Published:Updated:

`எங்களைப் பார்த்து எப்படி சிரிக்கலாம்?!’ -இரு தரப்பு மோதலால் கலவரமான ஹோட்டல்

தூத்துக்குடியில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிரித்ததற்காக இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பூங்காவிற்கு எதிரில் ’தனலெட்சுமி’ என்ற பெயரில் தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் உணருவருந்தினர்.

சிசிடிவியில் பதிவான மோதல் காட்சி
சிசிடிவியில் பதிவான மோதல் காட்சி

அதே போல, கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோரும் அதே ஹோட்டலில் உணவருந்தியுள்ளனர். அருண்குமார் மற்றும் அவருடன் வந்திருந்த நண்பர்கள் வழக்கமாக இந்த ஹோட்டலில் சாப்பிடுவதும், பார்சல் வாங்கிச் வழக்கமாம். அதனால், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுடன் சிரித்துப் பேசியுள்ளனராம்.

தொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு!

அப்போது பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பார்த்துதான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து, அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம், ”எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீங்க? எனக் கேட்டுள்ளனர். ”நாங்க உங்களைப் பார்த்து ஒன்னும் சிரிக்கல” என அருண்குமாரின் நண்பர்கள் சொல்லியுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை செய்த எஸ்.பி
ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை செய்த எஸ்.பி

”இல்லை.. இல்லை… எங்களைப் பார்த்துதான் நீங்க சிரிச்சீங்க” என, பிரசாத்தின் நண்பர்கள் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண்குமாரும் அவரது நண்பர்களும் சாப்பிட்டதற்கு பில் கொடுத்து விட்டு கிளம்ப முயன்றுள்ளனர். ஆனால், ஹோட்டலின் வாசலுக்கு வந்த பிரசாத்தும் அவரது நண்பர்களும், ”எங்களைப் பார்த்து எப்படி சிரிக்கலாம்? ” எனக்கூற இருதரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹோட்டலில் இருந்த சேர்களை தூக்கி வீசியும், குழம்பு வாளி, டம்ளர்களை தூக்கி வீசியும் ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். ஹோட்டலில் ஏற்பட்ட இந்த மோதலைப் பார்த்து மற்ற டேபிள்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும், பார்சல் வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து ஹோட்டலின் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, போலீஸார் விரைந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி

இரு தரப்பினரும் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் அந்த ஹோட்டலுக்குச் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். சிரித்ததால் இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டு கைகலப்பான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு