பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அனிதா. திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தம் கிராமத்தில் கடந்த வாரம் மருந்தகத்தில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்பு செய்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது கருக்கலைப்பு சம்பவம் என்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக்குழுவினருடன் திட்டக்குடி, வேப்பூர், ராமநத்தம் பகுதிகளிலுள்ள மருந்தகத்தில் (மெடிக்கல் ஷாப்பில்) ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள மங்களூர் கிராமத்தில் ஒரு வீட்டில் பெண்ணுக்குக் கருக்கலைப்பு நடப்பதாக மருத்துவக் குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் மங்களூர் கிராமம் சிவன் கோயில் தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டு மாடியிலுள்ள ஒரு ரூமில் சென்று பார்த்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது, அங்கு குமார், அவரின் மனைவி சித்ரா இருவரும் உள்ளே இருந்தனர். படுக்கையிலிருந்த வேறொரு பெண்ணை அதிகாரிகள் விசாரித்தபோது அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து படுக்கவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் மருத்துவக்குழுவினரைப் பார்த்ததும் குமார், அவருடைய மனைவி சித்ரா ஆகியோர் தப்பி ஓடினர். இது குறித்து வழக்கு பதிவுசெய்து கருக்கலைப்பில் ஈடுபட்டுவந்த குமார், அவரின் மனைவி சித்ரா ஆகியோரை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்டவிரோத கருக்கலைப்பால், கடந்த ஒரு வாரத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டுக்கொண்டு இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள், மருத்துவர்களை முறையாக ஆய்வு செய்தால் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும். இதை மாவட்ட ஆட்சியர் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.