Published:Updated:

`சென்னையில் ஃபாத்திமா; திருச்சியில் ஜெப்ரா பர்வீன்!’- அதிர்ச்சி தரும் கல்லூரி மாணவிகள் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜெப்ரா பர்வீன்
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜெப்ரா பர்வீன்

பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா தற்கொலை செய்துள்ளார்.

திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் உள்ளது அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநில மாணவிகள் படிக்கின்றனர்.

அந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு அறிவியல் பாடப் பிரிவில் உணவியல் துறை படித்துவந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த அறை எண் 100-ல் தூக்கில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கல்லூரி  விடுதி
கல்லூரி விடுதி

அதைப் பார்த்துப் பதறிய சகமாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் கொடுத்த தகவலையடுத்து, விரைந்துவந்த கே.கே.நகர் போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸாரிடம் கல்லூரி நிர்வாகம், தற்கொலை செய்துகொண்ட மாணவி பள்ளிக்கல்வி வரை இந்தியில் படித்ததாகவும். தற்போது கல்லூரிப் பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால், அவர் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார் எனவும் அதன்காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில், மாணவியின் மரணத்துக்கான காரணமே வேறு என்றும் விடுதி காப்பாளர் உளவியல் ரீதியாக அவரை டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்றும் திடுக் தகவல்கள் கல்லூரி மாணவர்களிடையே பரவி வருகிறது.

மாணவி ஜெப்ரா பர்வீன்
மாணவி ஜெப்ரா பர்வீன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூரி மாணவிகள் சிலர், ``எங்கள் கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் செல்போனை மறைத்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். அந்தவகையில், மாணவி ஜெப்ரா பர்வீனும் செல்போன் பயன்படுத்தினார். இது அவரின் பெற்றோருக்கும் தெரியும்.

கல்லூரி முகப்பு
கல்லூரி முகப்பு

அவர் செல்போன் பயன்படுத்தியதை அவரது அறையில் தங்கியிருக்கும் 7 மாணவிகளில் ஒருவர் விடுதி வார்டனிடம் போட்டுக்கொடுத்துவிட்டார். உடனே மாணவி ஜெப்ராவை தனது அறைக்கு அழைத்த வார்டன், மிக மோசமாகத் திட்டியதுடன், சகமாணவிகளின் முன்னிலையில் அவரை அசிங்கப்படுத்தினார்.

இதனால் மனமுடைந்த மாணவி ஜெப்ரா, அவருடன் அறையில் தங்கியிருக்கும் தோழிகளில் ஒருவரான முதலாமாண்டு பி.காம் படிக்கும் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஆதிபாவிடம் சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில், அடுத்தநாள் காலை 6.30 மணியளவில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால், கல்லூரி நிர்வாகம் 10.30-க்குத்தான் போலீஸாருக்கே தகவல் தந்தார்கள். அதற்குள் மரணத்துக்கான காரணங்களை மாற்றியதுடன், அவருடன் அறையில் தங்கியிருந்த ஆதிபாவை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள். மேலும், இறந்த மாணவி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது” என்று கூறும் சகமாணவிகள், ``பர்வீனுக்கு உடல்நிலை சரியில்லை என அவரின் பெற்றோரை ஜார்க்கண்டிலிருந்து வரவழைத்தார்கள்.

திருச்சி வந்த அவர்களிடம், போலீஸாரிடம் சொன்ன காரணங்களையே கல்லூரி நிர்வாகம் சொல்லிவுள்ளது. இறந்த மாணவி உடலை ஜார்க்கண்ட் கொண்டு சென்றால் பிரச்னை உருவாகலாம் என்பதால் திருச்சியிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.

suicide
suicide

மாணவி ஜெப்ரா செல்போன் பயன்படுத்தியது தவறுதான். அதை அவரின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து கண்டித்திருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியாகச் சித்ரவதைச் செய்து அநியாயமா ஒரு மாணவியின் உயிரைப் பறித்துவிட்டார்களே” எனக் கலங்கியவர்கள், ``இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை வேண்டும். இனி எந்த மாணவிக்கும் இந்தநிலை வரக் கூடாது'' என வேதனை தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து கல்லூரியின் முதல்வர் சுஹாசினி எர்னஸ்டிடம் கேட்டோம். ``நான் வேறு வேலையில் இருப்பதால், இதுகுறித்து பேசுவதற்கான சூழல் இல்லை. சில தினங்களுக்கு பிறகு, நானே அழைக்கிறேன். நேரில் வாங்க பேசலாம்” என்றபடி அழைப்பைத் துண்டித்தார். மாணவியின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து முழுமையான விசாரணை வேண்டும் என்பதே சக மாணவிகள் கோரிக்கையாக உள்ளது.

பதற வைக்கும் திருச்சி தற்கொலைகள்!

பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல்கள் தரும் அதிர்ச்சி அடங்குவதற்குள் திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ராவின் இந்தத் தற்கொலை சம்பவம் அனைத்துத் தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை குறித்த தகவல்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்த விழுப்புரம் மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகள் அனிதா காதல் தோல்வி காரணமாகவும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்துவந்த திருச்சி, துறையூர் வளையப்பட்டியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் செந்தில்குமார், படிப்பு வராததால், எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிர் உன்னதமானது என்பதை நாம் உணர்வது எப்போது..?

அடுத்த கட்டுரைக்கு