Published:Updated:

`ஆவடி காவல் நிலையத்தில் கதறியழுத கல்லூரி மாணவி!' -அக்கா கணவர் சிக்கிய பின்னணி

கடந்த சில தினங்களுக்கு முன் திவ்யாவின் சகோதரியான கல்லூரி மாணவிக்கு போன் செய்த சரவணன், `உன் அக்கா குறித்து முக்கியமான தகவல் ஒன்றைக் கூற வேண்டும். உடனே நீ கொளத்தூருக்கு வா' என்று கூறியுள்ளார்.

representational image
representational image

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சரவணன் (44). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி திவ்யா. இவரின் அம்மா வீடு ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ளது. திவ்யாவின் சகோதரி, கல்லூரியில் படித்துவருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திவ்யாவின் சகோதரியான கல்லூரி மாணவிக்கு போன் செய்த சரவணன், `உன் அக்கா குறித்து முக்கியமான தகவல் ஒன்றைக் கூற வேண்டும். உடனே நீ கொளத்தூருக்கு வா' என்று கூறியுள்ளார்.

சரவணன்
சரவணன்

அதை நம்பிய கல்லூரி மாணவியும் திருமுல்லைவாயலிலிருந்து மின்சார ரயிலில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், மனைவியின் சகோதரியை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது ஆட்டோ வீட்டுக்குச் செல்லாமல் மெரினா கடற்கரை நோக்கிச் சென்றுள்ளது.

அதைக் கவனித்த திவ்யாவின் சகோதரி, `ஏன் மாமா வீட்டுக்குச் செல்லவில்லை?' என்று கேட்டுள்ளார். அதற்கு சரவணன், `வீட்டில் உன் அக்கா இருக்கிறாள். அவளைப் பத்திப் பேச மெரினா பீச்சுக்குப் போவோம்' என்று கூறியுள்ளார். அதையும் திவ்யாவின் சகோதரி நம்பி அமைதியாக இருந்துள்ளார்.

மெரினா கடற்கரையை நோக்கி ஆட்டோவில் சரவணனும் திவ்யாவின் சகோதரியும் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் சரவணனின் செயல்களைக் கண்டு திவ்யாவின் சகோதரி அதிர்ச்சியடைந்தார். `ஏன் பொது இடத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?' என்று சரவணனை எச்சரித்துள்ளார். ஆனால் சரவணன் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மனைவியின் சகோதரிக்குப் பாலியல்ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், `ஆட்டோவை நிறுத்துங்கள், இல்லையென்றால் ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே குதித்துவிடுவேன்' என்று கூறியுள்ளார்.

போலீஸ்
போலீஸ்

இதனால் ஆட்டோவை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிய அவர், இன்னொரு ஆட்டோவைப் பிடித்து கொளத்தூருக்கு வந்தார். அங்கு சரவணன், தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து அக்கா திவ்யாவிடம் கூறிக் கதறி அழுதார். அதைக்கேட்டு திவ்யா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இருவரும் கொளத்தூரிலிருந்து திருமுல்லைவாயலில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி சரவணன் திருமுல்லைவாயலுக்கு வந்தார். அங்கு திவ்யாவிடம், வீட்டுக்கு வரும்படி கூறினார். அங்கு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து திவ்யாவின் சகோதரி, ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து சரவணனிடம் விசாரித்தார். அப்போது அவர் திவ்யாவின் சகோதரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

representional
representional

இதுகுறித்து ஆவடி மகளிர் போலீஸார் கூறுகையில், ``சரவணனுக்கும் திவ்யாவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கும் திவ்யாவுக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டுவந்துள்ளது. திவ்யாவின் சகோதரியான கல்லூரி மாணவிக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பேரில் சரவணனைக் கைது செய்துள்ளோம். காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களைக் கூறி அந்த மாணவி கதறி அழுதார்" என்றனர்.