Published:Updated:

கும்பகோணம்: நிதி நிறுவன அதிபர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது ரூ.15 கோடி மோசடி புகார்!

மோசடிப் புகாருக்கு ஆளான சகோதரர்கள்
மோசடிப் புகாருக்கு ஆளான சகோதரர்கள்

இந்தப் புகார்கள் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் புகாரளித்த தம்பதியரை அழைத்து விசாரித்துவருகின்றனர். இந்தப் புகார் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பிரமாண்டமாக வலம்வந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி பணம் பெற்றும் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அந்தப் பணத்தை மீட்டுத் தரும்படியும் துபாயைச் சேர்ந்த இளம்பெண் தொழில் அதிபரும், அவருடைய கணவரும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது.

எம்.ஆர்.கணேஷ்
எம்.ஆர்.கணேஷ்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். பெரும்பாலும் அதில் வலம்வருவதால் `ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என்றே அவர்களை கும்பகோணம் பகுதியில் அழைக்கின்றனர். விக்டரி என்ற பெயரில் சிட்பண்ட், கிருஷ் பால்பண்ணை உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அவை இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என்ற அறிவிப்புடன் சிட்பண்ட் நடத்தில்வந்ததால், இவர்கள் நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், துபாய் நாட்டில் விளம்பர நிறுவனம் நடத்திவருவதாக கூறப்படும் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜெயிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ``எம்.ஆர்.கணேஷ் -எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் தங்க நகை வியாபாரம் செய்தால் ஆறு மாதங்களில் ஒன்றுக்கு இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு லாபம் பெறலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கின் மூலமாகவும், நேரடியாகவும் அவர்களிடம் ரூ.15 கோடி வரை பணம் கொடுத்தோம்.

புகார் அளித்த தம்பதி
புகார் அளித்த தம்பதி

தற்போது பணத்தைத் திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதுடன், ஆட்சியில் உள்ளவர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர். எனவே நாங்கள் அளித்த பணத்தை மீட்டுத் தருக” என குறிப்பிட்டுள்ளனர். சில மாதங்களாகவே பணம் பெற்ற பலரிடம் அந்தச் சகோதரரர்கள் பணத்தை திருப்பி தரவில்லை என அரசல் புரசலாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரடியாகப் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கும்பகோணம் பகுதியில் விசாரித்தோம். ``திருவாரூர் மாவட்டம், மறையூர் அவர்களுடைய பூர்வீக கிராமம். `எங்களுக்கு கும்பகோணம் பூர்வீகம்’ எனச் சொல்லி சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீநகர் காலனியில் செட்டில் ஆனார்கள். கும்பகோணம் கொற்கை அருகே கிரிஷ் என்ற பெயரில் வெளிநாட்டுப் பசு மாடுகளை வைத்து பால் தொழில் செய்துவந்தனர். பாலைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகக் கூறினர்.

தஞ்சாவூர்: 3 மணி நேரம் மாயமான தாசில்தார் ஜீப்! - போதை இளைஞர்  கைது

அத்துடன் மும்பையில் மருந்து கம்பெனி இருக்கிறது என்றும், துபாய், லண்டன் ஆகிய நாடுகளில் தொழில் செய்துவருவதாகவும் எல்லோரிடத்திலும் தங்களை பற்றிய பிரமாண்டத்தை உருவாக்கினர். அத்துடன் விக்டரி என்ற பெயரில் நடத்திய நிதி நிறுவனம் மற்றும் அடகுக்கடையும் அவர்களுடைய அடையாளமாக மாறிப்போனது. அந்த நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் செலுத்தினால் ஆறு மாதங்களில் 4 லட்சம் ரூபாயாகத் திருப்பித் தரப்படும் என அறிவித்ததால், கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர்.

இந்தநிலையில் தங்களுக்கென சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கினர். இதற்காக ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஒன்றையும் அமைத்தனர். பாலைப் பதப்படுத்தி ஹெலிகாப்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிவருவதாகவும் கூறிவந்தனர். ஒரு வருடத்துக்கு முன்பு அர்ஜுன் ஏவியேஷன் என்கிற பெயரில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா செல்வதற்கு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடவிருப்பதாகக் கூறி அதற்கான நிறுவனத்தை பிரமாண்டமாகத் தொடங்கினர்.

எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன்
எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன்

சில வருடங்களுக்கு முன்பு கணேஷின் மகன் அர்ஜுனுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவியதை பார்த்த பலரும் வாயடைத்துப்போனார்கள். உரிய அனுமதி பெறாமல் ஹெலிகாப்டரைப் பறக்கவிட்டதாகவும் அப்போது சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். கணேஷுக்கு பா.ஜ.க-வில் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக அணியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரிடம் தங்களுக்கு நல்ல நட்பு இருப்பதாகக் கூறி அனைவரையும் கவர்ந்தனர். சமீபத்தில் அப்போதைய பா.ஜ.க தமிழகத் தலைவரான முருகன் மற்றும் முக்கிய நிர்வாகியான கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டுக்குச் சென்று சந்தித்தனர்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட சீட் கேட்டு காய்களைநகர்த்தினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கொரோனா முதல் அலை லாக்டெளனின் போதே பணம் செலுத்தியவர்களுக்கு முறையாக அவர்கள் பணம் தரவில்லை எனக் கூறப்பட்டது. செல்வந்தர்கள் பலர் அவர்களுடைய சிட்பண்டில் பணம் கட்டியிருந்ததால் யாரும் புகாராகத் தர முன்வரவில்லை.

பி.ஜே.பி நிர்வாகிகளுடன் சகோதரர்கள்
பி.ஜே.பி நிர்வாகிகளுடன் சகோதரர்கள்

இதையடுத்து கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. பணம் கட்டியவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துவந்ததாகத் தெரிகிறது. கொரோனா லாக்டெளனால் பணம் முடங்கிவிட்டது. கொடுத்து விடுகிறோம் எனக் கூறி சகோதரர்கள் சமாளித்துவந்தனர். ஆனாலும் பணம் தராததால் கடந்த சில வாரங்களாகவே அவர்கள் பற்றிய பேச்சுகள் எழுந்து வண்ணம் இருந்தன. இந்தநிலையில்தான் தற்போது ஜபருல்லா-பைஜோர்பானு வெளிப்படையாகப் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்னும் பல புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளரான குருமூர்த்தி என்பவர், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜெயிடம், ``எம்.ஆர்.கணேஷ் சகோதரர்கள் கும்பகோணம் பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். பெரிய கடைத்தெருவில் மகா லெட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பேரூலால் என்பவரும் அவரின் குடும்பத்தினரும் குறிப்பிட்ட சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தும், தன்னிச்சையாகச் செயல்பட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்துள்ளார்.

9 ஆண்டுகள் டெலிகாம் அனுபவம்; OLX-ல் விற்பனை செய்தவர்களிடம் Paytm மூலம் மோசடி - சிக்கிய உ.பி ஆசாமி!

இந்தப் புகார்கள் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் புகார் அளித்த தம்பதியை அழைத்து விசாரித்துவருகின்றனர். இந்தப் புகார் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

புகார் குறித்து எம்.ஆர்.கணேஷ் கருத்தை அறிய அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டோம். ஆனால் அவரின் செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவர்கள் தரப்பு விளக்கம் தரும்பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு