Published:Updated:

கொடைக்கானல்: ஓ.பி.எஸ் தம்பி மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் புகார் - நடந்தது என்ன?

ஓ.ராஜா

இழந்த நிலத்தை மீட்டெடுக்க முடியாது என நினைத்திருந்த முனியாண்டியிடம், ஓ.ராஜா தரப்பினர் 5 லட்ச ரூபாயைக் கொடுத்து சில டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடக் கோரியுள்ளனர். அப்போதுதான் நிலத்தை மீட்க இன்னும் வழியிருப்பதாக அறிந்து புகார் அளித்துள்ளனர்.

கொடைக்கானல்: ஓ.பி.எஸ் தம்பி மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் புகார் - நடந்தது என்ன?

இழந்த நிலத்தை மீட்டெடுக்க முடியாது என நினைத்திருந்த முனியாண்டியிடம், ஓ.ராஜா தரப்பினர் 5 லட்ச ரூபாயைக் கொடுத்து சில டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடக் கோரியுள்ளனர். அப்போதுதான் நிலத்தை மீட்க இன்னும் வழியிருப்பதாக அறிந்து புகார் அளித்துள்ளனர்.

Published:Updated:
ஓ.ராஜா

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (59). இவர், `தன் மனைவி பெயரில் உள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக’ ஓ.பி.எஸ்-ஸின் சகோதரரும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜா மீது இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

முனியாண்டி
முனியாண்டி

அதில், `திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் என்னுடய மனைவி சந்தானலட்சுமியின் பெயரில் 1 ஏக்கர் 83 சென்ட் நிலம் இருக்கிறது.‌ அதை என் மகளின் திருமணத்துக்காகவும், குடும்பத் தேவைக்காகவும் விற்க முடிவு செய்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு ஓ.பி.எஸ் சகோதரர், ஓ.ராஜா கிரயம் செய்துகொள்வதாக பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மூலம் தொடர்புகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் நிலத்தை ரூபாய் 40 லட்சத்துக்குக் கிரையம் பேசி அதற்கான பணத்தை மூன்று மாதங்களில் கொடுப்பதாகத் தெரிவித்தனர். அதை உண்மை என நம்பி, கடந்த 2010-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதியன்று ஓ.ராஜாவின் உறவினரான பெரியகுளம் கிருஷ்ணன் பெயருக்கு `பொது அதிகாரம்’ என்றழைக்கப்படும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தோம்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

ஆனால் பேசியபடி பணத்தைத் தராமலும், நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை வைத்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் பெயருக்குப் பெயரளவில் கிரயப் பத்திரம் எழுதியும் கொடுத்துள்ளனர்.‌ இதையடுத்து நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை ரத்துசெய்து தாருங்கள் அல்லது எங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணம் ரூபாய் 40 லட்சத்தைத் தருமாறு கேட்டதற்கு, தரமறுத்த ஓ.ராஜா கொலை மிரட்டல் விடுத்தார்.‌

அதன் பின்னர்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் மனு அளித்தோம். ஆனால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டும், ஓ.பி‌.எஸ் மற்றும் ஓ.ராஜாவின் அரசியல் செல்வாக்கால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மோசடி செய்து அபகரிக்கப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டுத்தருமாறும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்ற ஓ.ராஜா, கிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய மூன்று பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ.ராஜா
ஓ.ராஜா

முனியாண்டியின் வழக்கறிஞர் தேவராஜனிடம் பேசினோம். ``இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஓ.ராஜாவுக்கு உறவினர்கள்தான். இப்போது அபகரித்த இடத்தை வேறு நபருக்கு விற்க முயற்சி நடந்துவருகிறது. தாங்கள் இழந்த நிலத்தை மீட்டெடுக்க முடியாது என நினைத்திருந்த முனியாண்டியிடம், ஓ.ராஜா தரப்பினர் 5 லட்ச ரூபாயைக் கொடுத்து சில டாக்குமென்ட்டுகளில் கையெழுத்திடக் கோரியுள்ளனர். அப்போது தன் நிலத்தை மீட்க இன்னும் கொஞ்சம் வழியிருப்பதாக அறிந்து மீண்டும் புகார் அளித்துள்ளனர். தற்போது அளித்துள்ள மனுவை விசாரிக்க போலீஸார் முன்வந்துள்ளனர்” என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க ஓ.ராஜாவின் எண்ணைத் தொடர்புகொண்டோம். நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும் பட்சத்தில் அதனையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.