Published:Updated:

சென்னை: திருமணம் செய்யக் கட்டாயப்படுத்திய கல்லூரி ஊழியர் கொலை! - மாணவியுடன் சிக்கிய காதலன்

கொலை
News
கொலை

சென்னை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய கல்லூரி ஊழியரை காதலனுடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரின் மகள் பிரியா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் படித்தார். அப்போது அதே பல்கலைக்கழக சோதனைக் கூடத்தில் உதவியாளராக பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (43) என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவி பிரியாவை கல்லூரி ஊழியர் செந்தில் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

செந்தில்
செந்தில்

செந்தில் திருமணமானவர். மேலும் அவர் குழந்தை இல்லாததால் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்துவந்திருக்கிறார். இந்தத் தகவல் மாணவிக்குத் தெரியவந்ததும் அவர் செந்திலுடன் பழகுவதைத் தவிர்த்திருக்கிறார். இதையடுத்து அங்கு கல்லூரிப் படிப்பை முடித்த மாணவி, ஆராய்ச்சிப் படிப்பைக் கற்க திருப்போரூரை அடுத்த காலவாக்கத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் படித்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் அருண்பாண்டியன் (24) என்பவருடன் மாணவி பிரியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் செந்தில், மாணவி பிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். இது குறித்து பிரியா, அருண்பாண்டியனிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து செந்திலைக் கொலை செய்ய பிரியாவும் அருண்பாண்டியனும் திட்டமிட்டிருக்கின்றனர். அதற்காக கடந்த 29-ம் தேதி கேளம்பாக்கத்தில் ஒரு கடையில் கத்தியை அருண்பாண்டியன் வாங்கியிருக்கிறார். பின்னர் செந்திலிடம் போனில் பேசிய மாணவி பிரியா, நாம் இருவரும் சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் சந்தோஷமடைந்த செந்தில், மாணவியைச் சந்திக்க பல்கலைக்கழகத்துக்கு பைக்கில் சென்றார். அப்போது மாணவி படிக்கும் பல்கலைக்கழக வாசலில் செந்தில் காத்திருந்தார்.

மாணவன் அருண்பாண்டியன்
மாணவன் அருண்பாண்டியன்

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியில் வந்த மாணவி பிரியாவைப் பார்த்ததும் செந்தில், அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது மாணவி, ``நான் அருண்பாண்டியன் என்பவரைக் காதலிக்கிறேன். அதனால் என்னைத் தொந்தரவு செய்யாதீங்க” என்று கூறியிருக்கிறார். அதற்கு செந்தில், ``உன்னை என்னால் மறக்க முடியாது’’ எனத் தெரிவித்திருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அருண்பாண்டியன், செந்திலிடம் ``பிரியாவை நான் காதலிக்கிறேன். அதனால் பிரியாவுக்கு இனி நீ தொல்லை கொடுக்க வேண்டாம்’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த செந்தில், ``பிரியாவை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’’ என்று அருண்பாண்டியனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்த அருண்பாண்டியன், செந்திலின் கழுத்தை அறுத்திருக்கிறார். பின்னர் கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். அதனால் பைக்கில் அமர்ந்தபடியே செந்தில் உயிரிழந்தார். பல்கலைக்கழகம் அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரியாவும் அருண்பாண்டியனும் ஆட்டோவில் ஏறித் தப்பினர். இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், செந்திலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பிரியா, அருண்பாண்டியன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.