Published:Updated:

அரக்கோணம்: 2 பெண்களுடன் ரகசியமாகக் குடும்பம் நடத்திய லாரி ஓட்டுநர்! - காவல் நிலையம் சென்ற பஞ்சாயத்து

லாரி ஓட்டுநர் பிரகாஷ்
லாரி ஓட்டுநர் பிரகாஷ்

இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, இருவருக்குமே தெரியாமல் குடும்பம் நடத்திவந்த லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டாவது மனைவி கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் எதிரிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். லாரி ஓட்டுநராக வேலை பார்க்கும் இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரியில் மதுரைக்குச் செல்லும்போது விபத்தில் சிக்கியிருக்கிறார். காயம் ஏற்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். அப்போது, அந்த மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றிவந்த அபிராமி (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரகாஷ் தனது சொந்த ஊரான அரக்கோணத்துக்கு அபிராமியை அழைத்து வந்து டவுன்ஹால் நான்காவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கவைத்திருக்கிறார்.

கைக்குழந்தையுடன் போராட்டம் செய்த பெண்
கைக்குழந்தையுடன் போராட்டம் செய்த பெண்

இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அபிராமி தற்சமயம் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையே, கணவன் பிரகாஷின் நடவடிக்கையில் அபிராமிக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. வேலைக்குச் சென்றால் பல நாள்கள் கழித்துத்தான் வீட்டுக்கு வந்திருக்கிறார். செலவுக்குக்கூட பணம் தராமல் இருந்ததால் அபிராமி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இந்தநிலையில்தான், பிரகாஷுக்கு ஏற்கெனவே திருமணமான தகவல் அபிராமிக்குத் தெரியவந்திருக்கிறது. பிரகாஷுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே சோனியா என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்திருக்கிறதாம். முதல் மனைவியை அவர் அரக்கோணம், சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயில் தெருவில் தங்க வைத்திருக்கிறாராம்.

சென்னை: மதுபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன்! - தாய் கொடுத்த புகாரில் கைது

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவியிடமும், இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் முதல் மனைவியிடமும் மாறி மாற அவர் குடும்பம் நடத்திவந்திருப்பதாகவும் சொல்கிறார் அபிராமி. தன்னை ஏமாற்றியது குறித்து கணவன் பிரகாஷிடம் கேள்வி எழுப்பி சண்டை போட்டிருக்கிறார். உண்மை தெரிந்துவிட்டதே என அச்சப்பட்ட பிரகாஷ் வீட்டிலிருந்து வெளியேறி திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனது செல்போன் எண்ணையும் சுவிட்ச் ஆஃப் செய்துவைத்திருக்கிறார்.

லாரி ஓட்டுநர் பிரகாஷ்
லாரி ஓட்டுநர் பிரகாஷ்

முதல் மனைவியின் வீட்டிலும் இல்லை. தாய் வீட்டுக்குச் சென்று கேட்டாலும் சரியான பதில் கூறவில்லையாம். இதனால், அதிர்ச்சியடைந்த இரண்டாவது மனைவி அபிராமி மதுரையிலுள்ள தனது தாயைத் தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்திருக்கிறார். மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த தாய் நாகேஸ்வரி, அண்ணன் அஜீத் ஆகியோருடன் அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் திடீரென கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் அபிராமி. தகவலறிந்து வந்த அரக்கோணம் நகர போலீஸார் அவர்களைச் சமரசம் செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு