Published:Updated:

`வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லவே அச்சமாக இருக்கிறது!’ - திருவாரூரில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்

மக்கள் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியில் செல்லவே அச்சப்படுகிறார்கள் எனவும், இதற்கு காவல்துறையினர் உடனடியாக முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் எனவும் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் கொள்ளைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம், நன்னிலம் அருகே விசலூரில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் பாலமுருகன், தன் குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றார். அவர் கிளம்பிய அடுத்த சில மணி நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் அவரின் வீட்டுக் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த சில நாள்களில் மன்னார்குடி காமராஜ் நகரில் வசித்துவரும் ரெங்கராஜ் என்பவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். ரெங்கராஜ் தன் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில், வீட்டின் கொல்லைப்புறக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, ரெங்கராஜின் மனைவி கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருட்டு, கொள்ளை
திருட்டு, கொள்ளை
மாதிரிப் படம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருவாரூர் அருகே கூட்டுறவு நகரில் வசித்துவரும் பள்ளி ஆசிரியை கவிதா, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, தனது வீட்டைப் பூட்டி, குடும்பத்தோடு வேதாரண்யம் சென்றுவிட்டு, அடுத்த சில தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகைகளும், 25,000 ரூபாய் பணமும் கொள்ளை போயின. \

அடுத்ததாக, மன்னார்குடி மேலத் தெருவில் வசித்துவரும் மாரியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அவரின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் இப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்தான் தற்போது மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் அருகே உள்ள காவனூரில் வசித்துவருபவர் கோகிலா. இவரின் கணவர் பிரகாஷ், திருச்சியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மகளும் திருச்சியில் வசிக்கிறார். கோகிலா திருச்சியிலுள்ள தன் மகளைப் பார்க்க வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். திருச்சியில் சில நாள்கள் தங்கியிருந்த கோகிலா, மீண்டும் காவனூரிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு கோகிலா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவின் கதவுகள் திறந்த நிலையில் இருந்திருக்கின்றன.

மாவட்ட காவல் அலுவலகம், திருவாரூர்
மாவட்ட காவல் அலுவலகம், திருவாரூர்

அவற்றிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், 5,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கோகிலாவுக்குத் தெரியவந்திருக்கிறது. இது குறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் கோகிலா புகார் அளித்திருக்கிறார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியில் செல்லவே அச்சப்படுகிறார்கள் எனவும், இதற்கு காவல்துறையினர் உடனடியாக முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் எனவும் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு