Published:Updated:

`துப்பாக்கியைக் கொடுத்தது ஆளும்கட்சி புள்ளியா?!' -காஞ்சி மாணவர் கொலையில் அடுத்தடுத்த திருப்பம்

போலீஸாரின் விசாரணையில் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகரின் பெயரே அடிபடுகிறது. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது காஞ்சி காவல்துறை.

நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய்
நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய்

கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த விஜய் என்பவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், ஆளும்கட்சியின் பிரமுகர் வழியாக துப்பாக்கி வந்ததாக விஜய் தெரிவித்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது காவல்துறை.

முகேஷ்
முகேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியில் வசிக்கும் சகோதரர்களான விஜயகுமார் (எ) விஜய், உதயா ஆகியோர், இவருக்கு நண்பர்கள் என்பதால் அவ்வப்போது அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

கடந்த 5-ம் தேதி காலை 7 மணிக்கு விஜயகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார் முகேஷ். இருவரும் அறையில் தனியாக இருந்தபோது, 10.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்த உதயா வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு கையில் துப்பாக்கியுடன் இருந்த விஜய், அந்த இடத்திலிருந்து வெளியேறினார். துப்பாக்கி குண்டு நெற்றியில் துளைத்த நிலையில் சரிந்துகிடந்தார் முகேஷ்.

இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் முகேஷ். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். சம்பவம் நடந்த அடுத்த நாளே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார் விஜய். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி காயத்ரிதேவி. கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாழம்பூர் காவல்துறையினர் விஜயகுமாரை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி பெற்றனர்.

உள்ளூர் அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவருடன் விஜய்க்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், கடந்த இரண்டு நாள்களாகப் பக்குவமாகவே விசாரிக்கப்பட்டார் விஜய். விசாரணையின் போது துப்பாக்கி கைக்குக் கிடைத்த வழி குறித்து முரண்பாடான தகவல்களை அளித்து வருகிறார். எப்படி விசாரித்தாலும் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர் பெயரே விசாரணையில் அடிபடுகிறது. இதனால் வழக்கின் அடுத்தகட்டத்தைப் பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

விஜயகுமார்
விஜயகுமார்

துப்பாக்கியைக் கல்குவாரியில் வீசியதாகவும் நெருக்கமான ஒருவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் வெவ்வேறு தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். பிறகு அதேபகுதியைச் சேர்ந்த நண்பரின் வீட்டின் அருகே துப்பாக்கியைப் புதைத்து வைத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து அந்தத் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியிருப்பதாகவும் சொல்கின்றனர். `யார் அந்த ஆளும்கட்சிப் பிரமுகர், அவருக்கும் மாணவர் கொலைக்கும் என்ன தொடர்பு?' என்பன போன்ற தகவல்கள் வெளியாகுமா எனக் காத்திருக்கின்றனர் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் உறவினர்கள்.