Published:Updated:

சொன்னால் நம்ப மாட்டீங்க..!- வடிவேல் பாணியில் இவர்கள் காமெடித் திருடர்கள்

எஸ்.மகேஷ்

போலீஸாரிடம் சிக்கும் ஒவ்வொரு திருடருக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும். அதில் நடிகர் வடிவேல் பாணியில் சிக்கிய காமெடி திருடர்களின் பின்னணிதான் இந்தச் செய்தி.

 காதலன் செல்லதுரை
காதலன் செல்லதுரை

சென்னை வேளச்சேரியில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே நள்ளிரவில் பர்தா அணிந்தபடி கையில் கட்டிங் இயந்திரத்தோடு பெண் ஒருவர் நிற்பதைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பர்தா அணிந்தவரிடம் விசாரித்தபோது ஆண் குரல் கேட்டு போலீஸார் மேலும் ஷாக்காகினர். தொடர் விசாரணையில் பர்தா அணிந்தது பெண் அல்ல வேளச்சேரியில் வெல்டிங் கடை நடத்திவரும் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

பர்தா அணிந்து ஏ.டி.எம். சென்டரில் திருட வந்த வெல்டிங் ராஜ்குமார்
பர்தா அணிந்து ஏ.டி.எம். சென்டரில் திருட வந்த வெல்டிங் ராஜ்குமார்

வெல்டிங் கடை நடத்திவரும் ராஜ்குமார், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவருக்குப் போதிய வருமானம் வரவில்லை. இதனால், இரண்டு பேரிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டிக்கொடுக்கமுடியாமல் ராஜ்குமார் சிரமப்பட்டுள்ளார். சில மாதங்களாக கடன்தொல்லையால் சிரமப்பட்ட ராஜ்குமார், கொள்ளையடித்தால் கடன்களையும் அடைத்துவிட்டு விரும்பிய வாழ்க்கை வாழலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக காவலாளி இல்லாத ஏ.டி.எம். சென்டர்களை அவர் நோட்டமிட்டபோது வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியுடன் செயல்படும் ஏ.டி.எம். சென்டர், ராஜ்குமாரின் கண்ணில் தென்பட்டுள்ளது. இதனால், அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்ட ராஜ்குமார், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க கையோடு கட்டிங் இயந்திரத்தையும் எடுத்துவந்தார்.

நடிகர் வடிவேல் பாணியில் மாறுவேடமிட்ட `வெல்டிங்' ராஜ்குமார் சிக்கியது எப்படி?

எப்படியும் வங்கியிலும் ஏ.டி.எம். சென்டரிலும் சிசிடிவி கேமரா இருக்கும். கொள்ளையடிக்கும்போது சிசிடிவி கேமராவில் அந்தக் காட்சி பதிவாகிவிடும். எனவே, பர்தா அணிந்து சென்றால் போலீஸாரால் அடையாளம் காணமுடியாது என்று ராஜ்குமார் யோசித்து, பக்கத்து வீட்டில் காயப்போட்டிருந்த பர்தாவை திருடினார். அதை அணிந்துகொண்டு பைக்கில் ஏ.டி.எம். சென்டருக்கு நள்ளிரவில் வந்தார். ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய ராஜ்குமார், ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தார்.

அப்போதுதான் நுண்ணறிவு பிரிவு காவலர் பாஸ்கர், அவ்வழியாக பைக்கில் சென்றார். இந்த நேரத்தில் தன்னந்தனியாக பெண் ஒருவர், ஏ.டி.எம்-முக்குள் செல்கிறாரே என்று கருதிய பாஸ்கர், பைக்கை நிறுத்தி அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளைக் கவனித்தார். ஏ.டி.எம்-முக்குள் இருந்தபடி பைக்கை நிறுத்திய பாஸ்கரை ராஜ்குமாரும் பார்த்தார். இதனால் ஏ.டி.எம்மிலிருந்து வெளியில் வந்த ராஜ்குமார், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்.

கொள்ளையடிக்க முயன்ற ஏ.டி.எம். சென்டர்
கொள்ளையடிக்க முயன்ற ஏ.டி.எம். சென்டர்

அப்போது காவலர் பாஸ்கர், பர்தா அணிந்த ராஜ்குமாரிடம் விசாரித்தபோதுதான் ஏ.டி.எம்-மில் கொள்ளையடிக்க இருந்த ராஜ்குமாரின் திட்டம் தெரியவந்தது. ராஜ்குமார் மீது இதற்கு முன் எந்த வழக்கும் இல்லை. முதல் தடவையாக கொள்ளையடிக்க வந்தபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.

பர்தா அணிந்து கொள்ளையடிக்க வந்த ராஜ்குமார், ஆண்கள் அணியும் ஹெல்மெட்டை அணிந்திருந்ததால்தான் காவலர் பாஸ்கரிடம் பிடிபட்டுக்கொண்டார் என்கின்றனர் போலீஸார். `போக்கிரி' படத்தில் நடிகர் வடிவேல், இன்ஸ்பெக்டருக்காக நடிகர் விஜய்யைப் பின்தொடர்ந்து கண்காணிக்க பல வேடங்களில் வருவார். அப்போது எல்லாம் அவரின் தலையிலிருக்கும் கொண்டையால் நடிகர் விஜய் தரப்பினரிடம் வடிவேல் சிக்கிக்கொள்வார். அதுபோலத்தான் பர்தா அணிந்த ராஜ்குமார், ஆண்கள் அணியும் ஹெல்மெட்டை தலையில் போட்டிருந்ததால் போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.

காதலிக்காக கடிகாரத்தைத் திருடிய காமெடி திருடன்!

சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூரைச் சேர்ந்தவர் சௌந்திரபாண்டியன். இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு டிவி மற்றும் கடிகாரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சௌந்திரபாண்டியன், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் போலீஸார் விசாணை நடத்தினர்.

திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கால்டாக்ஸி நீண்ட நேரம் அந்தப்பகுதியில் நின்றது தெரியவந்தது. இதனால் கால்டாக்ஸியின் பதிவு எண்களை அடுத்தடுத்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீஸார் கண்டறிந்தனர். அப்போது ஒரு சிசிடிவி பதிவில், கொள்ளையர்கள் கால்டாக்ஸியில் டிவி மற்றும் கடிகாரத்தை ஏற்றிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனால், அந்த கால்டாக்ஸியின் பதிவு நம்பரை வைத்து கொள்ளையர்களை போலீஸார் கண்டறிந்தனர்.

திருட பயன்படுத்தப்பட்ட கார்
திருட பயன்படுத்தப்பட்ட கார்

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கார், சேலையூரைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அந்தக் காரை குரோம்பேட்டை, ஜெய் நகர் முதலாவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த டிரைவர் ஆண்டனி என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் நைசாகப் பேசிய போலீஸார் ஆண்டனியை முதலில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அடுத்து, ஆண்டனியின் நண்பர்களான சிட்லபாக்கம் திருவள்ளூவர் நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (24), குரோம்பேட்டை, ஜெய் நகர், 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீஸார் பிடித்தனர்.

இவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது ருசிகரத் தகவல்கள் வெளியாகின. செல்லத்துரை, அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த செல்லத்துரை, நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் பெற்றோரிடம் பெண்ணும் கேட்டுள்ளார். அப்போது காதலியின் பெற்றோர், செல்லத்துரையிடம், `10 லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு வா, உனக்கு பெண் தருகிறோம்' என்று கூறியுள்ளனர். இதனால் 10 லட்சம் ரூபாயை சம்பாதிக்கத்தான் சௌந்திரபாண்டியன் வீட்டில் திருட நண்பர்களுடன் செல்லத்துரை சென்றுள்ளார். ஆனால், வீட்டில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் வெறுங்கையோடு செல்லக் கூடாது என்றுதான் டிவி-யையும் கடிகாரத்தையும் திருடியதாக செல்லத்துரை டீம் போலீஸாரிடம் கூறியுள்ளது.

இந்தக் கொள்ளை கும்பல் குறித்து வித்தியாசமான தகவலை போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்தார். ``இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், கொள்ளையடிக்க செல்வதற்கு முன், பூஜை போடுவதுண்டு. அதன்பிறகுதான் அவர்கள் கொள்ளையடிக்கச் செல்வார்கள். வழக்கமாக பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவர், எப்படி நீங்கள் ரத்தம் பார்க்காமல் கொள்ளையடிக்கிறீர்கள் என்று கொள்ளைக் கும்பலிடம் கேட்டுள்ளார். அப்போது பூஜை நடந்துகொண்டிருக்கும்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் வெளியில் சென்றார்.

கொள்ளை சம்பவத்தை விவரிக்கும் மாதிரி படம்
கொள்ளை சம்பவத்தை விவரிக்கும் மாதிரி படம்

அவர் சென்ற சிறிது நேரத்தில் அர்ச்சகர் தோளிலிருந்த துண்டு காணாமல் போனது. அதைப்பார்த்த அர்ச்சகர், துண்டைத் தேடியுள்ளார். அவரிடம் துண்டைக் கொடுத்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், `இப்படிதான் நாங்கள் திருடுவோம்' என்று பதிலளித்துள்ளனர். இப்படி ராம்ஜிநகர், ஓ.ஜி குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறித்து பல தகவல்கள் உள்ளன" என்றார்.

விநோத திருடன்!

குமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் செல்போன் கடைக்குள் நுழையும் திருடனின் சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறது. செல்போன் கடை நடத்திவருபவர் சஜின். இவர், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் கடையைத் திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இதனால் அதிர்ச்சியடைந்த சஜின், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியபடி வரும் திருடன், செல்போன் கடைக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்தத் திருடன், அடிக்கடி பிளாஸ்டிக் கவரை தூக்கியபடி நடந்துசெல்கிறார்.

பிறகு கொள்ளையடித்துவிட்டு அவர் தப்பிச் செல்கிறார். அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் முகத்தை மூடிவந்த திருடனின் முகம், சிசிடிவி கேமராவில் தெளிவாகத் தெரிகிறது. திருடனின் ஒவ்வொரு செயல்களைச் சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது திருட்டை மறந்து அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

திருட்டு குடும்பம்!

கூடுவாஞ்சேரி பகுதியில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த தகவல் கிடைத்தது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த அண்ணன், தம்பி குடும்பத்தோடு தங்கி கொள்ளையடிப்பது தெரியவந்தது. அதாவது, கொள்ளையடிக்க திட்டமிடும் இடத்தில் சில மாதங்களுக்கு முன் அண்ணன், தம்பி ஆகியோர் குடும்பத்தோடு தங்குவார்கள்.

கொள்ளை
கொள்ளை

அவர்கள் கார், ஆடம்பர வாழ்க்கை என அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் வசதியாக வாழ்வதைப் போல காட்டிக் கொள்வார்கள். மேலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகி முழு ஃபயோடேட்டாவை எடுத்து கணவர்களிடம் கூறுவார்கள். அதன்பிறகு, நோட்டமிட்டு கொள்ளையடிப்பதுதான் அண்ணன் தம்பிகளின் வேலை. அண்ணனிடமிருந்து 150 சவரன் நகைகளும் தம்பியிடமிருந்து 50 சவரன் நகைகளையும் கூடுவாஞ்சேரி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் திருடச் செல்லும் இடங்களில் எல்லாவற்றையும் நாங்கள் கொள்ளையடிக்க மாட்டோம். வீட்டில் உள்ளவர்கள் வருத்தப்படக் கூடாது என்று கொஞ்சம் நகை, பணத்தை வைத்துவிட்டுச் செல்வோம் என்று கூறியுள்ளனர்.

100 முறை ஜெயிலுக்குச் சென்ற போலீஸ் ஏட்டு!

நடிகர் வடிவேல், `தலைநகரம்' படத்தில் நானும் ரவுடிதான் ஜெயிலுக்குப் போறேன் என்று சொல்லுவதைப் போல காட்சி இடம்பிடித்திருக்கும். அதுபோல 2002-ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கண்ணன் பணியாற்றினார். அப்போது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் 63 வயதான ஒருவர் கையில் பையோடு நின்றுகொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று போலீஸார் கேட்டனர். அதற்கு அவர், இங்கு நிற்க உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா என்று போலீஸாரிடம் கேள்விகேட்டுள்ளார். இதனால், லத்தியால் போலீஸார் அவரைத் தாக்கினர். மேலும் உங்களைப்பார்த்தால் திருடன்போல இருக்கிறது என்று போலீஸார் கூறியுள்ளனர்.

போலீஸ்
போலீஸ்

அதற்கு அவர், `ஆமாம் நான் திருடன்தான், 3-ம் நம்பர் வீட்டில் திருடிவிட்டு இப்போதுதான் வருகிறேன்' என்று கூறியதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்தபோது பிடிப்பட்டவர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நகைகள், பணத்தை திருடுபவர் என்று தெரியவந்தது. மேலும், அவரின் கையில் இருந்த பையில் திருடிய நகைகள் இருந்தன.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் நாகப்பட்டினம், தஞ்சாவூர் காவல் நிலையங்களில் ஏட்டுவாக வேலை பார்த்தவர் என்று தெரியவந்தது. ஓய்வுபெற்ற பிறகு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்ததும் தெரிந்தது. திருடிய பணம், நகைகளைக் கொண்டு மூன்று மகள்களுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்துவைத்துள்ளார். மேலும் அவர், 100 முறை சிறைக்கும் சென்றுள்ளார் என்ற தகவலும் தெரியவந்தது. திருட்டு வழக்கில் கைதாகும் போலீஸ் ஏட்டு சில நாள்களிலேயே ஜாமீனில் வெளியில் வந்துவிடுவார். மீண்டும் திருடிவிட்டுச் சிறைக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரை ஜாமீன் எடுக்கவே தனியாக வழக்கறிஞர்கள் டீம் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை ராயபுரத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ராயபுரத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். சம்பவத்தன்று மருத்துவமனைக்குச் செல்ல அவர் அதிகாலை நேரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், நர்ஸிடம் உங்களின் செல்போனை கொடுத்துவிடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். கொள்ளையர்களை எதிர்த்து நர்ஸ் போராடியுள்ளார். அப்போது, நர்ஸிடமிருந்து செல்போன் மற்றும் கைப்பையைப் பறித்துவிட்டு பைக் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், கத்தி
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், கத்தி

புகாரின் பேரில் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் எஸ்.ஐ செல்வக்குமார் மற்றும் போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால், கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும் வண்டியின் பதிவு நம்பர் சரியாக பதிவாகாததாலும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச்சமயத்தில் நர்ஸின் கணவருக்கு இரவில் போன் வந்துள்ளது.

அதில் பேசிய நபர், ``நான்தான் உன் மனைவியின் செல்போனை கொள்ளையடித்தேன். செல்போனுக்குள் இருக்கும் சில வீடியோக்கள், படங்கள் எனக்கு சபலத்தை ஏற்படுத்துகிறது'' என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு நர்ஸின் கணவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கொள்ளையன் பேசிய போன் நம்பரை போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். போலீஸாரும் அந்த நம்பரை ஆய்வுசெய்து அந்த முகவரிக்குச் சென்றனர். விசாரணையில் கொள்ளையன் பேசியது இன்னொருவரிடமிருந்து திருடிய செல்போன் நம்பர் என்று தெரியவந்தது.

அதன்பிறகும் விடாமல் விசாரணை நடத்தியபோது அந்த செல்போன் நம்பர், ராயபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசியதை போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக அந்தப் பெண்ணை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீஸார் அவரை துறைமுகம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் மூலம் செல்போனை கொள்ளையடித்தக் கும்பலை போலீஸார் பிடித்தனர்.

செல்போனை பறித்த கும்பலின் தலைவனின் பெயர் சுரேஷ். ஒல்லியான தேகம், நீண்ட தலைமுடி, இதுதான் சுரேஷின் அடையாளம். நடிகர் வடிவேல் போல சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் கத்தியோடு சினிமா பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோவாக எடுத்துவைத்திருந்தனர்.

செல்போன் பறிப்பு கும்பல்
செல்போன் பறிப்பு கும்பல்

போலீஸாரிடம் சிக்கிய பிறகு சுரேஷின் நீண்ட தலைமூடி காணாமல் போனது. சிறைக்குச் சென்ற சுரேஷ் ஜாமீனில் வந்தபிறகும் தொடர்ந்து கைவரிசைக் காட்டியதால் அவரை மீண்டும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சுரேஷை போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர் தவறி விழுந்ததில் அவரின் கை முறிந்தது தனிக்கதை.

இவர்களைப் போல தமிழக காவல் துறையினரிடம் சிக்கும் காமெடி திருடர்களின் பட்டியல் நீள்கின்றன. விசாரணையில் காமெடி சொல்லும் கதையைக் கேட்கும் விசாரணை அதிகாரிகள் வழக்கை மறந்து சிரித்த சம்பவங்களும் உள்ளன. அதைப்பற்றி அடுத்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.