொடர்ந்து இதுபற்றி பேசிய மாவட்ட ஆட்சியர், "தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள பெரும் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை உடனடியாக மூட உத்தரவிட்டோம். அதன்படி அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பணியாற்றும் `100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் போதுமான இடைவெளி விட்டு பணியாற்றவும் போதிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளோம். மாவட்டத்தில் இதேபோல், கூடுதல் விலைக்கு மாஸ்க்குகள் கிருமி நாசினிகள் விற்கப்படுவது தெரிந்தால், உடனடி நடவடிக்கை இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு