Published:Updated:

ரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்?
ரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்?

கோவை தி.மு.க பிரமுகர் மீது குவியும் புகார்கள்...

பிரீமியம் ஸ்டோரி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சாந்தகுமார் என்ற நிதி நிறுவன அதிபர் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டுக் கடத்தப்படுகிறார். இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் கமலக்கண்ணன், தி.மு.க-வின் மாவட்ட பிரதிநிதி மற்றும் முன்னாள் கவுன்சிலர். இதுமட்டுமல்ல...

கோவை மாவட்டம், நெகமம் அருகே நள்ளிரவு நேரத்தில் தேங்காய் லோடுடன் மினி லாரி கடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கோகுல், தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர்.

தி.மு.க-வின் கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜுக்கு நெருக்கமானவர்.தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க-வின் பெயரைச் சொல்லி ரெளடியிசம் தொடங்கிவிட்டதாகப் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், மேற்கண்ட சம்பவங்கள் கோவை உடன்பிறப்புகளையே அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கின்றன. கடந்த முறை கோட்டைவிட்ட கொங்கு மண்டலத்தை, இந்த முறை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென தி.மு.க தலைமை உறுதியாக இருக்கிறது. ‘‘ஆனால், கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரின் மகன் பின்னணியுடன் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் ஆக்டிவ்வாக இருப்பதால், கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுகிறது” என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

கோகுல் - மணிமாறன்
கோகுல் - மணிமாறன்

பிரச்னையை நன்கறிந்த பொள்ளாச்சி தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ‘‘மினி லாரி கடத்தலில் கைது செய்யப்பட்ட கோகுலும், தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனும் நெருங்கிய நண்பர்கள். மணிமாறனுக்கு, கோகுல் அரிவாள் பரிசாகக் கொடுத்ததைப் படம் எடுத்து, அதைப் பெருமையுடன் வெளியிட்டார்கள். ‘எங்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுக்கும்விதமாகவே இந்தப் படத்தை அவர்கள் வெளியிட்டார்கள். ஆனால், இதையெல்லாம் தென்றல் செல்வராஜ் கண்டிப்பதே இல்லை. கடந்த ஆண்டு தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு வந்தபோது, தென்றல் செல்வராஜ், மணிமாறன் ஆகியோருடன் கோகுலும் இணைந்து தலைவருக்கு வீரவாள் பரிசளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுடனும் மணிமாறன் நட்பில் இருந்திருக்கிறார். அதனால்தான் மணிமாறனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பி விசாரித்தது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மிரட்டல் என இவர்கள் ஆதரவுடன் கொங்கு மண்டலமே ரெளடிகள் ராஜ்ஜியமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைக் கட்சியில் வைத்திருந்தால் தேர்தலில் எப்படி வெற்றிபெற முடியும்? அதேபோல, நிதி நிறுவன அதிபரைக் கடத்திய குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட கமலக்கண்ணனும் தென்றல் செல்வராஜுடன் நெருக்கமாக இருக்கிறார்.

இதேபோல ஒரு பெண்ணை மிரட்டி, துன்புறுத்தியதாக ராமமூர்த்தி என்பவர்மீது சமீபத்தில் வன்கொடுமை வழக்கு பாய்ந்தது. இந்த ராமமூர்த்தி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ-வான கார்த்தியின் தீவிர ஆதரவாளர். இவருக்கு மீண்டும் பதவியைக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ளார்கள். இந்தப் பிரச்னைகளையெல்லாம் சரிசெய்தால் தான், கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியும்’’ என்றார்கள்.

இவை குறித்தெல்லாம் தென்றல் செல்வராஜிடம் கேட்டோம். ‘‘இது முற்றிலும் தவறான தகவல். எங்கள் வளர்ச்சி பிடிக்காமல், விஷமிகள் பொய் செய்திகளைப் பரப்பிவருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என் மகனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த விவகாரத்தை முதலில் கையிலெடுத்து போராடியவன் நான்தான். அதனால்தான், என் குடும்பத்தினர்மீது அவதூறு பரப்பிவருகின்றனர். நீங்கள் சொல்லும் மற்ற இரண்டு வழக்குகள், அவர்களின் தனிப்பட்ட ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக நடந்துள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன்’’ என்றார்.

ரௌடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்?

மணிமாறனைத் தொடர்பு கொண்டோம். ‘‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குலதெய்வக் கோயிலுக்காக கோகுல் அரிவாள் செய்து கொடுத்தார். அப்போது எடுத்த போட்டோ அது. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அவர்களைவிட்டு விலகிவிடுகிறேன்’’ என்றார்.

கமலக்கண்ணன் தற்போது சிறையில் இருக்கிறார். கோகுலிடம் பேசியபோது, ‘‘நான் தி.மு.க உறுப்பினர் கிடையாது; தி.மு.க ஆதரவாளன்... அவ்வளவுதான். நண்பர் ஒருவரின் ஃபைனான்ஸ் பிரச்னையில் என்மீதும் வழக்கு பதிந்துவிட்டனர். சம்பவம் நடந்தபோது நான் ஸ்பாட்டிலேயே இல்லை. எனக்கு வேண்டப்பட்ட ஒருவர் கோயில்களுக்கு சூலாயுதம், வேல், அரிவாள் போன்றவற்றைத் தயாரிப்பார். எனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அவரிடமிருந்து வேல், அரிவாள் வாங்கித் தருவேன். அப்படித்தான் மணிமாறனுக்கு, அவர்களின் குலசாமிக்காக அரிவாள் வாங்கிக் கொடுத்தேன்’’ என்றார்.

ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது; கட்சியில் ‘கறை’ படிந்தவர்களைக் களையெடுக்கவும் தெரிய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு