Published:Updated:

கேரளா: வைரல் டீச்சருக்கு சினிமா வாய்ப்பு... மறுத்ததால் ஃபேஸ்புக் பதிவு... வழக்கறிஞர் மீது வழக்கு!

கேரளா வைரல் டீச்சர் சாய் ஸ்வேதா
கேரளா வைரல் டீச்சர் சாய் ஸ்வேதா

``இந்தப் பதிவைப் பார்த்து முதலில் நான் தளர்ந்துபோய்விட்டேன். என் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் தைரியம் கொடுத்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளேன்" என்கிறார் கேரளா வைரல் டீச்சர் சாய் ஸ்வேதா.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திட்டத்தை கேரள அரசு தொடங்கியிருந்தது. அப்போது, கோழிக்கோடு மாவட்டம் மேப்பயூரைச் சேர்ந்த ஆசிரியை சாய் ஸ்வேதா தீலி, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு `மிட்டுப்பூனை தங்கு பூனை' என்ற பாடத்தை நடத்தினார். அதில் அவரது முக பாவனையும், கண் அசைவும், பாடம் எடுத்த ஸ்டைலும் உலக மலையாளிகள் கவனத்தை ஈர்த்தது. அவரது வீடியோவும் வைரலானது. `தங்கு பூனை' என்று அழைக்கும் அளவுக்கு பிரபலமானார் சாய் ஸ்வேதா.

இந்நிலையில் இப்போது, தனக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு விடுத்து, மறுத்ததால் சமூக வலைதளத்தில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் பதிவிட்டதாக வழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமன மீது சாய் ஸ்வேதா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமன
வழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமன

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமன, சாய் ஸ்வேதாவுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார். இப்போது கொச்சியில் வசித்துவரும் அவர், சாய் ஸ்வேதா டீச்சருக்கு போன் செய்து, தான் புதிதாக ஒரு சினிமா எடுக்கப் போவதாகவும், அதில் ஆசிரியர் வேடத்தில் நடிக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். அதற்கு சாய் ஸ்வேதா, ``நான் இப்போது வேறு ஒரு மீடியாவில் நிகழ்ச்சிகள் செய்வதால் அவர்களிடம் பேசுங்கள்" எனக் கூறியுள்ளார்.

அவர்களிடம் பேசுவதாகக் கூறிய ஸ்ரீஜித் பெருமன, ``உங்களுக்கு நடிக்க விருப்பம் உள்ளதா?" எனக் கேட்டிருக்கிறார். ``எனக்கு நடிக்க ஆஃபர்கள் வந்துள்ளன. யாரிடமும் பதில் கூறவில்லை" என பதிலளித்துள்ளார்.

இதையடுத்து சாய் ஸ்வேதா குறித்து முகநூல் பக்கத்தில் ஸ்ரீஜித் பெருமன, `விளையாமல் பழுக்கும் வைரல் செலிப்ரிட்டிகள்' என எழுதியுள்ளார். அந்த முகநூல் பதிவில் உள்ள வார்த்தைகள் தன்னை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் சாய் ஸ்வேதா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சாய் ஸ்வேதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` `தங்கு பூனை' வகுப்பு மூலம் வைரலானதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கிறார்கள். நான் அந்த நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாகக் கலந்துகொள்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா வாய்ப்புத் தருவதாக கூறி ஒருவர் அழைத்திருந்தார். அதைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் என் கணவரிடமும், குடும்ப நண்பர்களிடமும் பேசினேன். என் கணவர் அந்த நபரிடம் பேசினார். இந்த நிலையில், இப்போது சினிமா வேண்டாம் என நான் முடிவு செய்து, அதை எனது குடும்ப நண்பர் மூலம் அவருக்குத் தெரிவிக்கவும் செய்தேன்.

சாய் ஸ்வேதா டீச்சர்
சாய் ஸ்வேதா டீச்சர்

அதன் பின்னர் அவர் என்னை அவமானப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இது பற்றி உண்மை அறியாமல் பலர் அந்தப் பதிவை ஷேர் செய்ததுடன், கமென்டுகளும் போட்டனர். எனக்கு வேண்டிய பலர் என்னை அழைத்து இது பற்றி கேட்கவும் செய்தனர்.

ஒரு பெண், வெளி நபர் ஒருவரது கோரிக்கையை ஏற்காமல் இருந்தால் அவரை பொதுவெளியில் அவமானப்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்திருப்பது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது. இந்த பதிவைப் பார்த்து முதலில் நான் தளர்ந்துபோய்விட்டேன். என் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் தைரியம் கொடுத்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாய் ஸ்வேதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஸ்ரீஜித் பெருமன, ``வெளிநாட்டில் உள்ள எனது நண்பர் ஒருவர் எடுக்கும் சினிமாவுக்கு நான் லீகல் அட்வைஸராக உள்ளேன். அவர் இங்கு இல்லாததால் நான்தான் இங்குள்ள விஷயங்களை கவனித்துக்கொள்கிறேன். அந்த சினிமாவில் டீச்சராக சாய் ஸ்வேதா நடித்தால் நன்றாக இருக்கும் என எனது நண்பர் கூறினார். அதற்காக நான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மீடியா நண்பர் ஒருவர் மூலம் சாய் ஸ்வேதா டீச்சர் நம்பரை வாங்கிப் பேசினேன்.

அப்போது, தனது நிகழ்ச்சிகள் மற்றும் தேதிகளை மீடியா கம்பெனியான `விஸ்டா கேலிகேட்' தான் முடிவு செய்யும் என்றார். நான் அந்த கம்பெனியினரிடம் பேசலாம் எனக் கூறினேன். அதன் பிறகு நான் விஸ்டா மீடியா கம்பெனியை அழைத்தேன். அவர்கள் ஃபிலிம் சேம்பர் கேட்பதைவிட அதிகமாக என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்கள். நான் எனது முழு விபரங்களையும் அவர்களுக்கு அளித்தேன்.

ஸ்ரீஜித் பெருமன
ஸ்ரீஜித் பெருமன

செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க வேண்டும்; எனவே நடிப்பது குறித்த விருப்பத்தைக் கூறுங்கள் என நான் ஞாபகப்படுத்தினேன். இதுவரை அந்த கம்பெனியோ, ஸ்வேதா டீச்சரோ பதில் அளிக்கவில்லை. பொதுவெளியில் பிரபலமான டீச்சரோ, அல்லது அவரது கம்பெனியோ இதற்காக ஒரு பதிலாவது அளித்திருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட கருத்து எனக்கு உண்டு. அதுகுறித்த எனது கருத்தை நான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதில் அவரது பெயரை நான் குறிப்பிடவில்லை. அவரை அவமானப்படுத்தும் விதமாக எதுவும் நான் பதிவிடவில்லை" என்றிருக்கிறார்.

மேலும் சாய் ஸ்வேதா டீச்சரிடம் பேசிய போன் ஆடியோவை வழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமன தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் ஸ்ரீஜித் பெருமன-க்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும் என கோழிக்கோடு ரூரல் எஸ்.பி-யை மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு