Published:Updated:

``வீட்ல இருக்க பிடிக்கல; ஜெயில் சாப்பாடு சூப்பர்!"- காமெடி திருடனின் சுவாரஸ்ய ஸ்டோரி

தாம்பரத்தில் சிக்கிய திருடன், `வீட்டில் இருக்க பிடிக்கவில்லை, ஜெயிலில் சாப்பாடு சூப்பராக இருக்கிறது. அதனால்தான் சிறைக்குச் செல்ல தொடர்ந்து திருடுகிறேன்' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடன் ஞானபிரகாசம்
திருடன் ஞானபிரகாசம்

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். அதிலும் போலீஸாரிடம் சிக்கும் காமெடித் திருடர்களின் கதையைக் கேட்கும் விசாரணை அதிகாரிகள், வழக்குகளை மறந்து வாய்விட்டு சிரித்த சம்பவங்களும் உண்டு. காமெடி திருடர்களின் கதையை செய்தியாக வெளியிட்டு இருந்தோம். அதன்தொடர்ச்சிதான் இந்தச் செய்தி. தாம்பரம் காவல் நிலையத்தில் இன்னொரு காமெடி திருடன் நேற்று சிக்கியுள்ளார். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் வாய்விட்டு சிரித்துள்ளனர்.

ஞானபிரகாசம் திருடிய பைக்
ஞானபிரகாசம் திருடிய பைக்

இந்த காமெடி திருடனின் கதையைக் கேட்டால் அனைவருக்கும் சிரிப்பு இலவசம். சென்னை மேற்கு தாம்பரம், கைலாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர், குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஸ்வரன், பல இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் தேவிகா விசாரித்தார். இந்தநிலையில் ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டபோது அதிகாலை நேரத்தில் பைக்கிலிருந்து ஒருவர் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்தார்.

ஞானபிரகாசம் திருடிய பைக்
ஞானபிரகாசம் திருடிய பைக்

அதைப்பார்த்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது பைக்கில் வந்தேன். பெட்ரோல் காலியாகிவிட்டது. இதனால்தான் பெட்ரோல் திருடினேன் என்று கூலாகக் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் அந்த நபரை பைக்கோடு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அப்போதுதான் அது விக்னேஸ்வரனின் பைக் என்று தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் பல ருசிகர தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பெட்ரோல் திருடியபோது எங்களிடம் சிக்கியவரின் பெயர் ஞானபிரகாசம் (51), சடகோபன்நகர், பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சி.சி.டி.வி. கேமராவைத் திருடிய வழக்கில் தாம்பரம் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 29.6.2019-ல் ஜாமீனில் வெளியில் வந்த ஞானபிரகாசம், 5.7.2019-ல் பைக்கைத் திருடியுள்ளார்.

போலீஸ்
போலீஸ்

அந்த பைக்கில் ஜாலியாக அவர் சுற்றியுள்ளார். அப்போது பெட்ரோல் காலியாகிவிட்டது. பெட்ரோல் போடுவதற்கு பணமில்லை. இதனால்தான் இன்னொரு பைக்கிலிருந்து பெட்ரோல் திருடும்போது எங்களிடம் சிக்கிக் கொண்டார். ஞானபிரகாசத்தை கைது செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளோம். அவரிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்துள்ளோம்"என்றார்.

ஞானபிரகாசம், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் படித்துவருகின்றனர். கிடைத்த வேலைகளைச் செய்வேன். அதில் கிடைக்கும் வருமானத்தை வீட்டில் கொடுப்பேன். ஆனால் என்னை வீட்டில் யாரும் சரியாகக் கவனிப்பதில்லை.

ஒரு குற்றவழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றேன். ஜெயிலில் கொடுத்த சாப்பாடு வீட்டுச் சாப்பாட்டை விட சூப்பராக இருந்தது. அந்த ருசி என் நாக்கில் இன்னும் இருக்கிறது. ஆனால் அதற்குள் என்னை ஜாமீனில் வெளியில் எடுத்துவிட்டார்கள். ஜெயில் சாப்பாடு சூப்பர் என்று வீட்டில் சொல்ல முடியாது. இதனால்தான் பைக்கைத் திருடினேன். இப்போது மீண்டும் சிறைக்குச் சென்று ஜெயிலில் சாப்பிடப் போகிறேன்.
திருடன் ஞானபிரகாசம்

மேலும், வீட்டில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. ஜெயிலில்தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஞானபிரகாசம், தாம்பரம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சிசிடிவி கேமராவைத் திருடும் சிசிடிவி பதிவு போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதில், சிசிடிவி கேமராவைத் திருடுவதற்கு முன் ஞானபிரகாசம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நடமாட்டத்தை முதலில் கவனிக்கிறார். பிறகு, அடையாளம் தெரிந்துவிடாமலிருக்க முகத்தை மறைத்த படி செல்கிறார். அதன்பிறகு சிசிடிவி கேமராவைத் திருடுகிறார்.

சிசிடிவி கேமராவைத் திருடுவதற்கு முன்பு வரையிலான பதிவுகள் அந்த கேமராவிலேயே பதிவாகியுள்ளன. அதை வைத்துதான் ஞானபிரகாசத்தை அந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

எதற்காக இப்படித் திருடுகிறாய் என்று ஞானபிரகாசத்திடம் போலீஸார் கேட்டதற்கு, எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் சார், செலவுக்கும் சாப்பாட்டுக்கும் பணமில்லை. அதனால் சிசிடிவி கேமராவைத் திருடினேன் என்று கூறியுள்ளார்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

ஞானபிரகாசத்திடம் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று தாம்பரம் போலீஸார் அறிவுரை கூறி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், ஞானபிரகாசத்தின் மீது வேறு எந்தக் காவல் நிலையங்களிலாவது வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்றும் தாம்பரம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஞானபிரகாசம் கூறிய தகவலைக் கேட்டு தாம்பரம் காவல் நிலைய போலீஸார் வாய்விட்டு சிரித்துள்ளனர்.