Published:Updated:

`ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச்!' - அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய மாணவர்

தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசப்பட்ட இடம்
தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசப்பட்ட இடம்

சென்னை தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசியது யார் என்பதை போலீஸார் சிசிடிவி மற்றும் வாகனத்தின் பதிவு நம்பர் மூலம் கண்டறிந்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள காமராஜர் அரங்கத்தை அடுத்துள்ள கார் ஷோரூம் பகுதியில் நேற்று மாலை பயங்கரமான சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அந்தப்பகுதி புகைமூட்டமாகக் காட்சியளித்தது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. இந்தத் தகவல் கிடைத்ததும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவ இடத்துக்கு வந்தார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் எதற்காக வெடிகுண்டு வீசப்பட்டது என்பது குறித்து விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டியோ வாகனத்தில் வந்த 2 பேர் வெடிகுண்டு வீசும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அவ்வழியாகச் சென்ற சொகுசுக் காரை நோக்கி வெடிகுண்டுகளை வீசுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கார் யாருடையது என்றும் போலீஸார் விசாரித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், `` சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சி.டி.மணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி என வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சி.டி. மணி, நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்தார்.

சம்பவ இடத்தில் கமிஷனர் ஏ.கேவி.
சம்பவ இடத்தில் கமிஷனர் ஏ.கேவி.

விசாரணை முடிந்து தன்னுடைய சொகுசுக் காரில் சி.டி.மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் தேனாம்பேட்டை நோக்கி வந்தனர். அந்தக் காரில் வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியும் இருந்தார். இவர்கள் சென்ற காரை நோக்கிதான் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக காரின் மீது வெடிகுண்டுகள் விழாமல் சாலையில் விழுந்து வெடித்துள்ளன. வெடிகுண்டு வீசப்பட்டதும் கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டது. அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து வெடிகுண்டு வீசியவர்களும் வேகமாகச் சென்று தப்பிவிட்டனர்.

Vikatan

வாகனத்தின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்தபோது, அது சென்னை தி.நகர், ராஜாபிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனத்தை தேவதாஸின் மகன் மகேஷ் ( 20) ஓட்டியுள்ளார். பின்னால் மகேஷின் நண்பர் அமர்ந்திருந்துள்ளார். மகேஷின் நண்பருக்கு 17 வயது என்ற தகவல் கிடைத்துள்ளது. மகேஷ், ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிசிடிவியில் அவரின் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், பின்னால் அமர்ந்திருந்தவரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. மகேஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார்.

வெடிகுண்டு வீசப்பட்ட இடம்
வெடிகுண்டு வீசப்பட்ட இடம்

மகேஷ் மற்றும் அவரின் நண்பர் இருவர், வடசென்னையில் வளர்ந்து வரும் பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளிகள். வடசென்னையில் காக்கா தோப்பு பாலாஜிதான் நம்பர்ஒன் இடத்தில் உள்ளார். அந்த இடத்தைப் பிடிக்க பாலாஜியின் எதிர் கோஷ்டியான பிரபல ரவுடி திட்டமிட்டுள்ளார். நேற்று வழக்கு விசாரணை முடிந்து காரில் சென்றுகொண்டிருந்த காக்கா தோப்பு பாலாஜியைத் தீர்த்துக்கட்ட அந்த ரவுடி ஸ்கெட்ச் போட்டுள்ளார். வெடிகுண்டுகளை வீசுவதற்கு மகேஷ் மற்றும் அவரின் நண்பரை அனுப்பி வைத்துள்ளார். நாட்டு வெடிகுண்டுகளை வீசியதும் துப்பாக்கியால் சுட அந்த டீம் திட்டமிட்டுள்ளது. ஆனால், வெடிகுண்டுகள் காரின் மீது விழாமல் அருகில் இருந்த கார் ஷோரூம் வாசலில் விழுந்தது. இதனால் அந்த ஷோரூமின் கண்ணாடிகள் உடைந்தன. இந்தச் சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியும் சி.டி. மணியும் உயிர் தப்பித்துவிட்டனர். தலைமறைவாக இருக்கும் ரவுடிக் கும்பலைத் தேடிவருகிறோம்" என்கின்றனர்.

நாட்டு வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சி.டி. மணி தரப்பில் பேசினோம். `` வழக்கு விசாரணை முடிந்து சரியாக மாலை 4 மணியளவில் காரில் வந்து கொண்டிருந்தோம். அப்போது காரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஏதோ ஒன்றை வீசுவதை டிரைவர் கவனித்தார். உடனே சுதாரித்த டிரைவர் வேகமாக காரை ஓட்டினார். அதனால்தான் வெடிகுண்டுகள் காரின் மீது விழவில்லை. சி.டி. மணியின் பெயரில்தான் அந்தக் கார் உள்ளது. இதனால் வெடிகுண்டுகளை வீசியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

ரவுடி சி.டி.மணி
ரவுடி சி.டி.மணி

ரவுடிகளைக் கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவத்தில் இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டுகளை வீசிய அந்த டீம், துப்பாக்கியாலும் சுட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தத் தகவலை போலீஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும், காரில் சென்ற ரவுடிகளைக் கொலை செய்ய 8 இரு சக்கர வாகனங்களில் துரத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திலிருந்தே அந்தக் காரை இன்னொரு ரவுடி டீம் பின்தொடர்ந்து வந்துள்ளதை சிசிடிவி மூலம் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் காரோடு ஒரு டீம் காத்திருந்துள்ளது. ஆனால், வெடிகுண்டுகள் குறி தவறியதால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.

சினிமாவைப்போல சென்னையின் இதயப் பகுதியான அண்ணாசாலையில் நடந்த இந்த நிஜக் காட்சிகள் காவல்துறையை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு