Published:Updated:

`உயிரோடு அவன் நரக வேதனையை அனுபவிக்கணும்'- காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவியின் தற்கொலைக் கடிதம்

எஸ்.மகேஷ்

கர்ப்பத்தைக் கலைத்தால் திருமணம் செய்துகொள்கிறேன் என்று காதலன் கூறியதை நம்பிய கல்லூரி மாணவி, கருவைக் கலைத்துள்ளார். அதன்பிறகும் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் மாணவி தற்கொலை செய்துள்ளார்.

Dinesh
Dinesh

திருவள்ளூரை அடுத்த வெள்ளேரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். இவரின் மகள் நந்தினி. வேப்பம்பட்டு பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்ஸி முதலாமாண்டு படித்துவந்தார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி நந்தினி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நந்தினியின் அப்பா லட்சுமிகாந்தன், மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ` மேல்நல்லாத்தூரில் உள்ள எனது உறவினரான பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கடந்த 16-ம் தேதி நந்தினி சென்றுள்ளார்.

FIR COPY
FIR COPY

அப்போது பன்னீர்செல்வத்திடம் என் மகள் நந்தினி சில தகவல்களைக் கூறியுள்ளார். அதில், ``மேட்டுத் தெருவில் உள்ள தினேஷ் என்பவரைக் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவருகிறேன். தினேஷ், தன்னை பொண்டாட்டி, பொண்டாட்டி என்றுதான் கூப்பிடுவார். ஒருநாள் தினேஷிடம் நான், `என்னை விட்டுவிட மாட்டீயே' என்று கேட்டேன். அதற்கு அவர், `நீ என் உயிர்நாடி, உன்னை எப்படி விட்டுடுவேன்' என்று கூறினார். கடந்த ஏப்ரல் மாதத்தில் நான் மாசமானேன் (கருவுற்றேன்).

அதை தினேஷிடம் கூறியபோது அவர் நம்பவில்லை. இதனால், கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான கார்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதில் பரிசோதித்தபோது, நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்றுகூறி கருவைக் கலைக்க மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டதும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதன்பிறகு என்னிடம் தினேஷ் சரியாகப் பேசுவதில்லை.

திடீரென ஒருநாள் எனக்கு போன் செய்த தினேஷ், `என்னுடைய அத்தை மகளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்' என்றார். அதைக் கேட்டு மனவேதனையடைந்தாக பன்னீர்செல்வத்திடம் நந்தினி கூறியுள்ளார். இந்தத் தகவலை அவர் என்னிடம் போனில் தெரிவித்தார். மனவருத்தத்தில் இருந்த நந்தினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு காரணமான தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

police statement
police statement

இதையடுத்து, போலீஸார் தினேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்தனர். ஆனால், போலீஸ் விசாரணைக்கு தினேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. தற்கொலை செய்வதற்கு முன் கல்லூரி மாணவி நந்தினி எழுதிய கடிதத்தை அவரின் உறவினர்கள் கண்டெடுத்துள்ளனர். அதில், `என்னுடைய சாவுக்குக் காதலன் தினேஷ்தான் காரணம்' என்றும் `அவனை சும்மா விடாதீங்க' என்றும் எழுதி வைத்துள்ளதாக நந்தினியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவி நந்தினியின் தற்கொலை குறித்து அவரின் மாமா பன்னீர்செல்வத்திடம் பேசினோம். ``நந்தினியை செல்லமாக நாங்கள் வளர்த்தோம். அவளை கல்லூரியில் படிக்க வைத்தோம். இந்தச் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷை நந்தினி கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியதில் நந்தினி, கர்ப்பமடைந்துள்ளார். அதை தினேஷிடம் நந்தினி கூறியதும் கர்ப்பத்தைக் கலைத்தால் திருமணம் செய்வதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய நந்தினியும் கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். அதற்கான மாத்திரைகளை தினேஷ்தான் வாங்கிக் கொடுத்துள்ளார்.

Tablet
Tablet

அதன்பிறகும் தினேஷ், நந்தினியைத் திருமணம் செய்ய முன்வரவில்லை. நந்தினியை திருமணம் செய்ய தினேஷ் வீட்டினரும் சம்மதிக்கவில்லை. குறிப்பாக தினேஷ்குமாரின் அம்மா சரஸ்வதி, நந்தினியை நீ திருமணம் செய்தால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன தினேஷ், நந்தினியை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவந்துள்ளார். இதற்கிடையில், தினேஷுக்கும் அவரின் உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் நந்தினி கடும் மனவேதனையடைந்துள்ளார்.

என்னிடம் இந்தத் தகவலை நந்தினி கூறியதும் தினேஷிடம் போனில் பேசினேன். அப்போது அவர், நந்தினி குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்தார். இதை அறிந்த நந்தினி, தற்கொலை செய்வதற்கு முன்பாக தினேஷிடம் போனில் பேசியுள்ளார். அதன்பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டார். நந்தினியை தற்கொலைக்குத் தூண்டியதாக தினேஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நந்தினி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தினி போலீஸாக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால், அவர் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார்" என்றார் கலங்கியவாறு.

nandhini suicide note
nandhini suicide note

நந்தினி எழுதிய கடிதத்தில், `அம்மா என்னை மன்னிச்சிடு. அண்ணனுக்கு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வை. அப்பாவிடம் சண்டை போடாதே. உங்க எல்லோரையும் கஷ்டப்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும். இந்தக் குடும்பத்தில் பெண் பிள்ளை பிறந்தால் என்னைப்போல வளர்க்க வேண்டாம். நான் அவனை உண்மையாக லவ் பண்ணியதுதான் தப்பு. அவனை மட்டும் சும்மா விடாதீங்க. உயிரோடு அவன் நரக வேதனை அனுபவிக்கணும். அவன் அம்மாவையும் சும்மா விடாதீங்க. ஸாரி அம்மா அப்பா' என்று எழுதியுள்ளார்.

இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் கூறுகையில், ``நந்தினி வழக்கை முதலில் தற்கொலை என்றுதான் வழக்குப்பதிவு செய்திருந்தோம். அதன்பிறகு நடந்த விசாரணையில் இந்திய தண்டனைச் சட்டம் 313, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாற்றியுள்ளோம். மேலும், இந்த வழக்கில் எதிரிகளாக தினேஷ், சரஸ்வதி ஆகியோரை சேர்த்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

தினேஷ் தரப்பில் பேச அவரின் வழக்கறிஞரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. தினேஷ் தரப்பு விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.