Published:Updated:

சிவகங்கை: கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் மீது புகார்!

ஆக்கிரமிப்பு கட்டடம் சீல்
ஆக்கிரமிப்பு கட்டடம் சீல்

சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு.

முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சிலர் வீடுகட்டி ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலத்தை முன்னாள் கதர் கிராமத்தொழில்கள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்களும் ஆக்கிரமித்து, வணிக நோக்கில் கட்டடங்கள் கட்டிவருவதாக தி.மு.க நகர் செயலாளர் துரை ஆனந்த் முதலைமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்குப் புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் முன்னாள் அமைச்சரின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலம் சீல் வைக்கப்பட்டது.

துரை ஆனந்த்
துரை ஆனந்த்

இது சம்பந்தமாகப் புகார் அளித்த சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்திடம் பேசினோம். "சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கௌரி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர், எட்டு சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 11 ஏக்கர் நிலத்தை அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அதில் கம்பிவேலி அமைத்து மிகப்பெரிய வணிக வளாகம் கட்டிவந்தார்கள். அதற்கு விதிமுறைகளை மீறி மின்சார இணைப்பும் பெற்றிருந்தனர். அந்த இடத்தை மீட்க வேண்டும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும், அறநிலையத்துறைக்கும், எங்கள் மாவட்ட அமைச்சருக்கும் புகார் அளித்தேன்.

புகார்
புகார்
அறநிலையத்துறையின் அறிவிப்பு
அறநிலையத்துறையின் அறிவிப்பு

அதைத் தொடர்ந்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கோயில் இடத்தை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சிவகங்கை நகர மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இந்தப் புகார் எழுந்தபோது மறுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தற்போது அமைதியாக உள்ளார். அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் ஆக்கிரமித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு