Published:Updated:

ஐதராபாத்: கொரோனா நோயாளியை அலைக்கழித்த மருத்துவமனைகள்! - தாயின் மரணத்தால் கலங்கி நிற்கும் மகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காந்தி மருத்துவமனை - ஐதராபாத்
காந்தி மருத்துவமனை - ஐதராபாத்

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டும், கொரோனா சான்றிதழ் வழங்காமல் அலட்சியமாக இருந்த சுகாதாரத்துறையாலும், சிகிச்சை அளிக்க மறுத்து அலைக்கழித்த மருத்துவமனைகளாலும் தன் தாயை மரணத்திடம்  பறிகொடுத்திருக்கிறார் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிரதீப்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (26). தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துவரும் பிரதீப்பின் தாய் ஜெயம்மாவுக்கு கடந்த வாரம் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரதீப், ஜெயம்மாவை கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள், ஜெயம்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதற்கு கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் வழங்காமல் அவரது ஆதார் அட்டை நகலின் பின்னால் வெறுமனே `கொரோனா பாசிட்டிவ்’ என்று எழுதி அனுப்பியிருக்கின்றனர்.

சுகாதாரத்துறை எழுதி கொடுத்த ஆவணம்.
சுகாதாரத்துறை எழுதி கொடுத்த ஆவணம்.

பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஜெயம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிரதீப், தன் தாய் ஜெயம்மாவை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என ஐதராபாத் நகரின் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், சென்ற இடமெல்லாம் மருத்துவர்கள் ஜெயம்மாவிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான உரிய சான்றிதழ் இல்லாததால் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

ஜெயம்மாவை ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கிய பிரதீப், கடைசியாக பிரத்யேக கொரோனா சிகிச்சை மையம் அமைந்துள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அதற்குள் ஜெயம்மாவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. காந்தி நகர் மருத்துவமனை நிர்வாகத்தினர், கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் கொரோனா நோயாளி ஜெயம்மாவை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாது என்று அலட்சியமாகக் கூறி விரட்டியதாகக் கூறப்படுகிறது.

மிகுதியான மூச்சுத்திணறல் பிரச்னையால் துடித்துக்கொண்டிருந்த ஜெயம்மாவை காந்தி மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு செய்வதறியாது பிரதீப் அழுது புலம்பியிருக்கிறார். மருத்துவமனை வாசலிலேயே ஒரு மணி நேரமாக உயிருக்குப் போராடும் தாயுடன் பிரதீப் மருத்துவர்களின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்திருக்கிறார். ஒருகட்டத்தில், மருத்துவர்களின் அலட்சியப்போக்கைக் கண்டு கொதித்துப்போன பிரதீப், தன் மொபைலில் மருத்துவமனை வளாகத்தையும், ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடும் தன் தாய் ஜெயம்மாவையும் காட்டி கொரோனா சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் குறித்தும், அனுமதிக்காமல் அலைக்கழித்த மருத்துவமனைகள் குறித்தும் தழுதழுத்த குரலில் தனது ஆதங்கத்தை வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.

காந்தி மருத்துவமனை - ஐதராபாத்
காந்தி மருத்துவமனை - ஐதராபாத்

பிறகு, தன் தாயின் நிலைமையை மீண்டும் காந்தி நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் பிரதீப் எடுத்துக் கூறியிருக்கிறார். பிரதீப்பின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மருத்துவர்கள், கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கின்றனர். அதற்குள்ளாக, ஆம்புலன்ஸில் கொரோனா பாதிப்பால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரதீப்பின் தாய் ஜெயம்மா, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தாய் உயிரிழந்ததைக் கண்டு மனமுடைந்துபோன பிரதீப், கதறி அழுதபடி மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் அங்கிருந்து ஜெயம்மா உடல், பொக்லைன் இயந்திரம் மூலம் அருகிலிருந்த சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது உடலைக் கொண்டு சென்ற பிரதீப் உட்பட உடன் வந்தவர்கள் யாரும் பாதுகாப்புக் கவச உடைகள் அணியாமலேயே சென்றிருக்கின்றனர்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

கொரோனா சான்றிதழ் வழங்காமல் அலட்சியமாக இருந்த சுகாதாரத்துறையாலும், சிகிச்சை அளிக்க மறுத்து அலைக்கழித்த மருத்துவமனைகளாலும் தன் தாயைப் பறிகொடுத்த பிரதீப், ஜெயம்மா இறந்து சரியாக 48 மணி நேரம் கழித்து, தான் மருத்துவமனையில் பதிவு செய்த வீடியோவுடன் 'R.I.P சொசைட்டி' என்று தன் மொபைல் போனில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். பிரதீப்பின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தற்போது இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா நோயாளிக்கு நேரிட்ட கொடுமைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் கண்டனக் குரல்களையும், குமுறல்களையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெயம்மாவுடன் இருந்த பிரதீப்பை அவரது உறவினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதன் பேரில் பிரதீப் தற்போது அதே மருத்துவமனையில் பரிசோதனைக்குத் தனது ரத்த மாதிரிகளைக் கொடுத்து விட்டு பரிசோதனை முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். `பிரதீப்பின் தாய் ஜெயம்மாவை கொன்றது கொரோனாவா அல்லது மருத்துவமனைகளின் அலட்சியமா..?’ என்ற ஆதங்கக் கேள்வியை நாம் இந்தச் சமூகத்திடம்தான் முன்வைத்தாக வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு