நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகிலுள்ள அம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர ராஜன். கட்டுமானத் தொழிலாளியான இவர், கடந்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வழக்கம்போல பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, அவரது வீட்டு வாசலில் நாய் மலம் கழித்திருப்பதைப் பார்த்துக் கோபமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் குடியிருப்போரை ஆத்திரத்தில் ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். இதைக் கேட்ட சௌந்தர ராஜனின் அண்டை வீட்டார்களான, போலீஸ் சகோதரர்கள் இருவர் ஆபாச வார்த்தைகளில் பேசிய சௌந்தர ராஜனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சௌந்தர ராஜன் மயங்கி, கீழே விழுந்துள்ளார்.

அதையடுத்து, உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சௌந்தர ராஜனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோவைக்குப் பரிந்துரை செய்துள்ளனர். சௌந்தர ராஜனைக் கடுமையாகத் தாக்கிய போலீஸ் சகோதரர்கள் மீது புகார் அளித்தும் சோலூர்மட்டம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தொடர் சிகிச்சை அளித்து குணப்படுத்த மருத்துவச் செலவுக்கான தொகையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவரின் மனைவி சரண்யா நீலகிரி காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து நம்மிடம் பேசிய சரண்யா, ``எனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். நான் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன். அன்றைக்கு என் கணவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் அருகே நாய் ஒன்று மலம் கழித்திருந்தது. அதைப் பார்த்த என் கணவர் சத்தம் போட்டார். அப்போது, எங்கள் வீட்டுக்கு மேல் பகுதியில் வசித்துவரும் காவல்துறையில் பணியாற்றும் சரவணன், பிரகாஷ், அவர்களின் தந்தை கிருஷ்ணன் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்து என் கணவரை கண்மூடித்தனமாகத் தாக்கினர். என் கணவரின் பிறப்புறுப்பில் காலால் மிதித்துக் கொடுங்காயத்தை ஏற்படுத்தினர்.

மருத்துவத்துக்கு இதுவரை சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகிவிட்டது. என் கணவரை குணப்படுத்த ரூ.4 லட்சம் செலவாகும் என தனியார் மருத்துவமனையில் கூறிவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்களிடம் பணம் கேட்டபோது, `பணம் தர முடியாது நீங்கள் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்கின்றனர். எனவே, அவர்கள்மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவரின் அறுவை சிகிச்சைக்கு உதவிட வேண்டும்" என்றார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் வேல்முருகனிடம் கேட்டபோது, ``இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.