Published:Updated:

நெல்லை: கட்டட ஒப்பந்ததாரரைக் கொன்ற மர்மக் கும்பல்! -உடலைக் கால்வாயில் வீசிச் சென்ற கொடூரம்

கொலை
கொலை ( representational image )

நெல்லை தாழையூத்து பகுதியில் கட்டட ஒப்பந்ததாரரை ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டியதுடன், அவரது உடலை அருகிலிருந்த கழிவுநீர் செல்வதற்கான கால்வாயில் வீசிவிட்டுச் சென்றது. சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது!

நெல்லை மாவட்டம், வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 35 வயதான அவர் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். தாழையூத்து பகுதியில் மனைவி, இரு குழந்தைகளுடன் கண்ணன் வசித்துவந்தார்.

கொலையான கண்ணன்
கொலையான கண்ணன்

கண்ணன் வீடு இருக்கும் பகுதியில் கடந்த சில தினங்களாகக் குடிநீர் வரவில்லை. அத்துடன் அவர் பணி செய்யும் இடத்துக்கும் தண்ணீர் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த லோடு ஆட்டோவில் தண்ணீர் பிடிக்கச் சென்றிருக்கிறார்.

நெல்லை-மதுரை நான்குவழிச் சாலையிலுள்ள பண்டாரகுளம் பகுதியில் தண்ணீர் பிடிக்க லோடு ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் செல்ல, கண்ணன் உடன் சென்றிருக்கிறார். கேனில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, உடல் உபாதையைக் கழிக்க டிரைவர் அங்கிருந்த புதருக்குள் சென்றிருக்கிறார்.

கால்வாயில் கிடந்த உடல்
கால்வாயில் கிடந்த உடல்

கண்ணன் மட்டும் தனியாக இருந்தபோது இரு சக்கர வாகனங்களில் ஆறு பேர் வந்திருக்கிறார்கள். அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள், கண்ணனைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். குற்றுயிராகக் கிடந்த கண்ணனின் உடலை, கழிவுநீர் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த ஓடையில் அந்தக் கும்பல் வீசியிருக்கிறது.

கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ஓடி வந்து பார்த்தபோது, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறது. உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த கண்ணனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் எஸ்.பி மணிவண்ணன் ஆய்வு
கொலை நடந்த இடத்தில் எஸ்.பி மணிவண்ணன் ஆய்வு

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். கொலைச் சம்பவம் பற்றி அறிந்ததும் கண்ணனின் உறவினர்கள் தாழையூத்து பகுதியில் திரண்டு சாலைமறியல் செய்ய முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் ரிக்கியுடன் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டார்கள். சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த லோடு ஆட்டோவின் ஓட்டுநரிடமும் விசாரணை நடக்கிறது.

கொலை நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள்
கொலை நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள்

தாழையூத்து பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே முன்பகை இருந்துவரும் நிலையில், அதன் காரணமான கண்ணன் வெட்டிக் கொல்லப்பட்டாரா அல்லது தொழிலில் ஏற்பட்ட பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி போலீஸார் விசாரித்துவருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் தாழையூத்து பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு