Published:Updated:

கந்துவட்டிக் கொடுமையால் விவசாயி தற்கொலை? - சர்ச்சையான வாக்குமூல வீடியோ!

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து உடனே கட்டுமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக் காசாளர் கருப்பையா பணத்தைக் கேட்டு அவதூறாகப் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது.

கந்துவட்டிக் கொடுமையால் விவசாயி தற்கொலை? - சர்ச்சையான வாக்குமூல வீடியோ!

கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து உடனே கட்டுமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக் காசாளர் கருப்பையா பணத்தைக் கேட்டு அவதூறாகப் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காசாளர் கருப்பையா என்பவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.

கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து உடனே கட்டுமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையா பணத்தைக் கேட்டு அவதூறாகப் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாகப் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துவந்ததால், மனமுடைந்த தங்கவேல் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு மாற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தங்கவேலுவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையே இளஞ்செம்பூர் போலீஸார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையாவை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

தங்கவேல்
தங்கவேல்

தங்கவேலு தான் இறப்பதற்கு முன்னதாக தனது வாட்ஸ்அப்பில் தன் இறப்புக்கான காரணம் குறித்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில், ``நான் வாங்கிய பணத்துக்கு தற்போது வரை அசல் பணம் 3 லட்சம் ரூபாய்க்கும் மேலாகவும், 3.5 லட்சம் ரூபாய் வட்டியாகவும் செலுத்தியிருக்கிறேன். ஆனால், கருப்பையா என்னிடம் மூன்று லட்சத்துக்கு பதிலாக 6 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, என்னை ஏமாற்றி கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டார். எனவே, இந்த வீடியோ குறித்து தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருக்குத் தெரிவிக்க வேண்டும்" எனப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``இறந்த தங்கவேல், கருப்பையாவிடம் குறைந்த வட்டிக்குப் பணத்தைப் பெற்று அதே பணத்தை பரமக்குடியில் சிலரிடம் கூடுதல் வட்டிக்கு பணத்தைக் கொடுத்து வந்துள்ளார். தங்கவேல் கொடுத்த நபர்கள் பணத்தைக் கொடுக்காமல் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பரமக்குடியில் கூடுதல் வட்டிக்குக் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்க முடியாத நபர்கள் சிலர் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் தப்பிவிட்டனர். இந்த நிலையில், கருப்பையா தனது பணத்தை உடனடியாக கேட்டதால் திருப்பிக் கொடுக்க முடியாத தங்கவேல் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துவிட்டார்'' என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism