விருதுநகர் நகராட்சியின் 5-வது வார்டு கவுன்சிலராக ஆஷா என்பவர் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், பண விவகாரம் தொடர்பாக, தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி வீடு துடைக்க பயன்படுத்தும் திரவத்தை குடித்து ஆஷா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கவுன்சிலர் ஆஷாவின் அம்மா அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளிடம் ஏலச்சீட்டு தொகை பிடித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், ஆஷா கவுன்சிலர் தேர்தலுக்கு பணம் தேவைப்பட்டதை தொடர்ந்து கையிருப்பு போக, செலவுக்கு ஏலச்சீட்டு தொகையையும் எடுத்து செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பணத்தை சரியான நேரத்தில் ஆஷாவின் தாயாரால் திருப்பிக் கொடுக்க முடியாததால் சீட்டுப்பணம் கட்டியவர்கள், கவுன்சிலர் ஆஷா வீட்டுக்கு சென்று அவர் அம்மாவையும், அவரையும் சத்தம் போட்டதாகச் சொல்கிறார்கள். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான ஆஷா, வீடு துடைக்க பயன்படுத்தப்படும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது ஆஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.