Published:Updated:

`உனக்கு லீவ்தானே; ஏன் இரவு 12 மணிக்கு வந்தாய்?'- நண்பனின் மனைவியை சிக்கவைத்த காவலரின் வாக்குமூலம்

சென்னையில் நண்பனின் மனைவியால் எரித்துக் கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் வெங்கடேசன், இறப்பதற்கு முன் என்ன நடந்தது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

நண்பனின் மனைவி ஆஷா
நண்பனின் மனைவி ஆஷா

சென்னை திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் குடியிருந்தவர் காவலர் வெங்கடேசன். இவர் சில தினங்களுக்கு முன் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் போலீஸ்காரர் வெங்கடேசன் தற்கொலை செய்துகொண்டதாக அவருடன் தங்கியிருந்த ஆஷா என்ற பெண் கூறினார். போலீஸ் விசாரணையில் வெங்கடேசனைக் கொலை செய்தது ஆஷா என்பது தெரியவந்தது. இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனின் மரண வாக்குமூலமே முக்கிய காரணம் என்று சொல்கின்றனர் போலீஸார்.

காவலர் வெங்கடேசன்
காவலர் வெங்கடேசன்

போலீஸாரிடம் வெங்கடேசன் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம்!

``என் பெயர் வெங்கடேசன். என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், பொய்யப்பாக்கம். அப்பா காளிமுத்து, கூலிவேலை செய்துவருகிறார். என் அம்மா தங்கபாப்பா, சென்னை மாநகராட்சியில் துப்பரவுத் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். என்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு திருமணமாகி அவர்கள் விழுப்புரத்தில் உள்ளனர். நான் சென்னை புளியந்தோப்பில்தான் வளர்ந்தேன். பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன்.

2016-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராக பணிக்குச் சேர்ந்தேன். சென்னை சூளையில் உள்ள பள்ளியில் படிக்கும்போது ஜெயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். பிறகு இருவீட்டினர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக நானும் என் மனைவியும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

படுக்கையறையில் என் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். அதன்பிறகு நான் ஹாலில் படுத்து தூங்கிவிட்டேன். என் அருகே ஆஷா அமர்ந்திருந்தாள்.
ஆஷாவை அழைத்துச் செல்லும் போலீஸார்
ஆஷாவை அழைத்துச் செல்லும் போலீஸார்

நான், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் யூத் பிரிகேடராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியாற்றினேன். அப்போது அங்கு பணியாற்றிய என் நண்பன் ஜோதிராமலிங்கத்தின் மனைவி ஆஷாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எங்களின் பழக்கத்தை தெரிந்துகொண்ட ஜோதிராமலிங்கம், ஆஷாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார்.

என் மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால் நானும் ஆஷாவும் என் மகளும் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம். கடந்த 4 மாதங்களுக்கு முன் எஸ்.எம்.நகரில் உள்ள காவலர் குடியிருப்பு வீட்டுக்கு வந்தோம். சில மாதங்களாக எனக்கு வேறுபெண்களுடன் பழக்கம் இருப்பதாக ஆஷா சந்தேகப்பட்டாள். அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். கடந்த 20 நாள்களுக்கு முன் எனக்கும் ஆஷாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நான் விடுப்பு எடுத்திருந்தேன். புளியந்தோப்பில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டுக்கு வந்தேன். அப்போது ஆஷா எனக்கு சாப்பாடு பரிமாறினாள். அப்போது அவர், `நீ லீவில்தானே இருக்கிறாய், பிறகு எங்கு சென்றுவிட்டு எதற்கு லேட்டாக வீட்டுக்கு வந்தாய்' என்று என்னிடம் கேட்டாள். அப்போது படுக்கையறையில் என் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். அதன்பிறகு நான் ஹாலில் படுத்து தூங்கிவிட்டேன். என் அருகே ஆஷா அமர்ந்திருந்தாள்.

காவலர் வெங்கடேசன்
காவலர் வெங்கடேசன்
அம்மாவை அவதூறாகப் பேசிய தாய்மாமன்! - கொலை செய்த மருமகன்

கடந்த 24- ம் தேதி அதிகாலை ஒருமணியளவில் என் மீது ஏதோ ஒன்றை ஊற்றுவதுபோல இருந்தது. நான் கண்விழித்துப் பார்த்தபோது நான் பைக்கிற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஆஷா என் மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். பிறகு அவர், `எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது செத்து தொலைடா' என்று தீ வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

நான் பாத்ரூம்பிற்குள் சென்று தண்ணீரை எடுத்து ஊற்றினேன். எரிச்சல் தாங்க முடியாமல் வெளியில் ஓடிவந்தேன். அதைப்பார்த்தவர்கள் என்னைக் காப்பாற்ற முயன்றனர். பிறகு காவல் துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்" என்று கூறியுள்ளார்.

வாக்குமூலம் அளித்த போலீஸ்காரர் வெங்கடேசன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆஷாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.