Published:Updated:

போதைக் கொலைகள்... கேள்விக்குறியாகும் அப்பாவிகளின் வாழ்க்கை!

போதைக் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
போதைக் கொலைகள்

19 வயதேயான ஐ.டி.ஐ மாணவரான சசிகுமார், ‘கஞ்சா போதையில தெரியாம கொலை செஞ்சுட்டேன்’ என்று சொல்லி அரற்றியிருக்கிறார்.

போதைக் கொலைகள்... கேள்விக்குறியாகும் அப்பாவிகளின் வாழ்க்கை!

19 வயதேயான ஐ.டி.ஐ மாணவரான சசிகுமார், ‘கஞ்சா போதையில தெரியாம கொலை செஞ்சுட்டேன்’ என்று சொல்லி அரற்றியிருக்கிறார்.

Published:Updated:
போதைக் கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
போதைக் கொலைகள்
சென்னையில் அடுத்தடுத்து நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் திகிலடையவைக்கின்றன. அதுவும் முன்விரோதமோ, உள்நோக்கமோ இல்லாமல் பொசுக்கென்று போதை நபர்கள் செய்த கொலைகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
போதைக் கொலைகள்... கேள்விக்குறியாகும் அப்பாவிகளின் வாழ்க்கை!

சம்பவம் 1

சென்னை, புழல்-லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஏப்ரல் 8-ம் தேதி மாலை மது அருந்துவதற்காக அதே பகுதியிலிருக்கும் டாஸ்மாக் பாருக்குச் சென்றார். அங்கு கிருஷ்ணமூர்த்தி, அப்பு ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் அமர்ந்த அன்பழகன், மது அருந்தத் தொடங்கினார். அப்போது கிருஷ்ணமூர்த்தி ஆர்டர் செய்து வாங்கிவைத்திருந்த ஆம்லெட்டை, தான் ஆர்டர் செய்த ஆம்லெட் என்று நினைத்து அன்பழகன் சாப்பிட்டிருக்கிறார். இதில் அன்பழகனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரில் இருந்தவர்கள் மூவரையும் சமாதானப்படுத்தி, வெளியில் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

வெளியேயும் பிரச்னை தொடர்ந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அன்பழகனைக் கீழே தள்ளிய கிருஷ்ணமூர்த்தி, காலால் அவரது கழுத்தைக் கொடூரமாக மிதித்து நசுக்கத் தொடங்கினார். இதில் மூச்சுத்திணறி, சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த புழல் போலீஸார் கிருஷ்ணமூர்த்தி, அப்பு இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சங்கர் சடலமாக...
சங்கர் சடலமாக...

சம்பவம் 2

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். கட்டட மேஸ்திரி. கொளத்தூரில் நடக்கும் கட்டுமானப் பணிக்காக ஏப்ரல் 3-ம் தேதி நள்ளிரவு சென்னைக்கு வந்தவர், ரெட்டேரிப் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக டூ-வீலரில் வந்த சசிகுமார் என்ற இளைஞரிடம் சங்கர் லிஃப்ட் கேட்டு கொளத்தூருக்கு வந்திருக்கிறார். லிஃப்ட் கொடுத்ததற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு சங்கர் கிளம்ப முற்பட, ‘சும்மா தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்புனா எப்புடி? பெட்ரோல் நூறு ரூபாய்க்கு விக்குதுல்ல... லிஃப்ட் கொடுத்ததுக்கு நூறு ரூபா கொடுத்துட்டு போ’ என்று சங்கரிடம் சசிகுமார் கேட்டிருக்கிறார். ‘போற வழியில இறக்கிவிடுறதுக்கு காசு கேட்டா எப்படி?’ என்று சங்கர் கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், சங்கரை அடித்தே கொலை செய்துவிட்டு, அவர் பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த கொளத்தூர் போலீஸார், சிசிடிவி கேமராவில் பதிவான சசிகுமாரின் பைக் எண்ணை வைத்து, அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். 19 வயதேயான ஐ.டி.ஐ மாணவரான சசிகுமார், ‘கஞ்சா போதையில தெரியாம கொலை செஞ்சுட்டேன்’ என்று சொல்லி அரற்றியிருக்கிறார்.

அன்பழகன் - சசிகுமார்
அன்பழகன் - சசிகுமார்

மேற்கண்ட இரு சம்பவங்களிலும் முன்விரோதமோ, பகையோ இல்லை. மிகவும் அற்பமான காரணங்களுக்காக ‘கொலை செய்கிறோம்’ என்கிற அச்ச உணர்வோ, குற்ற உணர்வோ இல்லாமல் வெகு சாதாரணமாக உயிரைப் பறித்திருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல், வன்முறை உணர்வில் ஊறித் திளைத்திருக்கிறார்கள். இரு சம்பவங்களிலும் குற்றத்துக்கு போதையே பிரதான காரணமாக இருந்திருக்கிறது. இதுபோன்ற கொலைக்கு எந்த அப்பாவியும் இலக்காகலாம் என்ற உண்மை நம்மை உறையவைக்கிறது. தெரிந்தோ தெரி்யாமலோ, ஏதோ ஒரு கடையில் யாருக்கோ கொடுக்கவேண்டிய பொருளை தவறுதலாக நாம் எடுத்துவிடுவோம். ஏதோ அவசரத்தில், முகம்தெரியாத நபர்களிடம் லிஃப்ட் கேட்போம். இதுபோன்ற சூழலில் மேற்கண்ட சம்பவங்கள் நம்மைப் பதற வைப்பது நிஜம்.

சித்ரா அரவிந்த்
சித்ரா அரவிந்த்

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம். ‘‘மது, கஞ்சா உள்ளிட்ட போதை நோயாளிகள், அவர்களின் நோயின் படிநிலையைப் பொறுத்து, பல்வேறு மனநிலை பாதிப்புகளில் இருப்பார்கள். குறிப்பாக, ஆடிட்டரி ஹாலுசினேஷன், விஷுவல் ஹாலுசினேஷன் உள்ளிட்ட பல வகையான மனபிரமைகளாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். போதை உச்சத்திலிருக்கும்போது அவர்கள் அதிவேகமாக உணர்ச்சிவயப்பட்டு, தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார்கள். போதை தெளிந்ததும், தாங்கள் செய்த காரியத்தை நினைத்து அதிர்ச்சியடைவார்கள். தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக இந்த வகையான குடிநோயாளிகள் பலமடங்கு அதிகரித்துவருகிறார்கள். நீங்கள் சொல்லும் மேற்கண்ட சம்பவங்களும் இப்படித்தான் நிகழ்ந்துள்ளன. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவதும், குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வுமே இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்தும்” என்றார்.

*****

நடுத்தெருவில் கொள்ளையனுடன் போராட்டம்!

போதைகளால் ஏற்படும் குற்றங்கள் ஒருபுறமென்றால், சென்னையில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணியான கீதா, தனது வீட்டின் முன்பகுதியிலுள்ள விநாயகருக்கு தினமும் கற்பூரம் ஏற்றி பூஜை செய்வது வழக்கம். வழக்கம்போல் ஏப்ரல் 9-ம் தேதி காலையில் அவர் பூஜை செய்துகொண்டிருந்தபோது, டூ-வீலரில் டபுள்ஸ் வந்தவர்களில் ஒருவன் பைக்கிலிருந்து இறங்கி, கீதாவின் தாலி செயினைப் பறிக்க முயன்றான். 11 சவரன் தாலி செயின் என்பதால், அது அறுபடவில்லை... இதில் கீழே விழுந்துவிட்டார் கீதா. அப்போதும் விடாமல் தாலி செயினைப் பிடித்தபடி தெருவில் தரதரவென்று கீதாவை இழுத்துச் சென்றான் கொள்ளையன்.

கைகளால் தாலி செயினைப் பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடினார் கீதா. சில நிமிடங்களில் ஓரிருவர் இவர்களை நோக்கி வரத் தொடங்கவே, தாலி செயினை விட்டுவிட்டு கொள்ளையன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டான். இந்தப் போராட்டத்தின்போது இதைப் பார்த்துக்கொண்டே சிலர் மெளனமாகக் கடந்து சென்றதுதான் வேதனை. இந்தப் போராட்டத்தின்போது கொள்ளையன் தவறவிட்ட செல்போனைவைத்து, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism