Published:Updated:

மயானப்பாதை பிரச்னை... வீடுகள் சூறை; காளை விடும் விழாவில் கலவரம் - கலசப்பாக்கம் பகுதியில் நடப்பதென்ன?

வீரளூரில் காவல்துறை

பட்டியல் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் திடீரென நுழைந்த மாற்று சமூகத்தினர், அந்த மக்களின் வீடுகளை சூறையாடி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மயானப்பாதை பிரச்னை... வீடுகள் சூறை; காளை விடும் விழாவில் கலவரம் - கலசப்பாக்கம் பகுதியில் நடப்பதென்ன?

பட்டியல் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் திடீரென நுழைந்த மாற்று சமூகத்தினர், அந்த மக்களின் வீடுகளை சூறையாடி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
வீரளூரில் காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ளது வீரளூர் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். இந்த பிரிவினர் இறந்தவர்கள் உடல்களை மயானத்துக்கு எடுத்துச் செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், தொலைதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதாலும் மாற்றுப்பாதை கேட்டு நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனராம். இவர்கள், மயான பகுதிக்கு செல்லும் மாற்றுப்பாதையாக 'போளூர் நெடுஞ்சாலையை பயன்படுத்த தொடங்கிய போது, பட்டியல் சமூகம் அல்லாத மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த பட்டியல் சமூகத்தின் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அந்த உடலை மயானத்துக்கு பொதுப்பாதை வழியே கொண்டு செல்வதில் எதிர்ப்பு நிலவியதால், காவல்துறையின் உதவியுடன் மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலவரம் நடந்த பகுதி
கலவரம் நடந்த பகுதி

இந்த தொடர் பிரச்னை காரணமாக, ஆரணி கோட்டாட்சியர் தலைமையில் அந்த சமயம் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இறந்தவர்களின் உடலை, பட்டியல் பிரிவினர் பொதுவழியிலேயே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 11-ம் தேதியும் தங்கள் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை போலீஸாரின் பாதுகாப்புடன் பொதுவழியில் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர் பட்டியல் பிரிவினர். அப்போதும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நேற்று முன் தினம் வீரளூரில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலையும் பொது வழியில் கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளை பட்டியலின மக்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த ஆரணி கோட்டாட்சியர், எஸ்.பி மற்றும் போலீஸார் நேற்று முழு ஊரடங்கு என்பதால் வீரளூருக்கே வந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 'அனைவருக்குமான பொது வழியில் அனுமதிக்க வேண்டும்' என ஒரு தரப்பினரும், 'அனுமதிக்கக்கூடாது' என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடைக்கப்பட்ட வீட்டின் கண்ணாடிகள்
உடைக்கப்பட்ட வீட்டின் கண்ணாடிகள்

அனுமதிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பினர் கூட்டமாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டியல் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் திடீரென நுழைந்த மாற்று சமூகத்தினர், அந்த மக்களின் வீடுகளை சூறையாடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவலறிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து களைத்துள்ளனர் போலீஸார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த டி.ஐ.ஜி ஆனி விஜயா, நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென எங்கள் பகுதிக்குள் கூட்டமாக புகுந்த மாற்று சமூகத்தினர், தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டி எங்களின் வீடுகள், வாகனங்கள், உடமைகள் என அனைத்தையும் அடித்து உடைத்துவிட்டனர். அந்த சமயம், நாங்கள் எல்லோரும் அச்சத்தில் உறைந்து போனோம். எங்கள் பகுதியில் நான்கு தெருக்கள் வரை இருக்கின்றன. அனைத்து தெருக்களிலும் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டனர். சுமார் மூன்று பேர் லேசான காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். போலீஸ் இங்குதான் பாதுகாப்புக்காக இருக்கிறார்கள். ஆனால், இதுவரைக்கும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கலவரத்தால் ஏற்பட்ட பயத்தால் இறந்த பாட்டியின் உடலும் எங்கள் ஊருக்கு எடுத்து வரப்படாமல் மருத்துவமனையிலேயே இருக்கிறது" என்றனர் ஆதங்கத்துடன்.

கலவரம்
கலவரம்

இந்த நிலையில், ``பட்டியல் பிரிவினர் குடியிருப்புக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தி உள்ளவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன். மேலும், பல்வேறுபட்ட தரப்பில் இருந்தும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அதே போல, கலசப்பாக்கம் அருகில் உள்ள ஆதமங்கலம் புதூரில் நடைபெற்ற காளை விடும் விழாவில் இதே போன்றதான ஒரு பரபரப்பு கைக்கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொங்கலை ஒட்டி நடைபெற்ற இந்த காளை விடும் விழாவிற்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக திரண்டு அங்கு வந்துள்ளனர். விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே இருதரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கல் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அருகிலிருந்த ஓட்டு வீடுகளிலிருந்து ஓடுகளை பிரித்து தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தால் காளை விடும் விழாவை பாதியிலேயே நிறுத்திய காவல்துறையினர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கலைத்தோடு, விழாக்குழுவினர் மீது வழக்கு பதிந்தனராம்.

ஆதமங்கலம் கலவரம்
ஆதமங்கலம் கலவரம்

இந்த இரு இடங்கள் மட்டுமின்றி, கலசப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலும் அடிக்கடி இதுபோன்ற இருதரப்பு மோதல்கள் நடைபெறுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.

வீரளூர் சம்பவம் தொடர்பாக ஆரணி ஆர்.டி.ஓ கவிதாவிடம் பேசினோம். ``பொது வழிப்பாதையை அனைவரும் பயன்படுத்தலாம் என்று தான் நாங்கள் சொல்லி வருகிறோம். கடந்த 11-ம் தேதி ஒருவர் உயிரிழந்த போது இதே பொதுவழி பாதையில்தான் எடுத்துச் சென்றோம். பொதுவழி பாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆகவே, சமூகத்தை காரணம் காட்டி 'எடுத்துச் செல்லக்கூடாது' என கூறுவது தவறு என மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம்" என்றார்.

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம் பேசினோம். ``வீரளூர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து சிறையில் அடைக்கும்படி கூறியுள்ளேன். ஆதமங்கலம் புதூர் காளை விடும் விழாவில் நடைபெற்ற பிரச்சனை காதல் தொடர்புடையது. இரு வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். திருவிழா நடைபெற்ற அன்று ஒரே இடத்தில் இரு தரப்பும் வந்தபோது இந்த பிரச்னை நடைபெற்றுள்ளது. இரு தரப்பிலிருந்தும் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அது என்னவென்று விசாரித்துவிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சமூகத்தை மையப்படுத்தி நிகழ்த்தப்படும் இதுபோன்ற சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதும், முழுவதுமாக கலையப்பட வேண்டியதும் அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism