Published:Updated:

தொடரும் படுகொலைகள்... திருவாரூர் திகில்!

திருவாரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாரூர்

நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணான ஜெயபாரதி, திருவாரூர் தப்பாளம்புலியூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சரக்கு வாகனம் மோதி இறந்தார்

தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்துவரும் கொலைகள் மக்களை திகிலில் உறையவைத்திருக்கின்றன. அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கொலைசெய்யப்படுவது, கூலிப்படையினரால் நடுரோட்டில் துள்ளத்துடிக்கக் கொலைசெய்யப்படுவது, முன் பகையால் திட்டமிட்டுக் கொலைசெய்யப்படுவது... என்று மாவட்டமெங்கும் ரத்தம் தெறிக்கிறது. காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதும், அடிக்கடி எஸ்.பி-க்கள் மாற்றப்பட்டதும்தான் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணம் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

கடந்த மே 21-ம் தேதி... நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணான ஜெயபாரதி, திருவாரூர் தப்பாளம்புலியூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சரக்கு வாகனம் மோதி இறந்தார். இந்தச் சம்பவத்தில் முதலில் விபத்து என்றே வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், ‘இது திட்டமிட்ட படுகொலை’ என்று ஜெயபாரதியின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர் விஷ்ணுபிரசாத்துக்கு ஜெயபாரதி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால், ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்தபடியே விபத்துபோல அந்த மாஸ்டர் மர்டர் பிளானை அரங்கேற்றியிருக்கிறார்.

ஜெயபாரதி, ரஜினி பாண்டியன், தமிழார்வன், குமரேசன்
ஜெயபாரதி, ரஜினி பாண்டியன், தமிழார்வன், குமரேசன்

ஜூன் 18-ம் தேதி நள்ளிரவு... கூடூரிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்கச் சிலர் முயன்றார்கள். அதையறிந்த அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் தமிழரசனும் அப்பகுதி மக்களும் அங்கு வந்ததால், கொள்ளையர்கள் தப்பித்துச் சென்றார்கள். அவர்களைத் துரத்திச் சென்ற தமிழரசனை, அந்தக் கொள்ளைக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது.

ஜூலை 9-ம் தேதி... திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆரியூரைச் சேர்ந்த, `வளரும் தமிழகம்’ கட்சியின் மாவட்டச் செயலாளரான ரஜினி பாண்டியன், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது, அசாதாரணமான சூழல் நிலவியது. அப்போது திடீரென்று காவல்துறையினரின் கண் எதிரிலேயே அப்பாவி டூ வீலர் மெக்கானிக் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

தொடரும் படுகொலைகள்... திருவாரூர் திகில்!

ஆகஸ்ட் 9-ம் தேதி... மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர்ப் பகுதியில் இஸ்ரத் என்ற பாலிடெக்னிக் மாணவர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போலீஸாரின் விசாரணையில், பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவரின் நண்பர்கள் நால்வரே அவரைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலைசெய்தது தெரியவந்தது.

நவம்பர் 10-ம் தேதி... நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன், கடைத்தெருவில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டார்கள். முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

நவம்பர் 15-ம் தேதி... அகரதிருநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், இரு சக்கர வாகனத்தில் கடாரங்கொண்டான் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஐந்து பேர்கொண்ட கும்பல் அவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தது. முன்பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்கிறது போலீஸ். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கொலைச் சம்பவங்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டிருக்கிறோம். இவை தவிர, மேலும் சில கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலை மற்றும் சட்டம், ஒழுங்குச் சீரழிவுக்கான காரணங்களைப் பற்றிப் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ‘‘திருவாரூர் மாவட்டத்தில் 1,200 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், 900 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஐந்து இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உளவுத்துறையின் செயல்பாடுகளும் மந்தமாகவே இருக்கின்றன. இவையெல்லாம்தான் மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம். அத்துடன், மாவட்ட எஸ்.பி அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால், ஏரியாவை அவர்களால் முழுமையாக ஸ்டடி செய்ய முடியவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் கயல்விழி, சீனிவாசன் ஆகிய இரண்டு எஸ்.பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார்கள். மாவட்டத்தின் நிலவரத்தை அறிந்துகொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தேவைப்படும். தற்போதுள்ள எஸ்.பி விஜயகுமாரையாவது சிறிது காலத்துக்கு இங்கு விட்டுவைப்பார்களா என்று தெரியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார்.

விஜயகுமார்
விஜயகுமார்

கொலைகள் அதிகரிப்பது தொடர்பாக எஸ்.பி விஜயகுமாரிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே பல வருடங்களாக நீடித்துவரும் பகையின் காரணமாகவே கொலைகள் நடந்துள்ளன. அதேசமயம் திருவாரூரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். குற்றச் செயல்கள் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த இரு மாதங்களில் இந்த மாவட்டத்தில் 50 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆறு மாதங்களில் 30 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டிருக்கிறது’’ என்றார்.

குற்றங்கள் நடப்பதை முன்கூட்டியே அறிந்து தடுப்பதே காவல்துறையின் கடமை. ரெளடிகளின், சமூக விரோதிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்தாலே குற்றங்களில் பாதியையாவது தடுக்க முடியும்.