Published:Updated:

திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் வெட்டிக் கொலை! - நீடாமங்கலத்தில் பதற்றம்

காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் நடேச தமிழார்வன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் இந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நடேச தமிழார்வன்
நடேச தமிழார்வன்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதியின் ஒன்றியச் செயலாளராகவும், திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துவந்தார். வீட்டு வசதி வாரிய உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரின் மகன் ஸ்டாலின் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார்.

நடேச தமிழார்வன், நேற்று மாலை நீடாமங்கலத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்குத் தனது காரில் வந்து இறங்கியிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், அரிவாளால் நடேச தமிழார்வனைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிக்கிறார்கள். நீடாமங்கலம் பகுதியில் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக வலம்வந்த நடேச தமிழார்வன் கொலை செய்யப்பட்டது, இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நடேச தமிழார்வனைப் படுகொலை செய்த கொலையாளிகளையும் இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்களையும் உடனடியாகக் கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்கள்.

மயிலாடுதுறை: பெருமாள் கோயில் அறங்காவலர் நீரில் மூழ்கடித்துக் கொலை! -இராமனுஜர் பீட பட்டர் கைது

நடேச தமிழார்வனின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு