Published:Updated:

`உன்னை நினைக்காமல் இருக்க முடியல; மறக்கவும் முடியல’ - தற்கொலைக்கு முன் வீடியோ அனுப்பிய மாணவன்!

எஸ்.மகேஷ்

காதல் தோல்வியால் சென்னை கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்தவற்கு முன் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை அவர் அனுப்பியுள்ளார்.

Jayaraj
Jayaraj

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை எம்.யூ.கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (21). இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். சோழிங்கநல்லூரியில் உள்ள கல்லூரியில் ஜெயராஜ் படித்துவந்தார். நேற்று அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனால் அவரிடம் ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டதற்கு, உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார்.

Representational image
Representational image

இந்தநிலையில், ஜெயராஜின் வீடு நேற்று மதியம் பூட்டியிருந்தது. அங்கு வந்த ஜெயராஜின் உறவினர்கள், அவருக்கு போன் செய்தனர். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். ஜெயராஜ் இருக்கும் அறையின் கதவு நீண்ட நேரமாகத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உறவினர்கள் உள்ளே பார்த்தனர். அப்போது ஜெயராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பிறகு, துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயராஜின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெயராஜின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது சில தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

Representational image
Representational image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெயராஜ், படிக்கும் கல்லூரியில் மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் ஜெயராஜை காதலிக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெயராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து ஜெயராஜின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினோம். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார் ஜெயராஜ். அதில், `உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, உன்னை மறக்கவும் முடியவில்லை, வேறு ஒருவருக்கு உன்னை விட்டுக் கொடுக்கவும் விருப்பமில்லை' என்று எழுதப்பட்டிருந்தது" என்றனர்.

இதற்கிடையில் ஜெயராஜ் தற்கொலை செய்வதற்கு முன், நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஜெயராஜின் அத்தை ஜெயந்தி கூறுகையில், ``இனி யாரும் ஒரு பெண்ணுக்காகக் குடும்பத்தை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொள்ளக்கூடாது" என்று கண்ணீர்மல்க கூறினார்.

`உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, உன்னை மறக்கவும் முடியவில்லை, வேறு ஒருவருக்கு உன்னை விட்டுக் கொடுக்கவும் விருப்பமில்லை'
ஜெயராஜ்

காதல் தோல்வியால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ், தற்கொலை செய்த தகவலையறிந்த அவரின் நண்பர்களும் கதறி அழுதனர்.