சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை தனியாக இருந்தபோது, திரு.வி.க நகரைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர், குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக குழந்தையின் அம்மா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு ஆகாஷை போலீஸார் கைதுசெய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. போலீஸார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து 21-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் எதிரி ஆகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அடுத்து போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவையனைத்தையும் குற்றவாளி ஆகாஷ், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 2020-ம் ஆண்டு ஆகாஷைக் கைது செய்யும்போது அவருக்கு வயது 19. இந்த வழக்கு கடந்த இரண்டாண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி ஆகாஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்" என்றனர்.
இந்த வழக்கை சிறப்பாகப் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்த செம்பியம் அனைத்து மகளிர் போலீஸாரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.