Published:Updated:

`உன்னை ஜாமீனில்கூட எடுக்க மாட்டோம்!' - ஆபாசப் படம் பதிவிட்ட சைக்கோ இளைஞர் மீது பாய்ந்த குடும்பம்

``பெண்களைப் பார்க்கும்போது எனக்குள் இருக்கும் அந்நியன் வெளிவந்துவிடுவான்'' என்று சைக்கோ அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிகாரி கைஸ் முகமது
அதிகாரி கைஸ் முகமது

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைஸ் முகமது (27) என்பவரை போலீஸார் கைது செய்தனர். துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் கைஸ் முகமது மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்களும் கைஸ் முகமதுவின் சுயரூபமும் தெரியவந்தது.

விசாரணையின்போது கைஸ் முகமது போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த ஊர் காஞ்சிபுரம். எம்.பி.ஹெச் படித்துவிட்டு சில நிறுவனங்களில் வேலை பார்த்தேன். நான் எப்போதும் ஜாலியாக இருப்பேன். இதனால் என்னிடம் அனைவரும் நெருங்கிப் பழகுவார்கள். தற்போது சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக பணியாற்றிவருகிறேன்.

அதிகாரி கைஸ் முகமது
அதிகாரி கைஸ் முகமது

படிக்கும் காலத்திலிருந்தே என் மனதைக் கவரும் பெண்களை பல்வேறு கோணங்களில் செல்போனில் படம்பிடித்து ரசித்துப் பார்ப்பேன். அந்தப் பழக்கத்தை என்னால் கைவிடமுடியவில்லை. படித்துமுடித்துவிட்டு வேலைக்குச் சென்ற இடங்களில் என்னுடன் வேலை பார்த்த பெண்களுக்குத் தெரியாமல் செல்போன்களில் படம் எடுத்தேன். அந்தப் புகைப்படங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ரசித்துப் பார்ப்பேன்.

தற்போது நான் பணியாற்றும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக போட்டோ எடுப்பேன். சில நேரங்களில் பெண்களை வீடியோவாகவும் பதிவு செய்வேன். இதற்காக அழகான பெண்களைப் பார்த்ததும் என் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்துவிடுவேன். அதன்பிறகு அந்தப் புகைப்படங்கள், வீடியோவை எடிட் செய்து போலியாக தொடங்கிய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவேற்றுவேன்.

எனக்குத் தெரிந்த பெண்களுடன் செஃல்பி எடுப்பேன். அந்தப் புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன். நான் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு அதிகளவில் லைக்ஸ் கிடைத்தன. இதனால், தினமும் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்துவந்தேன். நான் காதலித்த பெண்ணுடன் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்தேன். அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பதிவு செய்தேன்.

என் காதலியின் தோழி என்னிடம் பழகினார். அவருக்குத் தெரியாமல் அவரையும் புகைப்படம் எடுத்தேன். அதையும் பதிவு செய்தேன். நான் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு நானே ஆபாசமாக கமென்ட்ஸ் பதிவு செய்தேன். அதற்கு லைக்ஸ் அள்ளியது. பெண்களை புகைப்படம் எடுக்க முடியாத சமயங்களில் ஃபேஸ்புக்கில் அழகான புகைப்படங்களை பதிவு செய்யும் பெண்களின் போட்டோக்களை எடுத்து அதையும் பதிவு செய்துள்ளேன்.

`போலி ஃபேஸ்புக் ஐ.டி; தோழி, குடும்பத்தினரின் ஆபாச படங்கள்!' - சைக்கோ அதிகாரியை வளைத்த சென்னை போலீஸ்

என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக பெரும்பாலான பெண்களின் முகங்களை மறைத்துதான் பதிவு செய்வேன். எனக்குத் தெரியாத பெண்களின் புகைப்படங்களை மறைக்க மாட்டேன்.

என்னுடைய போலி ஃபேஸ்புக் ஐடியைப்பார்த்த பெண் ஒருவர், அதில் தன்னுடைய ஆபாச போட்டோ இருப்பதைப் பார்த்து என்னிடம் கேட்டார். அந்தப்படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டேன். ஆனால், அந்தப் பெண் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். இதனால்தான் நான் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

கைஸ் முகமது, தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்களின் புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட கைஸ் முகமதுவின் குடும்பத்தினர், `எங்களுக்கும் உனக்கும் இனிமேல் எந்தவித தொடர்பும் இல்லை. உன்னை ஜாமீனில் எடுக்கக்கூட நாங்கள் ஏற்பாடு செய்யமாட்டோம்' என்று காவல்நிலையத்தில் கூறிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு அதிகளவில் லைக்ஸ் கிடைத்தன. இதனால், தினமும் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்துவந்தேன்.
கைஸ் முகமது

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைஸ் முகமதுவின் மனநிலையில் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக பெண்கள் இருக்க வேண்டும். தனிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்வதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். செல்ஃபி எடுப்பது தவறில்லை. அதை சமூகவலைதளங்களில் பதிவு செய்யும்போதுதான் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், பணியாற்றும் இடங்களிலும் பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும். யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக தனிப் பிரிவு சென்னை மாநகர காவல் துறையில் செயல்பட்டுவருகிறது. அங்கு தயங்காமல் புகார் கொடுக்கலாம்" என்றார்.