அலசல்
Published:Updated:

கோயில்... ஜெயில்... தொடர் கொலைகள்... பதற்றத்தில் நெல்லை!

நெல்லை
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை

ஸ்ரீவைகுண்டம் சிறையிலிருந்த முத்துமனோவை பாளையங்கோட்டைச் சிறைக்கு மாற்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது.

கோயில், சிறைச்சாலை என அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் நெல்லை மாவட்டம் அரண்டு கிடக்கிறது. பழிக்குப் பழியாக அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறி அமைதியைத் தொலைத்துவிடுவோமோ என்று மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

முத்துமனோவின் உறவினர்கள்
முத்துமனோவின் உறவினர்கள்

சம்பவம் 1: சீவலப்பேரி, சுடலை மாடசாமி கோயிலில் கடை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக, கோயிலின் பூசாரியான சிதம்பரத்தை மற்றொரு தரப்பினர் கோயிலின் உள்ளேயே கொடூரமாக வெட்டிக் கொன்றார்கள். இரு சமுதாய மக்களுக்கு இடையே நிலவிய சாதியப் பகையின் காரணமாக நடந்த இந்தக் கொலையால் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளைக் கைதுசெய்யக் கோரி சிதம்பரத்தின் உறவினர்களும், அவர் சார்ந்த சமுதாயத்தினரும் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினார்கள். 11 பேரை போலீஸார் கைதுசெய்த பின்னரே, அவர்கள் அமைதியானார்கள்.

கோயில்... ஜெயில்... தொடர் கொலைகள்... பதற்றத்தில் நெல்லை!

சம்பவம் 2: வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமனோ உள்ளிட்ட நான்கு பேர், கொலை முயற்சி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது ஆகிய வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்கள். வைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் நால்வரையும் 22-ம் தேதி பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்குக் கொண்டுவந்தார்கள். சிறைக்குள் வந்த சில நிமிடங்களிலேயே மாற்று சமூகங்களைச் சேர்ந்த கும்பல் அவர்கள்மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. அதில் முத்துமனோ கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக ஏழு கைதிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை ஜெயிலர் சிவன் உள்ளிட்ட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிதம்பரம், முத்துமனோ
சிதம்பரம், முத்துமனோ

முத்துமனோவின் பின்னணி குறித்து உளவுத்துறையினரிடம் பேசினோம்... ‘‘நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்துமனோ, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞரணி மாவட்டத் தலைவர். 27 வயது இளைஞரான இவர், சட்டக் கல்லூரி மாணவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நீதிமன்றத்திலிருந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சிங்காரம் என்பவரை ஒரு கும்பல் வழிமறித்து, வெடிகுண்டு வீசிக் கொன்றது. அதில் தொடர்புடைய பாட்சா என்ற மாடசாமியை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் முத்துமனோ மீது நிலுவையில் உள்ளன’’ என்றார்கள்.

கொலை குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம், ‘‘ஸ்ரீவைகுண்டம் சிறையிலிருந்த முத்துமனோவை பாளையங்கோட்டைச் சிறைக்கு மாற்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது. அவரைக் கொல்லும் நோக்கத்துடனேயே இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தால் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் முத்துமனோவின் நண்பர்கள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கிறார்கள். அதனால், நீதிமன்றக் கண்காணிப்புடன் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை வாங்கித் தர வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதியாவார்கள்’’ என்றார்.

சிறைச் சம்பவம் குறித்துப் பேசிய ‘எவிடென்ஸ்’ கதிர், ‘‘பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குள் முத்துமனோ அழைத்து வரப்பட்ட 30 நிமிடங்களுக்குள் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் உள்ளே வந்ததும், மற்றவர்களுடன் தகராறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவரைச் சிறைக்கு அழைத்து வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். பாளையங்கோட்டை ஜெயிலில், சாதிரீதியிலான குற்றங்களில் ஈடுபடுவோரைத் தனித்தனியாகப் பிரித்து அடைத்துவைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது முத்துமனோவை ஏன் அனைத்துச் சமூகத்தினரும் இருக்கும் அறைக்குள் அடைத்தார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மணிவண்ணன், எவிடென்ஸ் கதிர், பாஸ்கர் மதுரம்
மணிவண்ணன், எவிடென்ஸ் கதிர், பாஸ்கர் மதுரம்

முத்துமனோ மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான வாகைக்குளம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. முத்துமனோவின் தந்தை பாபநாசம், தன் மகன் கொலைக்கு நியாயம் கிடைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டுள்ளார். அவரிடம் பேசியபோது, ‘‘கொஞ்ச நாளா அவன் எந்த வம்புக்கும் போகாம வீட்டுல இருந்ததால, கல்யாணம் செய்ய பொண்ணு பார்த்துக் கிட்டிருந்தோம். அவன் தப்பு செஞ்சதுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தா யாரும் கேட்கப்போறதில்லை. ஆனா, அநியாயமா அவனை அடிச்சே கொன்னுட்டாங்களே...’’ என்று தேம்பி அழுதார்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளரான கிருஷ்ணகுமாரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. நம்மைத் தொடர்புகொண்ட அவரின் உதவியாளரிடம் தகவல் தெரிவித்தும், எந்த பதிலையும் பெற முடியவில்லை.

நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனிடம் இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் பேசினோம்... ‘‘சீவலப்பேரி கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலரைக் கைதுசெய்ய வேண்டியிருக்கிறது. அவர்களையும் சீக்கிரமே கைதுசெய்வோம். கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைத்துள்ளோம். அந்தப் பகுதியில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். முத்துமனோ விவகாரத்தில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடக்காதவாறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்’’ என்றார்.

பழிக்குப் பழி மரணங்கள் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமை!