சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்துவரும் மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, ஆர்ட்ஸ் குரூப்பில் முதுகலை இரண்டாமாண்டு படித்துவருகிறேன். என் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் பிரேம் குமார் என்பவர், கடந்த ஒரு வருடமாக என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்தார். மேலும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தொட்டுப் பேசுவது என்று தவறான எண்ணத்தில் என்னை அணுகினார். இது தொடர்பாகப் பலமுறை அவரை எச்சரித்திருக்கிறேன். அதற்காக அவர் நான் படிக்க மாட்டேனென்கிறேன் என்று மற்ற மாணவர்கள் மத்தியில் என்னைச் சாதிப் பெயர் கூறி இழிவாகத் திட்டுவார். ஒரு கட்டத்தில் நான் துறைத் தலைவரிடம் புகார் அளித்திருந்தேன். அவர் பிரேம் குமாரை அழைத்துக் கண்டித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் தற்போது துறைத் தலைவர் இல்லாததால் அவருடைய நடவடிக்கை உச்சத்துக்குப் போனது. வகுப்பில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது, பெண்கள்மீது கைபோட்டுப் பேசுவது என்று மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கினார். எனவே இவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்புகாரில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றனர் காவல்துறையினர்.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீதான புகார் குறித்து விசாரித்தோம், சமீபத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்குள் நடந்த மீட்டிங்கைப் பற்றி பத்திரிகைக்குத் தகவல் கொடுத்து செய்தி வெளியிட்டதால், அவரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருப்பதாகக் கூறினர்.