Published:Updated:

ஏழைகளை வதைக்கும் 'காட்டன் சூதாட்டம்'! -மாமூலில் புரளும் வேலூர் காவல் துறை

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் மாவட்டத்தில், மூலைமுடுக்கெல்லாம் ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து, ‘காட்டன் சூதாட்டம்' கொடிகட்டிப் பறக்கிறது. இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் தரப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Lottery
Lottery

வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 64 காவல் நிலையப் பகுதிகளிலும், நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. `கறைபடியாத காவலர்களையும் ரத்தக்கறை படியாத ஊர்களையும் காண முடியாது’ என்கிறார்கள் மக்கள். இம்மாவட்டத்தில் சுமார் 1,300 பேர் ரவுடிகளாகவும், வழிப்பறி கொள்ளையர்களாகவும் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள்.

District Police office, Vellore
District Police office, Vellore

இப்படியிருக்க, பாலாற்றில் மணல் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்றுவருகிறது. மணல் மாஃபியாக்களை வழிநடத்துவதே அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்தான். அதனால் காவல் துறையினரும் `கரன்சி’ வாங்கிக்கொண்டு கண்டுகொள்வதில்லை என்கிறார்கள் மக்கள். இந்த நிலையில், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை மற்றும் நம்பர் விளையாட்டான 'காட்டன் சூதாட்டம்' வேலூர் பகுதிகளில் அமோகமாக நடக்கிறது என அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டட வேலை உட்பட தினக் கூலிக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் என இவர்களைக் குறிவைத்தே காட்டன் சூது நடத்தப்படுகிறது. 'ஒரு ரூபாய் செலுத்தினால் 1,000 ரூபாய் கிடைக்கும். அதிர்ஷ்டம் வீட்டுக் கதவைத் தட்டுது’ என்று ஆசை வார்த்தை கூறி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை இதில் ஈடுபட வைக்கின்றனர். அவர்களும் ஆசையில் 500, 600 ரூபாயை காட்டன் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஏமாந்து வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்கிறார்கள். இதைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை என மக்கள் புலம்புகின்றனர்.

Cotton Gambling
Cotton Gambling

குறிப்பாக, பெட்டிக்கடை மற்றும் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. நம்பர் எழுதிய சின்னச் சின்ன டோக்கன்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு, முடிவுகளை அவர்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாலை நேரங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. காசு கரியாவது மட்டுமே மிச்சம். இதுவரை ஒரு தொழிலாளிக்கும் ‘ஜாக்பாட்’ அடிக்கவில்லை. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி காட்டன் விளையாடிய பல பேர் வீடு, பொருள்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

காவல் நிலையங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் ‘மாமூல்’ வாங்குவதாகக் கூறப்படும் புகார் குறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.
வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி

பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் நடக்கின்றன. கடனாளியான சிலர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. காட்டன் தில்லுமுல்லு நடப்பதில் வேலூர் மாவட்டத்துக்கே தலைமையிடம் ‘குடியாத்தம்’ என்கிறார்கள், நன்கு விவரமறிந்த மக்கள்.

குடியாத்தம் சப்-டிவிஷனில் உள்ள 6 காவல் நிலையப் பகுதிகளிலும் காட்டன் சூதாட்டம் `களை’கட்டுகிறது. போலீஸார் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, காட்டன் சூதாட்டத்தை நடத்தும் பெரும் முதலாளிகள் மாதந்தோறும் தலா ரூ.5 லட்சம் வரை ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் மாமூல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

police
police

இதனால்தான், காட்டன் சூதாட்டம் குறித்து புகார் தெரிவிக்கும் நபர்களைக் குடியாத்தம் காவல் துறையினரே எச்சரித்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.

காட்டன் நம்பர் எழுதும் ஏஜென்ட் ஒருவர் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தில் 3 நம்பர் காட்டன்தான் `மாஸ்’ காட்டுகிறது. 6 நம்பர் கொண்ட சீரியலில் கடைசி மூன்று நம்பரை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, 60 ரூபாய் கொடுத்து 555 என்ற எண்ணை எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

Mobile app
Mobile app

குலுக்கலில் 555 என்ற எண் வந்துவிட்டால், ரூ.35,000 கிடைக்கும். தவிர, 55 என்று இரண்டு நம்பர் மட்டும் வந்தால் 1,000 ரூபாயும், ஒரே நம்பராக 5 மட்டும் வந்தால் 100 ரூபாயும் கொடுப்போம். இதில் 10 சதவிகித கமிஷன் தொகையைப் பிடித்துக்கொண்டு மீதியைத்தான் கொடுப்போம். குலுக்கலில் 5 என்ற நம்பர் வரவில்லையென்றால் கொடுத்த காசு திரும்பக் கிடைக்காது. 

குடியாத்தத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வரை காட்டன் சூதாட்டத்தில் வசூலாகிறது. அங்கு, 200-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் புரளுகிறது. 60 ரூபாய் கொடுத்து காட்டன் நம்பரை எழுதினால் ஏஜென்டுகளாகிய எங்களுக்கு, அதில் 3 ரூபாய் கமிஷன் கிடைக்கும்’’ என்றார்.

DIG Kamini
DIG Kamini

வேலூர் சரக டி.ஐ.ஜி காமினியிடம் பேசினோம். ‘‘வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் நடைபெற்றால், நிச்சயமாக அது தடுக்கப்படும். காவல் நிலையங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் ‘மாமூல்’ வாங்குவதாகக் கூறப்படும் புகார் குறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.