Published:Updated:

மகாராஷ்டிரா: `காலி பாட்டில்களில் போலி ரெம்டெசிவிர் மருந்து!’ -பேரிடரிலும் ஆதாயம் தேடும் விஷமிகள்

மருந்து கடை
மருந்து கடை

மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் கஷ்டத்தில் சில விஷமிகள் ஆதாயம் தேட ஆரம்பித்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து காலி பாட்டில்களை எடுத்து சென்று அதில் போலி மருந்தை நிரப்பி விற்பனை செய்த கும்பல் மகாராஷ்டிராவில் பிடிபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று சற்று குறைய ஆரம்பித்துள்ளது. மற்றொரு புறம் கொரோனா நோயாளிகளின் உயிரோடு ஒரு கும்பல் விளையாடிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்தல் மற்றும் பல மடங்கு லாபத்துடன் விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இம்மருந்து கிடைக்காமல் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் போது அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

மும்பை மருந்து கடை
மும்பை மருந்து கடை

இம்மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக கட்டணத்தில் விற்பனை செய்கின்றனர். மருந்து தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் இது தொடர்பாக தேடுவது மற்றும் கோரிக்கை விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை குறி வைத்து மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டி வருகிறது. இது போன்ற மோசடி தொடர்பாக போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் மருந்துகள் பதுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய மாநிலம் முழுவதும் உள்ள மருந்து குடோன்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதோடு மருந்து கடைகள், குடோன்கள் மற்றும் மருத்துவமனைகளில் போலீஸார் உளவாளிகள் மூலம் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

இம்மருந்துக்கு அதிக அளவில் கிராமங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கிராமங்களில் தான் இது போன்ற மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். புனே அருகில் உள்ள சரத்பவாரின் சொந்த ஊரான பராமதியில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றை கண்டுபிடித்துள்ளர். இங்கு மருத்துவமனைகளில் கிடைக்கும் ரெம்டெசிவிர் காலி மருந்து பாட்டில்களை எடுத்து வந்து போலி மருந்தை நிரப்பி அதனை அப்பாவி நோயாளிடம் பல மடங்கு லாபத்தில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேயின் மற்றொரு இடத்தில் இம்மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

சட்டவிரோதமாக மருந்து விற்பனை செய்தல், போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தல் போன்ற காரணத்திற்காக புனேயில் மட்டும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் 11 வழக்குகளும், அவுரங்காபாத்தில் 4 வழக்குகள் என மாநிலம் முழுவதும் 50 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை, படுக்கை கிடைக்காமல் விழிபிதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில் போலி மருந்து பிரச்னையும் இப்போது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆன்லைனில் மருந்து வழங்குவதாக யாராவது தெரிவித்தால் அவர்களிடம் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு