Published:Updated:

வேலூர்: `சிறப்பு வகுப்பு; வீட்டுக்கு வந்துடு!’ - மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்

பேராசிரியர் ரமேஷ்
பேராசிரியர் ரமேஷ்

`சிறப்பு வகுப்பு’ என்று கூறி, மாணவியை வீட்டுக்கு வரவழைத்து சில்மிஷம் செய்த கல்லூரிப் பேராசிரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த கூட்டாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர், வேலூர் மாவட்டம், குடியாத்தத்திலுள்ள அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக சில வருடங்களாகப் பணிபுரிந்துவருகிறார். இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பேராசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி
அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி

மூன்றாம் ஆண்டு படிக்கும் 19 வயதுடைய மாணவி ஒருவரை போன் மூலம் தொடர்புகொண்ட ரமேஷ், ``சிறப்பு வகுப்பு இருக்கிறது. கல்லூரிக்கு எதிரில் நான் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்துவிடு. மற்ற மாணவிகளும் வர்றாங்க’’’ என்று கூறி அழைத்திருக்கிறார். சக மாணவிகளும் வருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு பேராசிரியரின் வீட்டுக்குச் சென்றார் அந்த மாணவி.

வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துபோன மாணவி, ``என்னை மட்டும் எதுக்காக வரச் சொன்னீங்க சார்..?’’’ என்று காட்டமாகப் பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். மாணவியை ஆசுவாசப்படுத்த முயன்ற பேராசிரியர் ரமேஷ், தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்த மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் கதறியிருக்கிறார்.

பேராசிரியர் ரமேஷ்
பேராசிரியர் ரமேஷ்

ஆத்திரமடைந்த பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ரமேஷை பிடித்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். பாலியல் குற்றம் உறுதிபடத் தெரியவந்ததால், ரமேஷைக் கைதுசெய்தனர். இந்தப் பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு