Published:Updated:

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை, மிரட்டல்... தலைமறைவான ஆசிரியரைத் தேடும் போலீஸ் - என்ன நடந்தது?

ராமநாதபுரம்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் அவரை தேடிவருகின்றனர்.

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை, மிரட்டல்... தலைமறைவான ஆசிரியரைத் தேடும் போலீஸ் - என்ன நடந்தது?

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் அவரை தேடிவருகின்றனர்.

Published:Updated:
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியம் சிறுவயல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜூலியஸ் ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், இவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில், விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம், `தலைமை ஆசிரியர்மீது புகார் கூறினால், உங்களை ஃபெயில் ஆக்கிவிடுவேன்' என அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்பவர் மாணவிகளை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் மீண்டும் தங்கள் பெற்றோரிடம் கண்ணீர்மல்க தெரிவிக்கவே, ஒட்டுமொத்த சிறுவயல் கிராம மக்களும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, `பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்க விடாமல் மாணவிகளை மிரட்டும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி மாணவிகளிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையிலும், அதைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு ஜூலியஸ் ரவிச்சந்திரன் குறித்து விசாரித்தபோது அவர் ஏற்கெனவே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேட்டபோது, ``மாவட்டக் கல்வி அலுவலர்கள், சைல்டு லைன், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழும அதிகாரிகள் மூலம் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினோம். அப்போது ஜூலியஸ் ரவிச்சந்திரன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதற்கு முன்பு அவர் பணியாற்றிய இடங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டபோதுதான், எங்களுக்கு இந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன்
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன்

கடந்த 2018-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். திருநெல்வேலி நகர் காவல் நிலைய போலீஸில் அந்தப் பள்ளி மாணவிகள் புகார் அளித்ததன் அடிப்படையில், அவர்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்தது. அதேபோல அவருக்கு உடந்தையாக இருக்கும் ஆங்கில ஆசிரியர் ஜெயபால் 12 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றிவருவதும் எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது. இவர்கள் இருவர்மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்'' எனக் கூறினார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் நயினார் கோவில் போலீஸில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன், ஆங்கில ஆசிரியர் ஜெயபால் மீது புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தச் சென்றபோது இருவரும் தலைமறைவாகியிருப்பது தெரிந்திருக்கிறது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.