Published:Updated:

தொடரும் கொலைகள்... பழிவாங்கும் பூமியாகிறதா நெல்லை?

தொடரும் கொலைகள்.
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் கொலைகள்.

பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்குள் அடைக்கப்பட்ட முத்து மனோ என்ற பட்டியல் சமூக இளைஞரை, மாற்றுச் சமூக கைதிகள் சிலர் அடித்துக் கொலை செய்தார்கள்

தொடரும் கொலைகள்... பழிவாங்கும் பூமியாகிறதா நெல்லை?

பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்குள் அடைக்கப்பட்ட முத்து மனோ என்ற பட்டியல் சமூக இளைஞரை, மாற்றுச் சமூக கைதிகள் சிலர் அடித்துக் கொலை செய்தார்கள்

Published:Updated:
தொடரும் கொலைகள்.
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் கொலைகள்.

அமைதியாக இருந்த நெல்லை மாவட்டம் மீண்டும் கொலைக்களமாக மாறத் தொடங்கியிருக்கிறதோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. சாதிய வன்முறையால் அப்பாவிகள் கொல்லப்படுவதுதான் அச்சத்துக்குக் காரணம்.

பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்குள் அடைக்கப்பட்ட முத்து மனோ என்ற பட்டியல் சமூக இளைஞரை, மாற்றுச் சமூக கைதிகள் சிலர் அடித்துக் கொலை செய்தார்கள். ‘கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கும் எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்’ என்று 72 நாள்கள் போராட்டம் நடத்திய முத்து மனோவின் உறவினர்கள், ஜூலை 2-ம் தேதிதான் உடலைப் பெற்று அடக்கம் செய்தார்கள். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், ‘பழிக்குப் பழி வாங்குவோம்’ என்று சபதமேற்றதால், அச்சத்தில் இருந்தார்கள் மக்கள். இந்தநிலையில்தான், வடக்கு தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஜூலை 12-ம் தேதி கொலை செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புனிதா
புனிதா

கட்டட கான்ட்ராக்டரான கண்ணன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வெட்டிச் சாய்த்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ‘மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்’ என்று கண்ணனின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள்.

கணவனை இழந்த சோகத்திலிருந்த கண்ணனின் மனைவி புனிதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் பேசினோம். கண்களைத் துடைத்துக்கொண்டு பேசியவர், ‘‘என் வீட்டுக்காரர் சாதிரீதியா எந்த விஷயத்திலும் தலையிட மாட்டாரு. யாரோடயும் அவருக்கு விரோதமும் இல்லை. ஆனா, அவரோட வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் சாதியைக் காரணமாவெச்சு அநியாயமா கொன்னுட்டாங்க. இந்தக் கொலைக்கு பின்னணியில இருக்குற ஆறு பேர் பட்டியலை போலீஸ்கிட்ட கொடுத்திருக்கேன். அவங்களைக் கைதுசெஞ்சு தண்டனை வாங்கிக் கொடுக்கணும். அஞ்சு வயசுலயும் மூணு வயசுலயும் இருக்குற பசங்க, ‘அப்பா எங்கேம்மா’னு கேட்கும்போது உசுர அறுக்குறது மாதிரி இருக்கு. இந்தப் பிள்ளைகளை எப்படி காப்பாத்தப்போறேனோ?’’ என்று கதறினார்.

தொடரும் கொலைகள்... பழிவாங்கும் பூமியாகிறதா நெல்லை?

சிறையில் கொல்லப்பட்ட முத்து மனோ கொலை வழக்கில் தொடர்புடைய ஜேக்கப் என்ற கைதி, கண்ணனின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே கண்ணன் கொல்லப்பட்டிருப்பதாக அவரின் உறவினர்கள் குமுறுகிறார்கள். ‘‘இந்த ஊரில் யாரையாவது போட்டுத்தள்ளும் திட்டத்துடன் இருந்த சிலர், அநியாயமாக கண்ணனைக் கொன்றிருக்கிறார்கள். காவல்துறை பெண் அதிகாரி ஒருவருக்கும் இந்த விஷயத்தில் தொடர்பிருக்கிறது. அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று அவர்கள் படபடத்தார்கள்.

கண்ணன் கொலையைக் கண்டித்து அவர் சார்ந்த சமுதாய அமைப்பினர் வெளியிட்டுள்ள கண்டன வீடியோக்கள் நிலைமையை இன்னும் சூடேற்றுகின்றன. பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘சிறைக்குள் முத்து மனோ கொல்லப்பட்ட சம்பவத்துக்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் வெளியே வந்த பிறகு பழி தீர்க்க வேண்டுமே தவிர, அப்பாவிகளைக் கொல்வதை ஏற்க முடியாது’’ என்று எச்சரித்திருக்கிறார். அவரது கட்சி நிர்வாகிகள் சிலரும் இதேபோல பேசி வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பியிருக்கிறார்கள்.

தொடரும் கொலைகள்... பழிவாங்கும் பூமியாகிறதா நெல்லை?

இதைத் தொடர்ந்து மதுரைக்கு வந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதல்கள் அதிகரித்துவருவது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தென் மண்டல ஐ.ஜி-யான அன்பு நெல்லைக்கு வந்து ஆய்வு செய்தார். முத்து மனோ கொலைக்குப் பழிவாங்கும் வகையில், இரு வழக்கறிஞர்களுக்குக் குறி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால், அவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

“நெல்லை அமைதிப்பூங்காவாகத் திகழ என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என்று எஸ்.பி மணிவண்ணனிடம் கேட்டோம். ‘‘கண்ணன் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் முத்து மனோ கொலைச் சம்பவம் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம். நெல்லை அமைதிப்பூங்காவாகத் தொடரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’’ என்றார்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

அப்பாவிகள் உயிரைப் பறிக்கும் கொடூர மனம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது காவல்துறையின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism