சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (19) (பெயர் மாற்றம்). இவர் கல்லூரியில் படித்துவருகிறார். மாணவி மஞ்சுளாவும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பரத் என்பவரும் ஒரே பேருந்தில் கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அதனால் இருவரும் நட்பாகப் பழகிவந்தனர். இருவரும் செல்போனில் பேசிவந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 15.12.2022-ம் தேதி மஞ்சுளாவிடம் பரத் வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது மஞ்சுளாவின் ஆடைகளைக் கழற்றும்படி பரத் கூறியிருக்கிறார். அதனால் மஞ்சுளா அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மஞ்சுளாவை பரத் மிரட்டியிருக்கிறார். அதனால் செல்போன் இணைப்பை மஞ்சுளா துண்டித்துவிட்டார். அதன் பிறகும் மஞ்சுளாவின் செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பரத் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து மஞ்சுளா, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பரத்திடம் விசாரித்தனர். விசாரணையில் பரத் மஞ்சுளாவை மிரட்டியது உண்மை எனத் தெரியவந்தது. மஞ்சுளா அளித்த தகவலின்படி கல்லூரி மாணவர் பரத் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு பரத்தைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.