Published:Updated:

`கல்லூரியில் தொடங்கியது; இன்னும் முடியவில்லை!'- திருத்தணி கொலை வழக்கில் கைதானவர்கள் வாக்குமூலம்

நமது நிருபர்

திருத்தணியில் வாலிபால் வீரர் மகேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள், `கல்லூரியிலேயே இந்த முன்விரோதம் தொடங்கிவிட்டது' என்று கூறியுள்ளனர்.

Accused
Accused

திருத்தணி நீதிமன்றத்திலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள ஹோட்டல் வரை மகேஷ் என்ற வாலிபரைக் கடந்த 16-ம் தேதி துரத்திச் சென்று கொலை செய்தது 5 பேர் அடங்கிய கும்பல் ஒன்று. மகேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்பேரில் திருத்தணி டி.எஸ்.பி.சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் மகேஷைக் கொலை செய்தவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களைப் போலீஸார் பிடிக்கச் சென்றபோது தப்பிக்க முயன்றவர்களின் கை, கால்கள் முறிந்ததாகத் தகவல்கள் வெளியானது.

Magesh
Magesh

போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25), விமல்ராஜ் என்கிற ஜப்பான் (25), கோபிராஜ் (26), ராஜ் (25), அஜித்குமார் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கை, கால்கள் முறிந்த நிலையில் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் விமல்ராஜ் என்கிற ஜப்பான், கோபிராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகேஷ் கொலை வழக்கின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

திருவள்ளூர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ``அரக்கோணத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் பெயின்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மகன் மகேஷ், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த வழித்தட மாணவர்களுக்கு `ரூட் தல'யாக மகேஷ் இருந்துள்ளார். அதே கல்லூரியில்தான் ஜப்பான் என்கிற விமல்ராஜ் தரப்பினரும் படித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும்போதே மகேஷ் தரப்பினருக்கும் ஜப்பான் தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்துவந்துள்ளது.

வாலிபால் விளையாட்டுப் போட்டி நடத்துவதிலும் இந்த மோதல் தொடர்ந்துள்ளது. மகேஷ் தரப்பைச் சேர்ந்த ஒருவரை ஜப்பான் தரப்பினர் கொலை செய்துள்ளனர். இதற்குப் பழிவாங்க மகேஷ் தரப்பு, ஜப்பான் தரப்பினரைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளது. தொடர்ந்து நடந்த மோதலில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீஸார் மகேஷின் நண்பர்களைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

Cctv footage
Cctv footage

கடந்த 16-ம் தேதி வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு மகேஷின் நண்பர்கள் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டனர். அவர்களைச் சந்திக்க மகேஷ் நீதிமன்றத்துக்குச் சென்றார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறை என்பதால் திருத்தணி நீதிமன்றத்துக்கு அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் திருத்தணி நீதிமன்றத்துக்கு மகேஷ் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து ஜப்பான் விமல்ராஜ் தரப்பினர் காரில் சென்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்தபிறகு நண்பர்களை மகேஷ் சந்தித்துள்ளார். அதன்பிறகு நீதிமன்றத்திலிருந்து அவர் புறப்பட்டபோதுதான் எதிர்த் தரப்பினர் மகேஷைக் கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். திட்டமிட்டப்படி அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில் மகேஷ் கொலைவழக்கில் 5 பேரைக் கைது செய்துள்ளோம். கைதானவர்கள் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்கின்றனர்.

மகேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், `` கல்லூரியில் படிக்கும்போதே எங்களுக்குள் மோதல் தொடங்கியது. படிப்பு முடிந்த பிறகும் மோதல் தொடர்ந்தது. மகேஷ் தரப்பை நாங்கள் கொலை செய்த பிறகு இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இந்தச் சமயத்தில் மகேஷ் தரப்பு எங்களை கொலை செய்யப்போவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் மகேஷைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டோம். சம்பவத்தன்று தனியாக திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு மகேஷ் வரும் தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு காரில் சென்றோம்.

`25 வெட்டுகள்; துரத்திய 4 பேர்'- திருத்தணி ஹோட்டலுக்குள் கைப்பந்து வீரரைக் கொலை செய்தது ஏன்?

காரை சதீஷ் ஓட்டினார். திருவள்ளூரிலிருந்து திருத்தணி நீதிமன்றத்துக்கு மகேஷ் சென்றதால் அவரைப் பின்தொடர்ந்து காரில் சென்றோம். நீதிமன்றத்தை விட்டு மகேஷ் வெளியில் வந்தபோது சதீஷைத் தவிர நாங்கள் 4 பேரும் அவரை விரட்டினோம். ஆனால், எங்களிடமிருந்து தப்பிக்க அவர் ஹோட்டலுக்குள் நுழைந்தார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் ஹோட்டலுக்குள் நுழைந்து வெட்டிக் கொலை செய்தோம். அதன்பிறகு அங்கிருந்து தப்பித்துவிட்டோம். ஆனால், நாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் போலீஸாரிடமிருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குதித்து ஓடியபோது எங்களின் கை, கால்கள் முறிந்தன" என்று கூறியுள்ளனர்.

`ஜப்பான்' விமல்ராஜ் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். இவர், பார்ப்பதற்கு வெளிநாட்டுக்காரர்போல வெள்ளை நிறத்தில் இருப்பதாலும் அவரின் மூக்கு ஜப்பான் நாட்டினரைப் போல இருப்பதாலும் நண்பர்கள் விமல்ராஜை, `ஜப்பான்' என்று அழைத்து வந்துள்ளனர். இதனால்தான்`ஜப்பான்' விமல்ராஜ் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது என்கின்றனர் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

hotel murder
hotel murder

மகேஷ் கொலைக்குப்பின்னால் மேலும் சில மர்மங்கள் மறைந்திருக்கின்றன. அதாவது, இரண்டு தரப்பினரும் அடிக்கடி மோதி உயிர்ப்பலி ஏற்பட்டுவந்துள்ள நிலையில், உளவுத்துறை போலீஸார் சமீபத்தில் அறிக்கை ஒன்றை போலீஸ் உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதில், ஜப்பான் விமல்ராஜ் தரப்பு, மகேஷைக் கொலை செய்யப்போகும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸாரோ உளவுத்துறை அறிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் மகேஷ் கொலை செய்யப்பட்டதாகப் போலீஸார் ஆதங்கப்படுகின்றனர். மேலும், கொலைக்குக் காரணம் முன்விரோதம் என்று மட்டும் கூறும் போலீஸார், அதன் பின்னணியை விசாரித்தும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.