Published:Updated:

`ஊரடங்கால் சுதந்திரமாக வலம் வந்த குற்றவாளிகள்!' - தற்காலிக சிறையின் மூலம் அதிர்ச்சி கொடுத்த புதுவை

சிறை
சிறை

விசாரணைக் கைதிகளை தனிமைப்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்காக, புதுச்சேரியில் இருக்கும் அரசுக்கல்லூரியை தற்காலிக சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது மாநில நிர்வாகம்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் 23-ம் தேதியிலிருந்து மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்காலிக சிறையாக மாற்றப்பட இருக்கும் அரசுக்கல்லூரி வளாகம்
தற்காலிக சிறையாக மாற்றப்பட இருக்கும் அரசுக்கல்லூரி வளாகம்

அதற்கு முன்னரே புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளைத் தவிர்த்து, 89 விசாரணைக் கைதிகளை விடுவித்தது சிறைத்துறை. அதையடுத்து, கடந்த ஒரு மாதமாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்படுவர்களை, காவல் நிலையத்தின் ஜாமீனிலேயே விடுவித்து வருகிறது புதுச்சேரி போலீஸ்.

அதனால் கைது செய்யப்பட்டும் சிறைக்குச் செல்லாமல் சுதந்திரமாக உலாவரும் கைதிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அத்துடன் எந்தக் குற்றத்தைச் செய்தாலும் கொரோனா காரணமாக தற்போது சிறைக்குச் செல்லமாட்டோம் என்ற மனோபாவமும் சமூகவிரோதக் கும்பலிடம் அதிகரித்து வருகிறது.

அதற்குத் தீர்வாக புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவரும் இந்திராகாந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தை தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது புதுச்சேரி அரசு. அதற்காக அந்தக் கல்லூரியில் 15 வகுப்பறைகளையும் பள்ளியில் 5 வகுப்பறைகளையும் தேர்ந்தெடுத்து அவற்றைக் கைதிகளுக்கான அறையாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கல்லூரி வளாகத்தில்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார்
கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார்

3 மாதங்கள் தற்காலிகச் சிறையாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் கல்லூரியில், புதிய வழக்குகளில் கைது செய்யப்படும் கைதிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவுடன் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள் என்று மாநில நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதேசமயம் மாணவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி வளாகத்தை தற்காலிக சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு