Published:Updated:

3 நாள்கள்... 5 கொலைகள்! - பழிக்குப் பழி... தலைக்குத் தலை...

கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கொலைகள்

நெல்லை தொடர் கொலைகளை தடுக்குமா போலீஸ்?

3 நாள்கள்... 5 கொலைகள்! - பழிக்குப் பழி... தலைக்குத் தலை...

நெல்லை தொடர் கொலைகளை தடுக்குமா போலீஸ்?

Published:Updated:
கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கொலைகள்
ரத்தத்களறியாகக்கிடக்கிறது நெல்லை. எந்நேரம் என்ன நடக்குமா என்று பதைபதைத்துக்கிடக்கிறார்கள் மக்கள். நெல்லை மாவட்டத்தில் மூன்றே நாள்களில் நடந்த ஐந்து கொடூரக் கொலைச் சம்பவங்களால் ஐந்து எஸ்.பி-க்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, அசாதாரண நிலை நிலவுகிறது.
சங்கர சுப்பிரமணியன்
சங்கர சுப்பிரமணியன்

சம்பவம்-1

நெல்லை அருகேயுள்ள கீழசெவல் நயினார்குளத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் செப்டம்பர் 13-ம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். வடுவூர்பட்டி சாலையிலுள்ள காட்டுப்பகுதியில் அவர் சென்றபோது வழிமறித்த கும்பல் அவரைக் கொன்றதுடன், தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று கோபாலசமுத்திரம் பகுதியிலுள்ள மந்திரம் என்பவரின் கல்லறையில் வைத்துவிட்டு தப்பியது. கொலையாளிகள் சங்கர சுப்பிரமணியனின் தலையை எடுத்துச் சென்று மந்திரம் கல்லறையில் வைத்ததாலேயே இது சாதியப் படுகொலை என்பது தெரியவந்தது.

காரணம் இதுதான்... கடந்த 2013-ம் ஆண்டு கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர், வெட்டிக் கொல்லப்பட்டார். சாதிய மோதலால் தர்மராஜ் கொல்லப்பட்டதால், கோபத்துடன் காத்திருந்த எதிர்த் தரப்பினர் 2014, ஜூலை 9-ம் தேதி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை வெட்டிக் கொன்றனர். இதையடுத்து, கார்த்திக்கின் உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து 2014, ஆகஸ்ட் 2-ம் தேதி எதிர்த் தரப்பைச் சேர்ந்த மந்திரம் என்பவரைக் கொலைசெய்தனர். இந்தக் கொலையில் பழிக்குப் பழியாகத்தான் சங்கர சுப்பிரமணியனைக் கொலை செய்து, தலையை வெட்டி எடுத்துச் சென்று மந்திரம் கல்லறையில் வைத்துள்ளனர்.

மாரியப்பன்
மாரியப்பன்

சம்பவம்-2

சங்கர சுப்பிரமணியன் கொலையால் கோபமடைந்த அவரின் நண்பர்கள், உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் உடலை வாங்கும்போதே, ‘உன் சமாதியின் ஈரம் காயும் முன்பு பழிதீர்ப்போம்’ என்று சபதம் ஏற்றிருக்கிறார்கள். சொன்னதுபோலவே, அடுத்த இரண்டு நாள்களில் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர்கள், அவரின் தலையை எடுத்துச் சென்று சங்கர சுப்பிரமணியன் கொலைசெய்யப் பட்ட இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

அப்துல் காதர்
அப்துல் காதர்

சம்பவம்-3

பாளையங்கோட்டை சங்கர் காலனியில் வசித்துவந்த அப்துல் காதர் என்பவர், செப்டம்பர் 15-ம் தேதி இரவு நகரின் மையப்பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நான்கு பைக்குகளில் வந்த கும்பல், அப்துல் காதரைச் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியது. சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மார்ட்டின் என்ற ஃபைனான் ஸியர் கொலைசெய்யப்பட்டார். அந்தக் கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் காதர், நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்து பாளையங் கோட்டையில் தங்கியிருந்திருக்கிறார். மார்ட்டின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்த இந்தக் கொலையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

3 நாள்கள்... 5 கொலைகள்! - பழிக்குப் பழி... தலைக்குத் தலை...

சம்பவம்-4

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி, கார்த்திக் ஆகியோருக்கு இடையே முன்பகை இருந்திருக்கிறது. இது தொடர்பாக நடந்த தகராறில் இருவர்மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், செப்டம்பர் 15-ம் தேதி கார்த்திக் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தங்கப்பாண்டியைக் கொலைசெய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அதனால், தங்கப்பாண்டி உறவினர்கள் எதிர்க் கோஷ்டியைப் பழிவாங்கக் காத்திருக்கிறார்கள்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

சம்பவம்-5

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே நெடுவிளை கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை என்பவரின் மகளை கிருஷ்ணன் என்பவர் திருமணம் செய்திருக்கிறார். மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே கடந்த 20 வருடங்களாகவே குடும்பப் பகை இருந்துவந்திருக்கிறது. இந்தநிலையில், 15-ம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொன்னுதுரையை கிருஷ்ணன் வெட்டிக் கொலைசெய்தார்.

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரையிலான மூன்று தினங்களுக்குள் ஐந்து கொலைகள் நடந்திருப்பது, பொதுமக்களை அச்சமடையவைத்திருக்கிறது. நிலைமை பதற்றமடைந்ததைத் தொடர்ந்து, தென் மண்டல ஐ.ஜி அன்பு, நெல்லைக்கு வந்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளரான கே.ஜி.பாஸ்கரன், ‘‘நெல்லை மாவட்டத்தில் சாதியக் கொலைகள், வன்முறைகள் நடப்பதற்கு இங்கு போதுமான தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் இல்லாததே காரணம் என்று மோகன் கமிஷன் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை தொழில் வாய்ப்புகளைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையினர் மட்டுமே அமைதிக் கூட்டம் நடத்துவதால், சாதியக் கொலைகளைத் தடுத்துவிட முடியாது. அரசியல்வாதிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்து நல்லிணக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்’’ என்றார் அக்கறையுடன்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

எஸ்.பி மணிவண்ணனோ, “இரு கொலைகள் மட்டுமே சாதியப் பின்புலத்துடன் நடந்துள்ளன. கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் மூவரைத் தேடிவருகிறோம். கொலை நடந்த கிராமங்களில் பதற்றம் நிலவியதால், ஐந்து எஸ்.பி-க்கள் தலைமையில் 1,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பிரச்னைக்குரிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பதற்றத்தை போக்கும் வகையில் தொடர்ந்து பேசியதால் அமைதி திரும்பிவிட்டது. இருந்தாலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்றார்.

நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி இதுபோன்ற சாதிய மோதல்களும் கொலைகளும் நடந்துவருவது அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்துக்கு நல்லது அல்ல. அந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.