Published:Updated:

`உன் பெயர் இனிமேல் பிரியா; வாட்ஸ்அப் காலுக்கு ரூ.1,000' -`பெண் குரல்' இன்ஜினீயரின் வாக்குமூலம்

 இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்

``பிரியா என்ற பெயரில் ஆபாசமாகப் பேச வேண்டும். வாட்ஸ்அப் கால் அழைப்பு என்றால் 1,000 ரூபாய் தருவதாகக் கூறினார்கள்" என்று பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றிய நெல்லை இன்ஜினீயர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் குரலில் பேசி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதான நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன் சென்னை மயிலாப்பூர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதில், ``என் பெயர் வளன் ராஜ்குமார் ரீகன் (27). எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. அப்பா இருதயசெல்வன், உணவகத்தில் பணியாற்றிவருகிறார். அம்மா சாந்தா, பிஸ்கட் வியாபாரம் செய்துவருகிறார். நான் நெல்லை மாவட்டம், பணகுடியில் உள்ள பள்ளியில் 2010-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்து முடித்தேன். பின்னர், தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு பகுதியில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் படிப்பை 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை படித்தேன். படித்து முடித்ததும் தனியார் கம்பெனி ஒன்றில் பயிற்சியாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர், உறவினர் நிறுவனத்தில் ஒன்றை ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவரிடம் பணியாற்றினேன். நான் பார்த்து வந்த வேலைகளிலிருந்து விலகிய பிறகு, புதிய வேலையை ஓராண்டாகத் தேடிவந்தேன்.

போலீஸ் நிலையத்தில் வளன் ராஜ்குமார் ரீகன்
போலீஸ் நிலையத்தில் வளன் ராஜ்குமார் ரீகன்
`தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?!' -பெண் குரலில் பேசி லட்சங்களைக் குவித்த நெல்லை இன்ஜினீயர்

இந்தச் சமயத்தில்தான் லோக்கேன்டாவில் பதிவு செய்தேன். அப்போது ஒரு கம்பெனியிலிருந்து என்னிடம் பேசியவர்கள், டெலி காலர் வேலை என்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வகையில் பேசினால் 500, 1000 ரூபாய் கமிஷன் வரும் என்றும் தெரிவித்தனர். பின்னர், கம்பெனியிலிருந்து பேசுவதாகக் கூறிய ரூபா, என்னுடைய குரல் பெண் போல இருப்பதால் `லோக்கேன்டா' இணையதளத்தில் பிரியா என்ற பெயரில் உங்களின் செல்போன் நம்பரை பதிவு செய்கிறோம். உங்களிடம் பேசும் ஆண்களிடம் நீங்கள், பெண் குரலில் பேச வேண்டும். அதற்கு எங்கள் கம்பெனியிலிருந்து பணம் தருகிறோம் என்று கூறினார். மேலும், வீடியோ கால் என்றால் ரூ.1,500 என்றும் சாதாரண கால் என்றால் 1,000 ரூபாய் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து பிரியா என்ற பெயரில் என் செல்போன் நம்பரை பதிவு செய்தனர்.

இதையடுத்து என்னை ஆண் வாடிக்கையாளர்களிடம் பெண் குரலில் ஆபாசமாகப் பேசுமாறு கூறினர். நானும் அதற்கு சம்மதித்தேன். பின்னர் எனக்கு போன் செய்த ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் சம்பாதித்து வந்தேன். அவ்வாறு வரும் அழைப்புகளில் சிலர் இலவசமாகப் பேசு என்று என்னைத் தொந்தரவு செய்தனர். அதைப் பற்றி நான் கம்பெனியில் கூற அவர்கள் காவல்துறையின் இணைய தளத்தில் புகாரளிக்கும்படி தெரிவித்தனர்.

நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்

தொந்தரவு செய்யும் நபர்கள் மீது புகார் செய்து அதன் ஸ்கிரீன் ஸார்ட்டை அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புவேன். உடனே அந்த நபர்கள் பயந்து புகாரை திரும்பப் பெறுமாறு கூறுவதோடு பணம் தருவதாகவும் கூறுவார்கள். பின்னர் எனது வங்கிக் கணக்குக்கு அவர்கள் பணம் அனுப்பி வைத்தனர். இவ்வாறு இனையதளம் மூலம் புகாரளித்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்தேன். விளம்பரத்தைப் பார்த்து அழைத்த ஆண்களில் சிலர் என்னுடைய போட்டோவை அனுப்பும்படி கூறுவார்கள். அவர்களிடம் 100 ரூபாய் வசூலித்துவிட்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்புவேன்.

பிறகு வாட்ஸ்அப் காலுக்கு 1,000 ரூபாய் கேட்பேன். வாய்ஸ் காலில் நான் பெண்கள்போல செக்ஸ் சம்பந்தமாக அவர்களுடன் பேசுவேன். என்னை பெண் என்று கருதி பேசும் ஆண்களில் பலர் என்னுடைய ரசிகர்களாகினர். அதைப் பயன்படுத்தி நான் எனக்கு தேவையானபோது அவர்களுடன் வாட்ஸ்அப்பில் பெண்போல பேசி பணத்தைப் பெற்றுக்கொள்வேன். இவ்வாறு நான் பேசி பெறும் பணத்தை எனது வங்கிக் கணக்கு, அம்மாவின் வங்கிக் கணக்கு ஆகியவற்றுக்கு அனுப்பச் சொல்வேன். கடந்த 16.2.2020-ல் உதயராஜ் என்பவர் என்னிடம் பேசினார். நான் அவரிடம் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்ப 100 ரூபாய் கேட்டேன். அவர் வேண்டாம் என்று கூற நான் வலுக்கட்டாயமாக மிரட்டி பணம் கேட்டேன். அவர் எனக்கு 100 ரூபாய் அனுப்பியதும் நான் ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பினேன்.

நெல்லை வளன்ராஜ்குமார் ரீகன்
நெல்லை வளன்ராஜ்குமார் ரீகன்
`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்

பிறகு வீடியோ அனுப்ப 1,500 ரூபாய் கேட்டேன். நீங்கள் நேரில் வாருங்கள் என்று கூறிய அவர் பணத்தை அனுப்ப முடியாது என்று தெரிவித்தார். உடனே அவரின் பெயர் அவரது செல்போன் ஆகியவற்றை வைத்து தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் புகார் ஒன்றை அனுப்பி அதன் ஸ்கிரீன் சார்ட்டை உதயராஜுக்கு அனுப்பி வைத்தேன். நீ பணத்தை அனுப்பவில்லை என்றாலும் எனது அழைப்பை ஏற்காவிட்டாலும் உன்னை விடமாட்டேன் என்று மிரட்டினேன்.

மேலும், எனது அழைப்பை எடுக்கவில்லை என்றால் ஆளை வைத்து காலி செய்துவிடுவேன் என்று மிரட்டினேன். நான் சென்னையில் வழக்கறிஞராக உள்ளேன். அதனால் விரைவில் கமிஷனர் அலுவலகத்திலிருந்து உன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என்று வாட்ஸ்அப்பில் உதயராஜுக்கு மெசேஜ் மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதன் பிறகு அவர் எனது செல்போன் நம்பர்களை பிளாக் செய்துவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாகப் பெண் குரலில் பேசி பணம் பறித்து வந்தேன். ஆனால், போலீஸார் என்னைப் பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு