Published:Updated:

`சாராய கும்பலுடன் டீலிங்; காவல்நிலையத்தில் சூது!?'- கதிகலங்க வைக்கும் கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷன்

கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷன்
கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷன்

காவல்நிலையத்தில் கேமரா இருப்பதால், எதிரே இருக்கும் சவுக்குத் தோப்புதான் அவர்களின் அலுவலகம். பஞ்சாயத்து தொடங்கி பலவிதமான டீலிங்கும் அங்கேயே முடிந்துவிடும். சில காவலர்கள் சாராயம் விற்கும் பெண்களுடன் நெருங்கிப் பழகிவருகிறார்கள்.

காவல்நிலையத்தில் சூதாடிக்கொண்டிருந்த காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த அதிகாரி அவர்களை வேறு இடங்களுக்கு பணிமாறுதல் செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. உளவுப் பிரிவிலிருந்தவர்களும் சீருடைப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த கூவத்தூர்  இளைஞர்கள்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த கூவத்தூர் இளைஞர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ளது கூவத்தூர். கள்ளச் சாராயம், கஞ்சா, சூது, விபசாரம் என அனைத்து சமூக விரோதச் செயல்களும் இங்கே தாராளமயமாக்கப்பட்ட பூமி. இதற்கெல்லாம் சில காவலர்களே உடந்தையாக இருந்து வருகிறார்கள் என அப்பகுதியினர் பல வருடங்களாகவே கொந்தளிக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்கள் சில இளைஞர்கள்.

``நாங்க கூவத்தூர் பக்கத்துல இருக்கும் வடபட்டினத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்க ஊருல எட்டு வருஷமா சாராயம் காய்ச்சி விற்கறாங்க. இதனால் சின்ன பசங்களெல்லாம் குடிக்க ஆரம்பிசுட்டாங்க. பெரியவங்க கூலி வேலைக்குப் போய் கொண்டு வரும் சம்பளத்தை வீட்டில் கொடுக்காம குடிச்சே அழிக்கிறாங்க. கடந்த சிலதினங்களில் மட்டும் சாராயம் குடித்ததால் மூன்றுபேர் இறந்திருக்கிறார்கள்.

வடபட்டினம் கிராமம் முழுக்கவே சாராயம் விற்பனை அதிகமாக இருக்கிறது. சாராயம் விற்கக் கூடாதுன்னு சொன்னால் ரவுடிகளை வைத்து மிரட்டுறாங்க. கூவத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், அவங்க எங்களையே மிரட்டுகிறார்கள். சாராய வியாபாரிகளிடம் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால்தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.

கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷன்
கூவத்தூர் போலீஸ் ஸ்டேஷன்

``கூவத்தூர் பழைய காவல் நிலையத்துக்குப் பின்புறமாக சாராயம், காட்டன் சூது, கஞ்சா, விபசாரம் என அனைத்தும் நடைபெறுகிறது. முகையூர் உள்ளிட்ட பல இடங்களில் காட்டன் சூது அதிகமாகிவிட்டது. தற்போது இருக்கும் காவல்நிலையம் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் உள்பக்கமாக இருப்பதால் காவலர்களின் சொர்க்கமாக காவல்நிலையம் இருக்கிறது. காவல்நிலையத்தில் கேமரா இருப்பதால், எதிரே இருக்கும் சவுக்குத் தோப்புதான் அவர்களின் அலுவலகம். பஞ்சாயத்து தொடங்கி பலவிதமான டீலிங்கும் அங்கேயே முடிந்துவிடும். சில காவலர்கள் சாராயம் விற்கும் பெண்களுடன் நெருங்கிப் பழகிவருகிறார்கள்” என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்திலேயே காவலர்கள் சூதாடுவதாக மாமல்லபுரம் ஏ.எஸ்.பி சுந்தரவதனத்துக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. திடீரென ஆய்வுசெய்த சுந்தரவதனம் கையில் சீட்டுக்கட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்த காவலர்களைப் பிடித்துவிட்டார். ஏ.எஸ்.பியைக் கண்டதும் மிரண்டு போன காவலர்கள் திருதிருவென விழித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சில காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உளவுப் பிரிவில் பணியாற்றிய காவலர்களுக்கு சீருடைப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் அதிரடியால் கூவத்தூர் காவல்நிலையமே கதிகலங்கிப் போய் உள்ளது.

ஏ.எஸ்.பி சுந்தரவதனம்
ஏ.எஸ்.பி சுந்தரவதனம்

இது குறித்து மாமல்லபுரம் ஏ.எஸ்.பி சுந்தரவதனத்திடம் பேசினோம். ``கூவத்தூர் காவல்நிலையத்தின் மேல்தளத்தில் ஓய்வு அறை உள்ளது. பணியை முடித்த சில காவலர்கள் அங்கே தங்கி இருந்தார்கள். ஓய்வு நேரம் என்பதால் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்த இடம் காவல்நிலையம் என்பதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கூவத்தூர் பகுதிகளில் அதிக அளவு சாரயம் விற்று வந்தது உண்மைதான். இதற்காகத் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறோம்.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யாக கண்ணன் பொறுப்பேற்ற பிறகு வாரத்துக்கு இரண்டு முறை என ஒரு மாதத்துக்கு மேல் அப்பகுதிகளில் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறார். இதனால் கள்ளச் சாராய விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. கள்ளச் சாராயம், கள் உள்ளிட்டவை முற்றிலும் ஒழியும்வரை தொடர்ந்து அப்பகுதியில் ரெய்டு நடத்த இருக்கிறோம். தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்” என்கிறார்.

பின் செல்ல