Published:Updated:

`என் மகனின் எதிர்காலம் உங்ககிட்டத்தான் இருக்கு!'- வேதனைப்பட்ட தாய்; உயிரைவிட்ட இன்ஜினீயரிங் மாணவர்

எஸ்.மகேஷ்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவனின் அம்மா, மகன் குறித்த சில தகவல்களை பேராசிரியர்களிடம் கூறியுள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தான் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரின் மகன் சுரேஷ்குமார். இவர், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவந்தார்.

சுரேஷ்குமார், சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி அவரின் அம்மா ராஜேஸ்வரி திட்டியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ்குமார், வீடு திரும்பவில்லை. சுரேஷ்குமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார், அவரைத் தேடிவந்தனர்.

கல்லூரி அமைந்திருக்கும் பகுதி
கல்லூரி அமைந்திருக்கும் பகுதி

இந்தநிலையில் இன்று காலை கானத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் சுரேஷ்குமாரின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த கானத்தூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றியதோடு கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவல் சுரேஷ்குமாரின் பெற்றோரிடம் கேளம்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் சுரேஷ்குமாரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். சுரேஷ்குமார் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கல்லூரி அமைந்திருக்கும் பகுதி
கல்லூரி அமைந்திருக்கும் பகுதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சுரேஷ்குமார், இன்ஜினீயரிங் படித்துவந்தசமயத்தில் அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதனால், சுரேஷ்குமார் படிக்கும் கல்லூரிக்குச் சென்ற அவரின் அம்மா, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, சுரேஷ்குமார், சரியாகப் படிப்பதில்லை. இதனால் அவரின் எதிர்காலம் உங்களிடம்தான் உள்ளது என்று கண்ணீர்மல்கக் கூறியுள்ளார். இதனால், கல்லூரி நிர்வாகமும் ராஜேஸ்வரியிடம் கவலைப்படாதீர்கள், சுரேஷ்குமாருக்கு அறிவுரைகளைச் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து சுரேஷ்குமாரிடம் பேசிய பேராசிரியர்கள், நன்றாகப் படிக்கும்படி கூறியுள்ளனர். இதனால், மனமுடைந்த சுரேஷ்குமார், கடலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளோம்" என்றனர்.

 இன்ஜினீயரிங் கல்லூரி
இன்ஜினீயரிங் கல்லூரி

மகனின் எதிர்கால நலன்கருதி கல்லூரிக்குச் சென்ற தாயை மனவருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் சுரேஷ்குமார். இவர் இறந்த தகவல் கிடைத்ததும் அவரின் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.