Published:Updated:

`எவ்வளவு ரூபாய் பைக் என்றாலும் ஈஸியா லாக்கை உடைத்துவிடுவேன்!'- சென்னையில் சிக்கிய `புல்லட்’ திருடன்

``எவ்வளவு ரூபாய் பைக் என்றாலும், மெயின் லாக், சைல்டு லாக் போட்டிருந்தாலும் சத்தமில்லாமல் ஈஸியாக உடைத்துவிடுவேன்" என்று புல்லட் திருடன் பவித்ரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

புல்லட் திருடன் பவித்ரன்
புல்லட் திருடன் பவித்ரன்

சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில், குமரன் குடிலைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''கடந்த 30.11.2019 இரவு 10 மணியளவில், வழக்கம்போல என் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றேன். 1-ம் தேதி அன்று காணவில்லை. அதன்விலை 75,000 ரூபாய். அதைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கிளாட்சன், தலைமைக் காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், திருமுருகன், முதல்நிலை காவலர்கள் கண்ணன், வினோத், காவலர் வெங்கடேஷ்வரா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட பைக்குகளைப் பார்வையிடும் உதவி கமிஷனர்
மீட்கப்பட்ட பைக்குகளைப் பார்வையிடும் உதவி கமிஷனர்

ராஜேந்திரனின் பைக், கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒருவாரத்தில் அநாதையாக நின்றுகொண்டிருந்த பைக்கை போலீஸார் கண்டுபிடித்துக்கொடுத்தனர். அப்போது, குற்றவாளி யாரும் பிடிபடவில்லை. இந்தச் சமயத்தில், திரும்பவும் அதே பைக் திருடப்பட்டதால் போலீஸாரும் ராஜேந்திரனும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் நம்மிடம், ``முதல் தடவை பைக் திருடப்பட்டு, அதை போலீஸார் கண்டுபிடித்துக்கொடுத்தனர். இதனால் அந்த பைக்கை சங்கிலி போட்டு பூட்டி வைத்திருந்தேன். மீண்டும் அதே பைக்கை பூட்டுகளை எல்லாம் உடைத்துத் திருடிவிட்டனர்" என்றார்.

ராஜேந்திரன் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, மர்ம நபர் பைக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில், பள்ளிக்கரணை கர்மேல் தெருவைச் சேர்ந்த பவித்ரன் (21) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது, ''ராஜேந்திரனின் பைக், 2 தடவை திருடப்பட்டு அதை போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர். அதே நேரம், பவித்ரனிடமிருந்து 3 புல்லட்டுகள் உட்பட 5 விலை உயர்ந்த பைக்குகளை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.

திருடப்பட்ட பைக்குகளுடன் போலீஸார்
திருடப்பட்ட பைக்குகளுடன் போலீஸார்

போலீஸாரிடம் பவித்ரன், ``என்னுடைய சொந்த ஊர் திருவள்ளூர். பள்ளிக்கரணையில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், மெடிக்கல் ஸ்டோரில் வேலைபார்த்தேன். என்னுடைய 16 வயதில் முதல் முதலாக ஒரு வீட்டில் திருடினேன். 2009-ம் ஆண்டு, வேளச்சேரி போலீஸார் என்னைப் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அங்கிருந்து வெளியில் வந்த பிறகு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடவில்லை.

நான் வேலைபார்த்த இடங்களில் எனக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால், அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். கையில் பணம் இல்லை. செல்போனில் யூடியூபைப் பார்த்தபோது, பைக்கைத் திருடுவது எப்படி என்று தேடினேன். அப்போது, சைல்டு லாக் மற்றும் மெயின் லாக்கை உடைப்பது குறித்த வீடியோக்களைப் பார்த்தேன். அதன்மூலம் பைக் திருடுவதைக் கற்றுக்கொண்டேன். பின்னர், 2018-ம் ஆண்டு வேளச்சேரி பேபி நகரில் புல்லட் ஒன்றைத் திருடினேன்.

புல்லட் திருடன் பவித்ரன்
புல்லட் திருடன் பவித்ரன்

பின்னர், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதியில் பைக்குகளைத் திருடியுள்ளேன். குறிப்பாக, விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே நான் திருடுவேன். புல்லட் பைக் என்றால் நல்ல விலை கிடைக்கும். அதனால் புல்லட் பைக் நிறுத்தியிருக்கும் இடங்களைப் பகலில் நோட்டமிட்டு, இரவில் திருடிவிடுவேன். இரவு 10 மணிக்கு மேல் கையில் ஸ்குரூ டிரைவரை எடுத்துக்கொண்டு பைக்கில் செல்வேன். வீட்டில் வெளிப்பக்க கேட் திறந்துகிடந்தால், உடனே உள்ளே சென்றுவிடுவேன். நான் பைக் திருடிய வீடுகளில் எல்லாம் முன்பக்க கேட் பூட்டப்படவில்லை.

என்னுடைய பைக்கை தெருவில் நிறுத்திவிட்டு நடந்தே செல்வேன். பின்னர், நான் திருட ஸ்கெட்ச் போட்ட பைக்கின் அருகே அமர்ந்திருந்து ஸ்குரூ டிரைவர் மூலம் மெயின் லாக்கின் வயர்களை கட் செய்வேன். பின்னர், பைக்கின் ஹேண்ட் பாரை அழுத்திப் பிடித்துக்கொண்டு காலை பைக்கின் சைடில் ஊன்றிக்கொண்டு கையால் பலமாக இழுத்து சைடு லாக்கை உடைத்துவிடுவேன். அதன்பின்னர், பைக்கைத் தள்ளிக்கொண்டு வெளியில் வருவேன். மெயின் ரோட்டுக்கு வந்தபிறகு, பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டின் அருகே உள்ள இடத்தில் அந்த பைக்கை மறைத்துவைத்துவிடுவேன். அதன்பின்னர், கால்டாக்ஸி புக் செய்து, என்னுடைய பைக்கை நிறுத்திய இடத்துக்குச் செல்வேன். அங்கிருந்து என்னுடைய பைக்கில் வீட்டுக்கு வந்துவிடுவேன்.

`காலையில் கல்லூரி; மாலையில் திருட்டு!' - ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய சென்னை மாணவி
துரைப்பாக்கம் காவல் நிலையம்
துரைப்பாக்கம் காவல் நிலையம்

திருடிய பைக்கின் நம்பரை வைத்து, அதன் உரிமையாளரின் விவரங்களை சேகரிப்பேன். பின்னர், அதற்கு டூப்ளிக்கேட் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் எல்லாம் தயார்செய்து, இணையதளத்தில் விளம்பரம் செய்வேன். அதில் என்னுடைய போன் நம்பரையும் குறிப்பிடுவேன். குறைந்த விலைக்கு பைக் கிடைக்கும் என்பதால் நான் விளம்பரம் செய்ததும் அந்த பைக் விற்றுவிடும். இதுவரை 8 பைக்குகளைத் திருடியுள்ளேன். அதில் 3 பைக்குகளை 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளேன். மீதமுள்ள 3 புல்லட்டுகள் உட்பட 5 பைக்குகளை விற்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தேன். ஆனால், அதற்குள் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

பைக் விற்ற பணத்தை என்ன செய்தாய் என்று பவித்ரனிடம் போலீஸார் கேட்டதற்கு, ``எனக்கு ஃப்ரெண்ட்ஸ்கள் அதிகம். அவர்களோடு அன்றைய தினத்தை மது குடித்து ஜாலியாக செலவழிப்பேன். மேலும், தோழிகளுடன் பல இடங்களுக்குச் செல்வேன்" என்று கூறியுள்ளார். திருடிய 3 பைக்குகளை யாரிடம் விற்றார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

திருடப்பட்ட புல்லட்கள், பைக்குகள்
திருடப்பட்ட புல்லட்கள், பைக்குகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புல்லட் திருடன் பவித்ரனிடமிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்குகளைப் பறிமுதல் செய்துள்ளோம். விலை உயர்ந்த பைக்குகளைத் திருடுவதை 2018-ம் ஆண்டு முதல் வழக்கமாக வைத்துள்ளார். பைக்கை எப்படித் திருடுவாய் என்று கேட்டபோது, அதை செய்முறை விளக்கமாகக் கூறினார். இணையதளம் மூலம் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை வாங்குவோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு பைக்குகளை வாங்கினால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதோடு பணத்தையும் இழக்கும் சூழல் ஏற்படும்" என்றனர்.