Published:Updated:

சென்னை: 2-வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவன்! - கொலை வழக்கில் தாய், மகன் கைது

கொலை செய்யப்பட்ட ஸ்ரீராம்
கொலை செய்யப்பட்ட ஸ்ரீராம்

சென்னை அரும்பாக்கத்தில், வீடு பிரச்னை காரணமாக இரண்டாவது மாடியிலிருந்து தள்ளி கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர், கொத்தனராக வேலை பார்த்துவருகிறார். இவருடைய மகன் ஸ்ரீராம் (19). இவர், சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். குப்புசாமிக்கு அந்தப் பகுதியில் சொந்தமாக வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வீட்டில் ராஜா என்பவர் குடும்பத்துடன் லீஸுக்குக் குடியிருந்துவந்தார். லீஸ் பணம் தொடர்பாக குப்புசாமிக்கும் ராஜாவுக்கும் இடையே பிரச்னை இருந்துவந்தது.

கொலை
கொலை
representational image

இந்தநிலையில் குப்புசாமி வீட்டின் இரண்டாவது மாடியிலிருக்கும் ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர் (28) பூட்டுப் போட்டுவைத்தார். அதனால் அந்த வீட்டுக்குள் குப்புசாமி குடும்பத்தினரால் செல்ல முடியவில்லை. சம்பவத்தன்று அந்தப் பூட்டை குப்புசாமியின் மகன் ஸ்ரீராம் உடைக்க முயன்றார். அதைப் பார்த்த சங்கர், அவரின் அம்மா பானு ஆகியோர் `பணத்தைக் கொடுத்துவிட்டு பூட்டின் மீது கையை வை’ எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஸ்ரீராம், `எங்கள் வீட்டுக்கு உங்களை யார் பூட்டுப்போடச் சொன்னது?’ என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இரண்டாவது மாடியிலிருந்து ஸ்ரீராமை சங்கரும் பானுவும் கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதனால் மாடியிலிருந்து கீழே விழுந்த ஸ்ரீராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக இறந்தார்.

கொலை செய்யப்பட்ட ஸ்ரீராம்
கொலை செய்யப்பட்ட ஸ்ரீராம்
சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ஸ்ரீராமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பானு, சங்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் சங்கருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு