Published:Updated:

டாஸ்மாக் சென்ற கொரோனா நோயாளி.. அதிர்ச்சிகொடுத்த டிராவல் ஹிஸ்ட்ரி.. அச்சத்தில் தேனி மக்கள்!

கிராமத்தில் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
கிராமத்தில் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

கொரோனா தொற்று உறுதியான நபர் டாஸ்மாக் சென்று வரிசையில் நின்று மது வாங்கியதாக வெளியான தகவல் தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால், தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இன்று மேலும் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் டாஸ்மாக் சென்று வரிசையில் நின்று மது வாங்கியதாக வெளியான தகவல் தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குளோரின் பவுடர் தூவப்படுகிறது
குளோரின் பவுடர் தூவப்படுகிறது

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி ஏற்றிச் சென்றதாக, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கோட்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரது டிராவல் ஹிஸ்ட்ரி எடுத்த சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது வீட்டில் இருந்து, அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்ற அவர், மது வாங்க வரிசையில் நின்று மது வாங்கியது மட்டுமல்லாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

`11 மாதக் குழந்தைக்கு பெங்களூரிலிருந்து வந்த உணவுப்பொருள்!’ - உதவிய தேனி மாவட்ட நிர்வாகம்

இதனை அடுத்து, கெங்குவார்பட்டி டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது ஒருபுறம் என்றால், கோட்டார்பட்டி கிராமம் முழுவதையும் சுகாதாரத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. வீடுகள் தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சாலைகளில், குளோரின் பவுடர் தூவப்பட்டுள்ளது.

கோட்டார்பட்டி கிராமத்தில் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
கோட்டார்பட்டி கிராமத்தில் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

கிராமத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சமடைந்துள்ள நிலையில், கிராமத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறையினர், வீடு வீடாகச் சென்று, கிராமத்தினர் அனைவரையும் பரிசோதித்துவருகிறார்கள். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கெங்குவார்பட்டி டாஸ்மாக்கிற்கு அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருக்கலாம் என்பதால், தேனி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், வீரபாண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோடு தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 57. இதில், ஒருவர் உயிரிழந்தார். 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 14 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

`கொலை… சாலை மறியல்… முற்றுகை!’ - தேனி டாஸ்மாக் களேபரங்கள்
அடுத்த கட்டுரைக்கு