Published:Updated:

சென்னை: நள்ளிரவில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர்! - முன்விரோதத்தால் நடந்த கொடூரம்

கல்லூரி மாணவர் பிரசாந்த்
கல்லூரி மாணவர் பிரசாந்த்

சென்னை வியாசர்பாடியில் அம்மாவின் தோழியை பைக்கில் அழைத்துக் கொண்டு வந்த கல்லூரி மாணவனை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது.

கல்லூரி மாணவர்

சென்னை வியாசர்பாடி சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் விநாயகி. இவரின் மகன் பிரசாந்த் (22). இவர் சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. பிரசாந்த்தின் அம்மா விநாயகி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் தோழி அம்சா. இவர்கள் இருவரும் சேர்ந்து காசிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்வாங்கி வருவது வழக்கம்.

கொலை
கொலை

இதற்காக அம்சாவை அழைத்து வரும்படி விநாயகி தன்னுடைய மகன் பிரசாந்திடம் நேற்றிரவு கூறியுள்ளார். உடனே பைக்கில் பிரசாந்த் சென்று அம்மாவின் தோழி அம்சாவை அழைத்து வந்துள்ளார். நள்ளிரவில் அவர்கள் வரும்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கை வழிமறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் பிரசாந்த்தை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. அதனால் நிலைக்குலைந்த பிரசாந்த், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அதை அதிர்ச்சியுடன் அம்சா பார்த்து, காப்பாற்றுங்கள் எனச் சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பின்னர் நடந்தச் சம்பவத்தை விநாயகிக்குப் போன் மூலம் அம்சா கூறினார். உடனே அவரும் அங்கு வந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த பிரசாந்த்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்த போலீஸார், பிரசாந்த்தின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்
உ.பி: போலீஸார் கொலை; அதிகாரிகள் தொடர்பு? -ரௌடியைத் தேடும் பணியில் 3000 காவலர்கள்

சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பிரசாந்த்தை வெட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யாரென்று விசாரித்தபோது தேசிகானந்தபுரத்தைச் சேர்ந்த பாலச்சந்துரு (18) உட்பட 3 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீஸார் கூறுகையில், ``பிரசாந்த் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு